''எங்களுக்கு அரசு எதுவும் செய்யலை.. அதிகாரிகளையும் சந்திக்க முடியலை!'' - கண்ணீரில் மாற்றுத்திறனாளிகள்! | physically challenged people say that they can't able to meet the social welfare officials

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (04/05/2019)

கடைசி தொடர்பு:11:58 (04/05/2019)

''எங்களுக்கு அரசு எதுவும் செய்யலை.. அதிகாரிகளையும் சந்திக்க முடியலை!'' - கண்ணீரில் மாற்றுத்திறனாளிகள்!

''ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக 'மாற்றுத்திறனாளிகள்' என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்தது.''

''எங்களுக்கு அரசு எதுவும் செய்யலை.. அதிகாரிகளையும் சந்திக்க முடியலை!'' - கண்ணீரில் மாற்றுத்திறனாளிகள்!

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையற்ற, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளால் அரசு சலுகைகள் எங்களுக்கு முறையாகக் கிடைக்கவில்லை எனக் கண்ணீரோடு அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த 1993-ல் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி இயக்ககத்தை, சமூகநல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுத்தியது. 1994-ம் ஆண்டு முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையைத் தமிழக அரசு வெளியிட்டது. ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக, உடல்குறைபாடுடைய அனைவருமே 'மாற்றுத்திறனாளிகள்' என அழைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எனக் தனியாக ஒரு நிர்வாகத்துறை தொடங்கப்பட்டது. இப்படி மாற்றுத்திறனாளிகளுக்காகப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் இன்றோ, சமூகநலத்துறையின் மூலம் கொடுக்கப்படும் உதவித்தொகையைப் பெறவே மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தங்கள் தேவைகளையும் குறைகளையும் சொல்லக்கூட அதிகாரிகள் இருப்பதில்லை என்று கண்ணீர் சிந்துகிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

 

மாற்றுத்திறனாளிகள்


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நம்புராஜன் இதுகுறித்து கூறுகையில், ''தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயராஜ் குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஷ்வரி ஆகியோர் பணியில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும், மற்ற துறைகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டவும் வேண்டிய முக்கியப் பொறுப்புகளில் உள்ள இவர்கள் இருவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட மறுக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் இவர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை. அவர்களே தலையீடு செய்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளிலிருந்து, மாற்றுத்திறளாளிகளின் நிலையைக் கண்டுகொள்ளாமல் விலகி நிற்பது, எங்களின் நலன்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் அவர்கள் செயல்படுவதையே காட்டுகிறது.

மாற்றுத்திறனாளிகள்

எங்கள் சங்கம் உட்பட பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் பல சட்டரீதியான கோரிக்கைகளை இவர்களின் கவனத்துக்கு முறையாகக் கொண்டுவந்தபோதிலும் பெரும்பாலானவற்றில் நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். இதனால், நீதிமன்றத்துக்குச் சென்றே உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். இவர்களிடம் அளித்த மனுக்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக்கூறி உத்தரவிட்டபோதிலும், வெறும் வார்த்தை ஜாலங்களை முன்னிறுத்தி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட  இந்த அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

நம்புராஜன்குறிப்பாக, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்திலும் இதர பயனாளிகளைவிட 25 சதவிகித அளவுக்கு தொகை உயர்த்தி வழங்குவதுடன், 5 சதவிகித திட்ட அளவினை மாற்றுத்திறனாகளின் நலன்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால், தமிழக அரசு சமீபகாலத்தில் செயல்படுத்திய பொங்கல் சிறப்பு உதவித்தொகை ரூ.1,000 வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2,000 ஆகிய திட்டங்களில் இந்த விதிகள் அமல்படுத்தாததைச் சுட்டிக்காட்டியும், இந்த இரு அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், சட்ட விதிகளை அமல்படுத்தாமல், அதற்குப் புறம்பான விளக்கங்களைக் கூறி மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கின்றனர்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையற்ற, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்த அதிகாரிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்து, மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட பொருத்தமான அதிகாரிகளை உடனே நியமிக்கத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்