``தீவிரவாதமே தவறுதான்... யார் செய்தாலும் எதிர்ப்போம்!'' - கமல் பேச்சுக்கு `மக்கள் நீதி மய்யம்' விளக்கம் | Terrorism is wrong. kamal will oppose anyone who does it

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:59 (14/05/2019)

``தீவிரவாதமே தவறுதான்... யார் செய்தாலும் எதிர்ப்போம்!'' - கமல் பேச்சுக்கு `மக்கள் நீதி மய்யம்' விளக்கம்

தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் அதைக் கமல்ஹாசன் எதிர்ப்பார். சாதி, மதம், மொழி என எதற்குள்ளும் கமல்ஹாசனை அடைத்துவிட முடியாது.

``தீவிரவாதமே தவறுதான்... யார் செய்தாலும் எதிர்ப்போம்!'' - கமல் பேச்சுக்கு `மக்கள் நீதி மய்யம்' விளக்கம்

``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது, அது. நான் காந்தியின் மானசிக கொள்ளுப்பேரன். இது, சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்"  என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல்


``மதம்சார்ந்த பிரசாரத்தில் கமல் ஈடுபட்டதால், அவரது பிரசாரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்" என பி.ஜே.பி-யின் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி குமார் உபாத்தையா தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருக்கிறார். இந்த நிலையில், தமிழக பி.ஜே.பி-யின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``மகாத்மாவைக் கொலைசெய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். இப்போதோ,  `இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமல்ஹாசன், பழைய, விஷமத்தனமான, விஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் தான் கீழ்த்தரமாகத்தான் நடந்துகொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல், தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லாதவர். இப்படி எந்தத் தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களைக் கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக்கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்று தெரிவித்துள்ளார். 

கமலஹாசன்

``முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்'' என பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், ``கோட்சேவை நீங்கள் தீவிரவாதி எனக் கூறலாம். ஆனால், ஏன் இந்து என்று குறிப்பிடுகிறீர்கள்'' என நடிகர் விவேக் ஓபராயும் தங்கள் பங்குக்குக் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். ``இந்து தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்லமுடியாது'' என கமல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். அதற்கும் அவர்மீது கண்டனக் குரல்கள் எழுந்தன. அது, காவல்துறை வரைக்கும் புகாராகவும் சென்றது. தற்போது இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். ``கோட்சே எனக் கமல் கூறியது சரிதான். நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி எடுத்தவர். முதலும் அவர்கள்தான், கடைசியும் அவர்கள்தான்'' என்று கமலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதுபோல, ``கமல்ஹாசன் கருத்தை நூறு சதவிகிதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மநீம

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸைத் தொடர்புகொண்டு பேசினோம். ``மொழி, இனம் இப்படி எல்லாவற்றிலும் தீவிரவாதம் இருக்கிறது. அதைத்தான் சுட்டிக்காட்டினார், கமல்ஹாசன். தீவிரவாதம் தவறு என்று சொல்வதை மற்றவர்கள் ஓட்டுக்காகத் திரித்துச் சொல்கிறார்கள். தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் அதைக் கமல்ஹாசன் எதிர்ப்பார். சாதி, மதம், மொழி என எதற்குள்ளும் கமல்ஹாசனை அடைத்துவிட முடியாது. அவர் இந்தியன். `விஸ்வரூபம்' படம் வெளியாவதற்கு முன்பே அவரை முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று செய்தி பரப்பினார்கள். தற்போது இந்துக்களுக்கு எதிரானவர் என்று பேசி வருகிறார்கள். தீவிரவாதமே தவறுதான். அதை யார் செய்தால் என்ன? தீவிரவாதத்துக்கு எதிரானவர் கமல்ஹாசன்'' என்று இந்து தீவிரவாதம் குறித்த சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பதிலளித்தார்.


டிரெண்டிங் @ விகடன்