ஒரு செல்ஃபி, ஒரு ஸ்டேடஸ், ஒரு ஓட்டு…முடிந்ததா ஜனநாயகக் கடமை?! | Is voting only a democratic responsibility

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (21/04/2019)

கடைசி தொடர்பு:09:42 (21/04/2019)

ஒரு செல்ஃபி, ஒரு ஸ்டேடஸ், ஒரு ஓட்டு…முடிந்ததா ஜனநாயகக் கடமை?!

ஒரு செல்ஃபி, ஒரு ஸ்டேடஸ், ஒரு ஓட்டு…முடிந்ததா ஜனநாயகக் கடமை?!

மிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்துவந்த தேர்தல் பிரசாரப் பரபரப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, நடந்து முடிந்த தேர்தலில் வழக்கம்போல வாக்குப்பதிவானது திக்கித்திணறி 70 சதவிகிதத்தை எட்டிப்பிடித்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் 30 சதவிகித மக்கள் தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ளாதது வேதனை அளிக்கக்கூடிய செயலாகத்தான் உள்ளது. பதிவாகாத  இந்த 30 சதவிகித வாக்குகளும் பதிவாகும்பட்சத்தில் தேர்தல் முடிவுகளில்கூட சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

தேர்தலில் வாக்களித்த மக்கள்

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவிகிதம் குறைந்து வருவது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் தேர்தலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் தங்கள் கைவிரலில் வாக்களித்தற்கான மையோடும் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே ஆற்றிவிட்டதாகவும் பகிர்ந்துவரும் புகைப்படங்கள்தாம் அதிகம் பரவிக் கிடக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவிடுவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயகக் கடமையா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், உண்மையில் ஜனநாயகக் கடமை என்பது தேர்தலில் வாக்களிப்பதோடு முடிந்து விடுகிறதா என்று சிலர் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்ற மாபெரும் துணைக்கண்டம் என்பது பல்லாயிரக்கணக்கான கிராமங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான கிராமங்களின் அடிப்படைப் பிரச்னை என்பது குடிநீர்த் தேவை, கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சாலைவசதி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவையே ஆகும். இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை நோக்கி விவாதிக்கக் கூடிய இடங்களாக இருப்பவை அந்தந்த ஊர்களில் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களே. தற்போதைய சூழலில் ஒருசில அரசியல் கட்சிகள் இவற்றைத் தங்களின் தேர்தல் பிரசார உத்தியாகக் கையாண்டனவே தவிர, உண்மையான கிராமசபைக் கூட்டங்கள் எதுவும் முறைப்படி நடைபெறுவதில்லை. அப்படி நடைபெற்றாலும் அவற்றில் அரசியல் கட்சிகளின் சார்பற்ற பொதுமக்கள் பெரும்பாலும் பங்கெடுப்பதில்லை.

ஜெயராம் அறப்போர் இயக்கம்

இதுகுறித்து பேசிய அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஜெயராம் வெங்கடேசன், ``தேர்தலில் வாக்களித்தது என்பது அடிப்படை  ஜனநாயகத்தின் தொடக்கமாக இருக்கலாமேஒழிய அவற்றால் மட்டுமே ஒரு நாட்டின் முழுமையான ஜனநாயகத்தைக் கட்டமைத்துவிட முடியாது. மக்களின் பங்களிப்பு இல்லாத ஜனநாயகம் என்பது செயல்படாமல் தேக்கநிலையைத்தான் அடையும்.

இந்த ஜனநாயகம் செயல்வடிவம்பெற வேண்டுமானால் தேர்தலுக்குப் பிறகான ஆட்சிக்காலத்தில் அரசின் நிர்வாகங்களில் ஏற்படும் சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் தங்களின் குரல்களை உயர்த்த வேண்டியது அவசியம். அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் இந்த ஜனநாயகம் நல்ல பிரதிநிதிகளை உருவாக்கவில்லை எனச் சொல்வது எந்தவகையில் நியாயம்?

வீட்டைவிட்டு வெளியே வந்தாலே மனிதவாழ்வில் அரசியல் ஆரம்பமாகி விடுகின்றது. மக்களே முயற்சி செய்தாலும் அவற்றிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள முடியாது. வீட்டுக்கு வெளியே உள்ள சாலைகள் ஏன் பள்ளமாக உள்ளன. நாம் வசிக்கும் தெருவில் ஏன் கழிவுநீர்க் கால்வாய்கள் முறைப்படி அமைக்கப்படவில்லை. போன்ற அடிப்படைக் கேள்விகளையாவது, அதிகாரத்தின்மீது மக்கள் தொடர்ந்து எழுப்பவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் செயல்படக் கூடிய ஜனநாயகம் நிலைபெறும்” என்றார்.

தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பொது மக்கள்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த செந்தில் ஆறுமுகம், ``வாக்கு செலுத்துவது மட்டும் ஜனநாயகக் கடமையில்லை. தொடர் கண்காணிப்புகளின் மூலமாக மட்டுமே ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்பதை முதலில் நமது மக்கள் உணர்தல் வேண்டும். சாதாரணமாகத் தெருவில் நடந்து சொல்லும்போது ஒரு பள்ளம் இருந்தால் அதைவிட்டு ஒதுங்கிச் செல்கிறோமே தவிர, அதுபற்றி ஒரு புகார் கடிதத்தை அளிக்க மக்கள் தயாராக இல்லை. கேரளா போன்ற மாநிலங்களில் மக்கள் தங்களின் கோரிக்கைகளை  முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அது மாதிரியான போராட்டங்கள் பெருவாரியாக நிகழ்வதில்லை. அதற்கு மற்றொரு காரணம் இங்குப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளாகும். தங்களின் வரிப் பணம் சரியாகத்தான் செலவிடப்படுகிறதா என்பதில் தொடங்கி அரசு எடுக்கும் எல்லா முடிவுகளிலும் மக்களும் கவனம் செலுத்துதல் வேண்டும்” என்றார்.

ஜனநாயகக் கடமை என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படுபவை அல்ல என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்...!


டிரெண்டிங் @ விகடன்