ஆம்னி பேருந்துகளின் தேர்தல் நேர வசூல் வேட்டை! #VikatanInfographics | Omni buses collect more money from passengers during election time

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (17/04/2019)

கடைசி தொடர்பு:11:46 (17/04/2019)

ஆம்னி பேருந்துகளின் தேர்தல் நேர வசூல் வேட்டை! #VikatanInfographics

சாதாரண நாள்களில் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ. 600-லிருந்து கட்டணம் ஆரம்பிக்கும். ஆனால், தற்போது ரூ.2,000-த்தைத் தாண்டியுள்ளது வேதனையளிக்கிறது.

ஆம்னி பேருந்துகளின் தேர்தல் நேர வசூல் வேட்டை! #VikatanInfographics

ற்போது நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்காகவும், அதைத் தொடர்ந்து புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை போன்ற தொடர் விடுமுறை காரணமாகவும் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எப்படியும் பயணம் செய்துதானே ஆக வேண்டும் என்ற சூழலில், பயணிகளின் இந்த அவசர அவசியத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகள், தங்களின் கட்டணத்தை மும்மடங்குவரை உயர்த்தியுள்ளன. தேர்தல் நேரம் என்பதோடு விடுமுறை நாள்களும் சேர்ந்துள்ளதால், இந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது போன்று, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இஷ்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள் வெளியூர் செல்லும் பயணிகள். 

 ஆம்னி

சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு சாதாரண நாள்களில் செல்ல வேண்டுமானால் பொதுவாக ரூ. 600-லிருந்து தொடங்கும் கட்டணம் ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். ஆனால், ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி ரூ.2000 மற்றும் அதற்கும் மேல் வசூலிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் திடீர் கட்டண உயர்வு வேதனையளிக்கிறது என்கிறார்கள் பயணிகள். 'இந்தளவு கட்டணத்தைச் செலுத்தி ஊருக்குச் சென்று வாக்களிப்பதைவிட, இங்கேயே இருந்துவிடலாம்' என்று வெளிமாவட்ட இளைஞர் ஒருவர் கூறுகிறார். சாதாரணமாகச் சென்னையிலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்தில் 440 ரூபாய் மட்டுமே கட்டணம். ஆனால், ஆம்னி பேருந்தில் ரூ. 1,390 முதல் ரூ. 1,600 வரை, அதாவது வழக்கமான கட்டணத்தைவிடவும் மும்மடங்கு அளவுக்கு வசூலிக்கப்படுகிறது. எட்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்வோர் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், சொகுசுப் பயணம் செய்வதற்காகவும் ஆம்னி பேருந்துகளையே அதிகமாக நாட வேண்டிய நிலை உள்ளது. அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி அவ்வளவு தொலைவுக்கு யாரும் அன்பழகன்பயணம் செய்ய விரும்புவதில்லை. 

தேர்தல் நேரக் கட்டண உயர்வு தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் அன்பழகனிடம் பேசியபோது, "ஏ.சி ஸ்லீப்பர் பேருந்தில் குறைந்தபட்சம் 700 ரூபாய் என்றும், அதிகபட்சம் 1,600 ரூபாய் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கட்டண உயர்வு இருக்கும். விழா நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படிதான் கட்டணத்தை உயர்த்துகிறோம். அதிகமாகக் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. அதாவது, சாதாரண நாள்களில் விமானக் கட்டணம், சென்னையிலிருந்து டெல்லிக்கு 3,000 ரூபாயில் தொடங்குகிறது. அதுவே முக்கியமான தினங்கள் எனில் 18,000 ரூபாய்வரை உயர்த்தப்படுகிறது. அதேபோன்றுதான் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. என்றாலும், சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கும் அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பவர்கள் பற்றிய புகார்களை, `1800-425-6151' என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். அதிகக் கட்டணம் வசூலிப்பது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்றார். 

புகார் தெரிவிக்க

ஆம்னி பேருந்துகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய பல்வேறு இணையதளங்கள் இருக்கின்றன. அதன்படி, நாம் தேடி எடுத்த கட்டண விவரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணங்களும் பேருந்து புறப்படும் நேரமும் மாறுதலுக்கு  உட்பட்டும் இருக்கலாம்.

சென்னை - கோயம்புத்தூர் பேருந்து கட்டணம்

சென்னை - கன்னியாகுமரி பேருந்து கட்டணம்

சென்னை - மதுரை பேருந்து கட்டணம்

சென்னை - திருச்செந்தூர் பேருந்து கட்டணம்

தேர்தலை முன்னிட்டும் விடுமுறையைக் கருத்தில் கொண்டும், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்குச் செல்ல, இரண்டு நாள்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதனால், கடைசி நேரத்தில் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவோர், வேறு வழியின்றி தனியார் ஆம்னி பேருந்துகளையே நாட வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளர்கள், தாங்கள் நிர்ணயித்ததுதான் கட்டணம் என்ற அடிப்படையில் கொள்ளையடிக்கிறார்கள். இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டுமானால் இதுபோன்ற நாள்களில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது இயக்கப்படுவது போன்று அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும், அரசுப் பேருந்துகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க, இனிவரும் காலங்களிலாவது போக்குவரத்துத்துறை மற்றும் மாநில அரசு இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அதுபோன்ற பயணிகள் மற்றும் அனைத்துதரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோன்று நடவடிக்கை எடுப்பார்களா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்