போலி பில், வரி ஏய்ப்பு... இந்தியாவில் அரங்கேறும் சீன நிறுவனங்களின் மோசடிகள்! | Chinese companies plan a different strategy to launch their goods in India

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (07/04/2019)

கடைசி தொடர்பு:14:01 (07/04/2019)

போலி பில், வரி ஏய்ப்பு... இந்தியாவில் அரங்கேறும் சீன நிறுவனங்களின் மோசடிகள்!

மும்பை துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் 'பரிசு பொருள்' என்ற போர்வையில் ஏராளமான கன்டெய்னர்கள் சீனாவிலிருந்து வந்திறங்கி, இந்தியச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதையும், இந்த வரி ஏய்ப்பு மோசடி சுமார் 2 ஆண்டு காலம் நடந்து வந்ததையும் கடந்த ஜனவரி மாதம் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

லகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அங்கு சீனாவில் தயாரான பொருள்கள் `உள்ளேன் ஐயா...' என்று சொல்லும். அந்த அளவுக்கு சீனப் பொருள்கள் இன்று உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. அதிலும், இந்தியாவில் சொல்லவே வேண்டாம். ``உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக்காட்டுங்கள்" என இந்தியாவுக்கு சீனா சவால்விடுக்கும் அளவுக்கு இந்தியச் சந்தைகள் சீனப் பொருள்களால் நிரம்பி இருக்கின்றன. இந்நிலையில், இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சீன இ-காமர்ஸ் நிறுவனங்கள், விற்பனைக்காக இந்தியாவுக்கு அனுப்பும் பொருள்களுக்கு, உரிய வரியைக் கட்டாமல் தப்பிப்பதற்காக பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருவது தெரியவந்துள்ளது. 

சீனா பஜார்

`பரிசுப் பொருள்' பெயரில் வரி ஏய்ப்பு! 

குண்டூசி முதல் சோலார் பேனல் வரை உலகம் முழுவதும் தங்கள் தயாரிப்புப் பொருள்களை அனுப்பிவருகின்றன சீன நிறுவனங்கள். இதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் புகார் தெரிவித்துவருகின்றன. இதில், அமெரிக்கா மட்டும் சீன இறக்குமதிக்கு `செக்' வைக்கும்விதமாக, அந்த நாட்டுப் பொருள்கள் மீதான வரியை பலமடங்கு கடந்த ஆண்டு அதிகரித்த நிலையில், இதனால் அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இந்தியாவிலோ, நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லை என்பதால், சீனப் பொருள்களின் இறக்குமதியைத் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. 

`அலிபாபா' போன்ற சீன ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும், சீனப் பொருள்களை நேரடியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சீன விற்பனையாளர்களும் இந்தியாவில் தங்கள் பொருள்களுக்கான விற்பனை வரியைக் கட்டாமல் தப்பிப்பதற்காக, தாங்கள் அனுப்பும் பொருள்களை `பரிசுப் பொருள்'  என்ற போர்வையில் அனுப்பி, அதற்கான வரி விலக்கிலிருந்து தப்பி மோசடியில் ஈடுபட்டுவந்தனர். தற்போதைய விதிப்படி, 5,000 ரூபாய் வரையிலான பரிசுப் பொருளை, சொந்த பயன்பாட்டுக்காக வெளிநாட்டிலிருந்து வாங்கினால் அதற்கு சுங்கவரி செலுத்தவேண்டியதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீன நிறுவனங்கள், அந்தப் பொருள்களை `பரிசுப் பொருள்' என்ற பெயரிலேயே கன்டெய்னர்களில் அனுப்பிவந்தன. இதனால், மத்திய அரசுக்கு  வரவேண்டிய வரி வருவாய் வரவில்லை.  கூடவே, இந்தப் பொருள்கள் விலை மலிவாக இந்தியச் சந்தைகளில் கிடைப்பதால், அவற்றுடன் இந்தியத் தயாரிப்பாளர்கள் போட்டிபோட முடியாத நிலை ஏற்பட்டு, பல சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவானது. 

கன்டெய்னர்கள்

இதுகுறித்த பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பிறகுதான், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போதுதான் மும்பை துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் `பரிசுப் பொருள்' என்ற போர்வையில் ஏராளமான கன்டெய்னர்கள் வந்து இறங்கி, இந்தியச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதையும், இந்த மோசடி சுமார் 2 ஆண்டுக்காலம் நடந்து வந்ததையும் கடந்த ஜனவரி மாதம் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன் பிறகே, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு, இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

பில்லில் மோசடி 

`பரிசுப் பொருள்' மோசடி உத்தி அம்பலமாகிவிட்டதைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் தற்போது இன்னொரு மோசடியை அரங்கேற்றிவருவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கான விலையை, அதற்கான பில்லில் மிகவும் குறைத்து காண்பித்து மோசடியில் ஈடுபட்டுவருகின்றன. உதாரணமாக, இந்தியாவுக்கு அனுப்பப்படும் ஒரு பொருளின் சந்தைமதிப்பு 1,000 ரூபாய் என்றால், அதன் விலையை `இன்வாய்ஸ்' (invoice) எனப்படும் பில்லில் ஏறக்குறைய 50 சதவிகிதத்துக்கும் குறைவாகக் குறிப்பிட்டு, தாங்கள் செலுத்தவேண்டிய வரியைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக் கட்டுவது என்ற தந்திரத்தை சீன நிறுவனங்கள் கையாள்கின்றன. 

குறிப்பாக, சீன ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள்தான் இந்த மோசடிகளை அதிக அளவில் அரங்கேற்றிவருவதாகத் தெரியவந்துள்ளது. கூரியரில் அனுப்பப்படும் பொருளுக்கான பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கும், அதே பொருளுக்கு சம்பந்தப்பட்ட சீன ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கும் 50 சதவிகிதத்துக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக கலால் வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

`CBE-13' எனப்படும் கூரியர் பில் என்ட்ரி முறையில் 1 லட்சம் ரூபாய் மதிப்புக்குக் குறைவான பொருளை வெளிநாட்டிலிருந்து கூரியர் மூலம் வரவழைக்கலாம். இந்த முறையில் இந்தியாவுக்கு பொருள்களை அனுப்பும் க்ளப் ஃபேக்டரி, அலி எக்ஸ்பிரஸ் போன்ற சீனாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள், பொருள்களின் உண்மையான விலையை பில்லில் குறிப்பிடாமல், மிகவும் குறைத்துக் குறிப்பிட்டு, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுவருகின்றன. இதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வரும் பார்சல்களை ஆராயுமாறு தபால் அலுவலகங்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பில்லில் மோசடி

``சீன இ-காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்து வரும் சரக்குகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்ததில், அவற்றின் உண்மையான சந்தைவிலையிலும், பில்லில் குறிப்பிடப்படும் விலையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் சுங்கவரியைக் குறைத்துக் கட்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற வர்த்தகப் பொருள்கள் வேறு எந்தெந்த வழிகளிலெல்லாம் இந்தியாவுக்கு வருகின்றன என்பதைக் கண்டறிந்து, அது தொடர்பான வரி மோசடியைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" எனச் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தாங்கள் வரி ஏய்ப்பு அல்லது மோசடி எதிலும் ஈடுபடவில்லை என்றும், வரி தொடர்பான விஷயங்களில் உள்ளூர் சட்ட விதிகளைப் பின்பற்றுமாறு தங்களது பொருள்களை விற்கும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சீன இ-காமர்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும், அதிகாரிகள் சீனப் பொருள்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதும்  மிகவும் அவசியம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்