``அரசு விழா என நடந்த பொதுக்கூட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது!’’ - அ.தி.மு.க, பா.ஜ.க-வை விமர்சிக்கும் சி.பி.எம் | "The public meeting held as a state ceremony is anti-democracy!" - CPM, which is criticizing the BJP,

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (08/03/2019)

கடைசி தொடர்பு:22:35 (08/03/2019)

``அரசு விழா என நடந்த பொதுக்கூட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது!’’ - அ.தி.மு.க, பா.ஜ.க-வை விமர்சிக்கும் சி.பி.எம்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளும் அருகருகே  நடைபெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

``அரசு விழா என நடந்த பொதுக்கூட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது!’’ - அ.தி.மு.க, பா.ஜ.க-வை விமர்சிக்கும் சி.பி.எம்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழா நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளன. ஒரே நேரத்தில்இரண்டு நிகழ்ச்சிகளும் அருகருகே  நடைபெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து உள்ளிட்டவை அரசுப் பணத்தில்தான் செலவழிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அவர் எவ்வாறு தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனக் கேள்வி எழுந்துள்ளது.  

மோடி பங்கேற்ற அரசு விழா

 

இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாடாளுமன்றத் தேர்தல் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பிரசாரப் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்ட அரசு விழா மற்றும் அதன் அருகே, தேர்தல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள்  பங்கேற்றனர். இதற்காகப் பிரதமர் வழக்கம்போல தனி விமானத்தில் வந்ததோடு, அவருக்கான பாதுகாப்புப் பணியில் பல ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. 

பாலகிருஷ்ணன்

அதேபோன்று, மார்ச் 1-ம் தேதியன்று கன்னியாகுமரியிலும் இதுபோன்ற அரசு விழாவுடன், பி.ஜே.பி பிரசார பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைக் காரணம் காட்டி கட்சி பொதுக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. தமிழகத்தில் கஜா புயலால் மக்கள் சிக்கித் தவித்தபோது வராத பிரதமர், அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டத்தை நடத்துவது எந்த வகையில் நியாயம்? பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை, தனியாகக் கூட்டங்களை நடத்தி மேற்கொள்ள வேண்டுமே தவிர, அரசு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரைப் பயன்படுத்தி மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும். இப்போக்கு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். எனவே, இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் வரம்பு மீறிய செயல்மீது உரிய நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்’’ என அதில் கூறியுள்ளார். 

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, ``இந்த விவகாரத்தில், அவர் ஒரு பிரதமர் என்ற முறையில் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்துள்ளனர். அதை, தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்ப முடியாது. ஒருவேளை, தேர்தல் தேதி அறிவித்து விதிமுறை நடைமுறைக்கு வந்தால், அப்போது அதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும். மேலும், இதில் தற்போதைக்குத் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்ப முடியாது. தமிழக அரசுதான் செலவுக் கணக்கை கேட்டறிய வேண்டும்’’ என்றார். 

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``அவர் ஒரு பிரதமர் என்ற முறையில் அரசு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்தார். அதற்கிடையே கட்சிரீதியான நிகழ்ச்சியும் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்ச்சியில், அவர் பங்கேற்றுப் பேசியுள்ளார். அரசாங்க நிகழ்ச்சிக்கு அரசு செலவிலும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குக் கட்சி ரீதியாகவும் செலவு செய்யப்பட்டுள்ளது. இது, எப்படித் தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலாக இருக்க முடியும்? இன்னும் தேர்தலே அறிவிக்காத நிலையில், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குள் வராது. வேண்டுமென்றே அரசியல் ஆக்க  வேண்டும் என்று  குற்றச்சாட்டு வைப்பதை ஏற்க முடியாது’’ என்றார். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close