கலிபோர்னியா பாதாம் பருப்பு... காஷ்மீர் தீவிரவாதிகள்... பாகிஸ்தானுடனான வர்த்தகத் தடையின் பின்னணி! | California almonds at the heart of illegal LoC trade

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (20/04/2019)

கடைசி தொடர்பு:16:06 (20/04/2019)

கலிபோர்னியா பாதாம் பருப்பு... காஷ்மீர் தீவிரவாதிகள்... பாகிஸ்தானுடனான வர்த்தகத் தடையின் பின்னணி!

எல்லை தாண்டிய வர்த்தகத்தை, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன. இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் பகுதிக்குள் கடத்தி வரப்படுகின்றன என்று விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்வதற்காக பாகிஸ்தான் வியாபாரிகள்,  இந்தியா உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்தைப் பயன்படுத்தி வந்ததும், இதில் கலிபோர்னியா பாதாம் பருப்பு வர்த்தகத்துக்கு முக்கிய பங்களிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எல்லை தாண்டிய வர்த்தகம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வழியாக பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கென்று வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த வர்த்தகம் வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறும். 

காஷ்மீர் எல்லையில் எல்லை தாண்டிய வர்த்தகம்

கடந்த 2016-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. அப்போது பாதுகாப்பு படையினர் மீது வன்முறையாளர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதல், பல நாள்கள் நீடித்தன. எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவு வன்முறையாளர்கள் கும்பலாகத் திரண்டு வந்ததாகவும், தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றவும் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி செய்யப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (National Investigation Agency - NIA) நடத்திய விசாரணையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வழியாகவும், சுடிதார் உடைகள் மூலமாகவும் ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவந்தது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி கிடைப்பதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், இந்த விசாரணையில் கிடைத்த தகவல் அதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து 2016-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்தது. பின்னர் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

போதைப் பொருள்கள், கள்ள ரூபாய் நோட்டுகள் 

இதனிடையே, காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

 தேசிய புலனாய்வு முகமை

எனினும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, இரு நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருள்களுக்கான வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பி.எஸ்.எஃப் வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பூஞ்ச்- ராவலாகோட் பகுதிகளுக்கிடையே நடைபெற்று வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானுடனான வர்த்தகமும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைதாண்டிய வர்த்தகம் தொடங்கியது. 

இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  `எல்லை தாண்டிய வர்த்தகத்தின் மூலம், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன. இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்படுகின்றன என்று விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பயங்கரவாதிகளுக்கு உதவும் பாதாம் பருப்பு வர்த்தகம்

கடந்த காலங்களிலும் இதுபோன்று பல முறை தடை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றாலும், இந்த முறை மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டதற்கு, விசாரணை ஏஜென்சிகள் அளித்த மிக முக்கியமான தகவல்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதாவது, எல்லை தாண்டிய வர்த்தகத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருள்களில் கலிபோர்னியா பாதாம் பருப்புக்கு முக்கிய பங்கு இருப்பதும், பாகிஸ்தான் வியாபாரிகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த பாதாம் பருப்பு வர்த்தகம் மூலம், காஷ்மீர் தீவிரவாதிகளுக்குப் பண பட்டுவாடா நடப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

பாதாம் பருப்பு வர்த்தகம்

உலகிலேயே பாதாம் அதிக அளவில் உற்பத்தி செய்யும் இடம் கலிபோர்னியாதான். உலக பாதாம் உற்பத்தியில் 81 சதவிகிதம் கலிபோர்னியாவில்தான் செய்யப்படுகிறது. மேலும் கலிபோர்னியா பாதாம் பருப்புக்கு உலக அளவில் நல்ல கிராக்கி இருக்கிறது. கலிபோர்னியா பாதாம் உற்பத்தியாளர்கள் பெருமளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் 5 இடங்களில் இந்தியா உள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவில் பாதாம் பருப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு, பாதாம், முந்திரி போன்ற `நட்ஸ்' வகைகளுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பை உருவாக்கி உள்ளது. 

பணப் பட்டுவாடா நடப்பது எப்படி? 

இதை நன்கு தெரிந்துகொண்ட பாகிஸ்தான் வியாபாரிகள், எல்லை தாண்டிய வர்த்தகம் மூலம் பெருமளவிலான கலிபோர்னியா பாதாம் பருப்பை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர். அதே சமயம் இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளுக்குப் பண உதவி செய்ய விரும்பும் பாகிஸ்தானிய நபர்கள், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படக்கூடிய பாகிஸ்தானிய வர்த்தக நிறுவனங்களை முதலில் கண்டறிகின்றனர். பின்னர் அவர்களிடம், இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை அளிக்கின்றனர். அதைப் பெற்றுக் கொள்ளும் பாகிஸ்தானிய வர்த்தக நிறுவனங்கள், தாங்கள் வாங்கும் பணத்துக்கு ஈடான பாதாம் பருப்பு மூட்டைகளை, தங்களைப் போன்றே தீவிரவாதிகளுக்கு உதவ விரும்பும் காஷ்மீரிலுள்ள வியாபாரிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் அந்தச் சரக்குக்கு, அதன் உண்மையான விலையைக் காட்டிலும் மிகவும் குறைவாக குறிப்பிட்டு ( under invoice) போலி பில்களைத் தயாரித்து,  அவற்றை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.

காஷ்மீரில் அந்தப் பாதாம் சரக்கு மூட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் வியாபாரி, அதைச் சந்தையில் நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு, தனக்கான குறிப்பிட்ட கமிஷன் போக மீதமிருக்கும் கூடுதல் தொகை அனைத்தையும், காஷ்மீரிலுள்ள தீவிரவாத குழுக்கள், சமூக விரோத கும்பல்கள் வசம் கொடுத்து விடுகின்றனர். 

பிரிவினைவாத குழுக்கள்

இந்த விஷயம் விசாரணையில் தெரியவந்ததையடுத்தே என்ஐஏ அதிகாரிகள், எல்லை தாண்டிய வர்த்தக சங்கத் ( LoC Traders Association) தலைவர் ஜாகூ அகமத் வதாலியை அண்மையில் கைது செய்தனர். இவர், காஷ்மீரிலுள்ள பல்வேறு தீவிரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் இவரது கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளனர். 

`எல்லை தாண்டிய வர்த்தகச் சங்கத்தைப் போன்றே பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு வர்த்தகச் சங்கங்களும், நிறுவனங்களும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்படுபவை. இவர்களில் பலர் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவியவர்கள். இவர்கள்தாம் காஷ்மீரில் உள்ள தங்களின் உறவினர்கள் மூலம் வர்த்தகப் போர்வையில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்’ என்று என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் கட்சிகள் சொல்வது என்ன? 

இந்த நிலையில், இந்த எல்லை தாண்டிய வர்த்தகத்தைத் தடை செய்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி, காஷ்மீரை அரசியல் நலனுக்காக பா.ஜ.க பலிகடா ஆக்குவதாகக் கூறியுள்ளார். அதேபோல, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா, `வாஜ்பாய் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வோர் அமைதி முயற்சியையும் தற்போதைய மத்திய அரசு நிராகரிக்கிறது’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

மெகபூபா முப்தி

மேற்கூறிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்னரே, எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கான தடை இனிமேல் நீக்கப்படும் என்பதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்