சாதுரிய விளம்பரங்கள்... `சௌக்கிதார்' கோஷம்... சாத்தியமாகுமா மோடியின் வெற்றி?   | Will the 'Chowkidar' campaign cost BJP the elections?

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (09/04/2019)

கடைசி தொடர்பு:14:53 (09/04/2019)

சாதுரிய விளம்பரங்கள்... `சௌக்கிதார்' கோஷம்... சாத்தியமாகுமா மோடியின் வெற்றி?  

நேரடியான பொதுக் கூட்ட பிரசாரங்கள், தொலைக்காட்சி மூலமான பிரசாரத்துக்கு என நமோ டிவி, வாக்காளர்களை நவீன முறையில் தொடர்பு கொள்வதற்கென உருவாக்கப்பட்ட மோடி ஆப் எனப் பாரம்பர்ய பிரசார முறைகள் முதல் நவீன பிரசார முறைகள் வரை அத்தனையையும் கையிலெடுத்துள்ளது பா.ஜ.க. 'மோடி ஆப்'பை மட்டும் சுமார் 1 கோடி பேர் டவுன்லோடு செய்திருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக சமூக வலைதளங்களும் இணையதளங்களும் நாடு முழுவதும் தங்கள் பிரசாரம் மக்களிடம் சென்று சேர மிகவும் உதவியாக இருப்பதாகவும் கூறுகின்றனர் அக்கட்சியின் பிரசார நிர்வாகிகள்.

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அந்த வெற்றிக்கு  'மோடி பிராண்டை'த் திறமையாக மார்க்கெட்டிங் செய்த பா.ஜ.க-வின் பிரசாரக் குழுவின் நிர்வாகிகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கும். அந்த அளவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலைப் போன்றே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்  தொடங்கி தொலைக்காட்சி வரை மோடியை முன்னிறுத்தி சாதுரியமான விளம்பரங்களைச் செய்து வருகிறது அந்தக் குழு. இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி  இறைக்கிறது பா.ஜ.க. 

மோடி பிராண்ட்

ஆட்சியைப் பிடிக்க உதவிய கோஷங்கள்

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மோடி தொடங்கியபோது, அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தார். பிரசார தொடக்கத்தில், இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேசத் தொடங்கிய அவர், பிரசார முடிவில் தனது மார்க்கெட்டிங் டீம் வல்லுநர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைபடி, தாம் ஆட்சிக்கு வந்தால் இந்திய மக்களுக்கு 'நல்ல நாள் (அச்சே தின்) வரும்' என்ற கோஷத்தை முன் வைத்தார். இது, அப்போதைய மன்மோகன் சிங் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அதிருப்தியில் இருந்த மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.  

அடுத்ததாக 'ஆப் கி பார் மோடி சர்க்கார்' (இந்த முறை மோடி அரசு) என்ற கோஷமும் மக்களிடம் வெற்றிகரமாகச் சென்றடைந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மீறி எதுவும் செய்ய முடியாத பலவீனமான பிரதமராக உள்ளார் என்ற பேச்சு பரவலாக இருந்த நிலையில், தேசம் ஒரு வலிமையான தலைவரை எதிர்நோக்கி இருந்த தருணம் என்பதால், இந்தக் கோஷத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இவையெல்லாவற்றையும்விட  மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் ஒருசேர பெற்றுக் கொடுத்ததுதான், நான் ஒரு 'சாய்வாலா' (தேநீர் விற்றவர்) என்ற பிரசாரம். பிரதமர் மோடி தன்னுடைய இளமைப் பருவத்தில் சிறிது காலம் தேநீர் விற்றதைச் சொல்லி, தன்னை ஒரு எளிமையான சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபராகக் காட்டி பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னரும்கூட, தன் மீது எதிர்க்கட்சிகள் விமர்சன கணைகளைத் தொடுக்கும் போதெல்லாம், தான் தேநீர் விற்ற ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான், ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, தான் பிரதமர் பதவியில் இருப்பது பிடிக்கவில்லை என்றெல்லாம் உருக்கமாகப் பேசி வந்தார் மோடி. 

அசரடித்த விளம்பர கோஷங்கள்...

'சாய்வாலா' இப்போது 'சௌக்கிதார்' 

இந்த நிலையில்தான் 2019-ம் ஆண்டு தேர்தலுக்காக 'சாய்வாலா' கோஷத்திலிருந்து 'நானும் காவல்காரன்தான்' எனப் பொருள்படும் 'மெய்ன் பி சௌக்கிதார்' என்ற கோஷத்துக்கு மாறியுள்ளார் மோடி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் தனது ட்விட்டர் வலைதளத்தில், தன் பெயருக்கு முன்னால் 'சௌக்கிதார்' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொண்டதும், அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மோடி ஆதரவாளர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் 'சௌக்கிதார்' என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டனர். மோடியின் ட்விட்டர் பக்கத்தை சுமார் 4.7 கோடி பேர் பின் தொடர்வதால், 'சௌக்கிதார்' கோஷம் ஏறக்குறைய ஒரு வார காலத்துக்கும் மேல் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியது. 

``இப்போதைய தேர்தல் முற்றிலும் பிரபலப்படுத்துவதைச் சார்ந்தே இருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமான பிரசாரத்தைக் காட்டிலும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பிரசாரங்கள்தான் மக்களை வேகமாகச் சென்றடைகிறது. அந்த வகையில் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள இந்த 'செளக்கிதார்' பிரசாரம் வாக்காளர்களிடையே ஒரு நல்ல கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியைத் தேடித் தரும். இது, மோடியின் சரியான பிரசார அணுகுண்டு. இதற்கு ஈடாக எதிர்க்கட்சிகள் இன்னொரு பிரபல கோஷத்தைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும்" என்கிறார்கள் கட்சியிலுள்ள மோடி விசுவாசிகள். 

இத்தனைக்கும் மோடி இந்த முறை 'சௌக்கிதார்' கோஷத்தை முன் வைத்ததற்குக் காரணமே, ரஃபேல் விமான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சௌக்கிதார் சோர் ஹை' (இந்தத் தேசத்தின் காவலாளி ஒரு திருடன்) என்று மேற்கொண்ட பிரசாரத்துக்குப் பதிலடியாகத்தான். இப்படி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அல்லது தாக்குதலுக்கான பதிலடியையே தங்களுக்கான பிரசார யுக்தியாக மாற்றிக்கொண்டது பா.ஜ.க-வின் சாதுரியம் என்றே சொல்லலாம். 

செளக்கிதார் அவதாரம்

சகல ஊடகங்களிலும் சாதுரிய விளம்பரங்கள்

இதுபோக நேரடியான பொதுக் கூட்ட பிரசாரங்கள், தொலைக்காட்சி மூலமான பிரசாரத்துக்கு என `நமோ’ டிவி, வாக்காளர்களை நவீன முறையில் தொடர்பு கொள்வதற்கென உருவாக்கப்பட்ட  `மோடி ஆப்’ எனப் பாரம்பர்ய பிரசார முறைகள் முதல், நவீன பிரசார முறைகள் வரை அத்தனையையும் கையிலெடுத்துள்ளது பா.ஜ.க. 'மோடி ஆப்'பை மட்டும் சுமார் 1 கோடி பேர் `டவுன்லோடு’ செய்திருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக சமூக வலைதளங்களும் இணையதளங்களும் நாடு முழுவதும் தங்கள் பிரசாரம் மக்களிடம் சென்று சேர மிகவும் உதவியாக இருப்பதாகவும் கூறுகின்றனர் அக்கட்சியின் பிரசார நிர்வாகிகள். 

மோடியையும் பா.ஜ.க-வையும் ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5.75 கோடி. இது காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைவிட நான்கு மடங்கு அதிகம். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு அடுத்தபடியாக ட்விட்டரில் மிக அதிக ஃபாலோயர்களைக் கொண்ட அரசியல்வாதிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் மோடி. 

தற்போது தேர்தல் பிரசாரம் உச்சத்தில் உள்ள நிலையில், தனது தேர்தல் பிரசார கூட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2,50,000 பேரை மோடி நேரடியாகச் சந்திப்பதாக பா.ஜ.க கூறுகிறது. இதுபோக மோடியின் தேர்தல் பிரசாரம் நமோ டிவி, தூர்தர்ஷன் மற்றும் தனியார் செய்தி சேனல்கள் என ஏராளமான தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. 

மேலும் கூகுள் போன்ற இணையதளங்கள் வாயிலாக அரசியல் விளம்பரங்களைச் செய்வதிலும் பா.ஜ.க முன்னணியில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்திய அரசியல் கட்சிகள் கூகுள் தளத்தில் செய்யும் விளம்பரங்களில் 32 சதவிகிதம் பா.ஜ.க-வுக்கானது என்றும், காங்கிரஸ் கட்சி இதில் 1.14 சதவிகித பங்களிப்புடன் ஆறாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

மோடி ஆப்

திருப்பி அடிக்கும் எதிர்க்கட்சிகள் 

இப்படி, 2014-ம் ஆண்டு தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலிலும் பிரசார களத்தில் பா.ஜ.க முன்னணியில் உள்ளபோதிலும், கடந்த முறை போன்று அல்லாமல் இந்தமுறை எதிர்க்கட்சிகளின் பதிலடியும் கடுமையாக இருக்கிறது. அதிலும், 'சௌக்கிதார்' பிரசாரத்துக்கான பதிலடியில், ``புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலை இந்தக் காவலாளி (மோடி) ஏன் தடுக்கவில்லை, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி போன்ற வங்கி மோசடியாளர்களை இந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல காவலாளி எப்படி அனுமதித்தார்?" என மோடியைக் கொத்திக் குதறி எடுத்துவிட்டன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். 

மேலும், குஜராத் பா.ஜ.க தலைவரின் மகன் சமீபத்தில் தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டதைக் குறிப்பிட்டு, 'சௌக்கிதார் சோர் ஹை' (காவலாளியே... இதோ திருடன்) என்ற வாசகத்தை இணையதளத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பரப்பிவிட்டது. 

"பா.ஜ.க-வின் தேர்தல் பிரசார கோஷங்கள், சில சமயங்களில் தவறான நேரத்தில் வெளியிடப்பட்டு, அதன் விளைவுகள் அக்கட்சிக்கு எதிராகப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் தற்போது 'காவலாளி' கோஷமும் அக்கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இதற்கு முன்னர் 2004-ம் ஆண்டு தேர்தலின்போதும், 'இந்தியா ஒளிர்கிறது' (India shining) என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. ஆனால், தேர்தலுக்கு வெகு நாள்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. ஆனால், அளவுக்கு அதிகமாக அந்த விளம்பரம் மக்களைச் சென்றடைந்ததால், அதுவே பா.ஜ.க-வுக்கு எதிர்மறையாக அமைந்து, தேர்தலில் அக்கட்சித் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. 

மேலும், அந்த விளம்பரம் இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதை மையப்படுத்தி இருந்ததே தவிர, சாமான்ய மக்களுக்கு என்ன பயன் என்பது குறித்து அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ``இந்தியா ஒளிர்வதிலிருந்து சாமான்ய மக்களுக்கு ஏதேனும் கிடைக்குமா?" என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரமும் பா.ஜ.க-வுக்குப் பாதகமாக அமைந்தது" என்கிறார், 'இந்தியா ஒளிர்கிறது' விளம்பர தயாரிப்புக் குழுவிலிருந்த  விளம்பர தயாரிப்பு நிபுணர் சுதன். 

ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகத் தலைவரான அங்கித் லால், "2014-ம் ஆண்டு தேர்தலில் மோடிக்குக் கைகொடுத்த 'சாய்வாலா' பிரசாரத்தைப் போன்று இந்த முறை 'செளக்கிதார்' பிரசாரம் கை கொடுக்காது. இதை இன்னும் ஆழமாக உற்று நோக்கினால், நாட்டைப் பாதிக்கக்கூடிய உண்மையான பிரச்னைகளின் மீதான கவனத்தைத் திசை திருப்பும் யுக்தியாகவே பிரதமரின் இந்த 'செளக்கிதார்' பிரசாரத்தை நாங்கள் பார்க்கிறோம். நாட்டின் உண்மையான பிரச்னைகளான பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளைப் பற்றியெல்லாம் பா.ஜ.க-வோ, மோடியோ பேசுவதே இல்லை" என்கிறார். 

ராகுல் பதிலடி

இந்த முறை எடுபடுமா? 

ஆனால், பாஜக-வோ, ``எதிர்க்கட்சிகளின் எதிர்மறை பிரசாரத்தின் விளைவாக, அதிலிருந்தே எடுத்துக்கொள்ளப்பட்டதுதான் 'காவலாளி' பிரசாரம். 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல்வேறு பிரச்னைகள் மற்றும் அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்காக  'பெண் குழந்தைகளைக் காப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம்', 'தூய்மை இந்தியா திட்டம்', 'டிஜிட்டல் இந்தியா', 'மேக் இன் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா' என ஏராளமான கோஷங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" எனக் கூறுகிறது. 

அதே சமயம் எதிர்க்கட்சிகளோ, மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு விளம்பரத்துக்காக வீணடித்தது" எனக் குற்றம் சாட்டுகின்றன. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2018 டிசம்பர் வரை தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் விளம்பரத்துக்காக மத்திய அரசு 5,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. 

தற்போதைய தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் விளம்பரத்தை உருவாக்கவும், அவற்றைச் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கொண்டு செல்வதற்காகவும் சுமார் 25 விளம்பர ஏஜென்சிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த அணிக்கான தேர்தல் பிரசார செலவாக சுமார் 2,500 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால்,  அளவுக்கு அதிகமாகச் செய்யப்படும் விளம்பரம், 2004-ம் ஆண்டைப் போன்று பா.ஜ.க-வுக்கு எதிர்மறையாகத் திரும்பிவிடவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறார்கள் விளம்பரத்துறை நிபுணர்கள். 

இருப்பினும், மிஸ்டர் பொது ஜனம் என்ன தீர்ப்பு எழுதப்போகிறாரோ பார்க்கலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்