`நட்புன்னா என்னன்னு தெரியுமா?'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு! | Friendship between Narendra Modi and Gautam Adani

வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (22/05/2019)

கடைசி தொடர்பு:10:48 (22/05/2019)

`நட்புன்னா என்னன்னு தெரியுமா?'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு!

குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் அசுர வளர்ச்சி தொடங்கியது.

`நட்புன்னா என்னன்னு தெரியுமா?'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு!

`ரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... அந்த ராஜாவுக்கு ஒரு நண்பர் இருந்தாராம். ரெண்டுபேரோட நட்பு பத்தி நாடே பேசுமாம். ராஜாவுக்காக அவரோட நண்பர் எதையும் செய்வாராம்.. ராஜாவும் அப்படித்தான்' என்று தொடங்கும் குழந்தைக் கதைகளைப் போல இந்தியாவின் உறுதியான நட்புக்கு சமீபத்திய உதாரணம், நரேந்திர மோடிக்கும் கௌதம் அதானிக்கும் இடையிலான நட்பு. குஜராத்தில் சாதாரண பின்னணியில் தன் வாழ்க்கையைத் தொடங்கி, கட்சியில் இணைந்து பணியாற்றி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று, குறுகிய காலத்தில் இந்தியப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டுக்கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

மோடியைப் போலவே, கௌதம் அதானியும் குஜராத்தைச் சேர்ந்தவர்தான். சிறிய அளவில் வைர வியாபாரியாகத் தன் வாழ்வைத் தொடங்கிய அதானி, படிப்படியாகச் சொத்து சேர்த்து, தற்போது இந்தியாவின் டாப் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு தற்போது ஏறத்தாழ 65 ஆயிரம் கோடி ரூபாய். அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் என்பதைத் தாண்டி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்திலும், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவராக அதானி மாறியதற்குக் காரணம், இந்தியப் பிரதமராக இருக்கும் அவருடைய நெருங்கிய நண்பர் மோடிதான். குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் அசுர வளர்ச்சி தொடங்கியது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டது. மோடியின் அரசியல் வாழ்க்கையில் தற்போதுவரை மிகப்பெரிய கரும்புள்ளியாக அந்தவன்முறை பார்க்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படுகொலைக்காக அந்த மாநிலத்தின் முதல்வராக அப்போது இருந்த மோடியை `இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு' (Confederation of Indian Industry - CII) கண்டித்தது. 

அதானி - மோடி

இந்தியாவின் வர்த்தக நெட்வொர்க்கின் மிகப்பெரிய கூட்டமைப்பால் மோடி கண்டிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்தவர் கௌதம் அதானி. குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களுடன் `குஜராத் மறுமலர்ச்சி குழுமம்' என்ற வர்த்தகக் கூட்டமைப்பைத் தொடங்கிய அதானி, மோடிக்காக சி.ஐ.ஐ கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மோடிக்கும், அதானிக்கும் இடையிலான நட்பு அதிகரித்ததுடன், இன்னும் ஆழமானது. 

2003-ம் ஆண்டு, குஜராத் மாநில அரசு நடத்திய `வைப்ரன்ட் குஜராத்' என்ற தொழிலதிபர்களுக்கான மாநாட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார் அதானி. அதற்குப் பிறகு, அதானியின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.

குஜராத் கட்ச் வளைகுடாவில் முந்த்ரா பகுதியில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது மோடி அரசு. ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது. 

2005-ம் ஆண்டு, முந்த்ரா கிராமத்தில் கால்நடை மேய்ச்சலுக்காகக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் குஜராத் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதானி குழுமத்திற்குச் `சிறப்புப் பொருளாதார மண்டலமாக' அளிக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலமாக அளிக்கப்படும் நிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு, மானிய விலையில் மின்சாரம் முதலான சலுகைகள் உண்டு.

அதானி - மோடி குஜராத்

தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குள் பல்வேறு சூழலியல் விதிகளை மீறியதாக அதானி குழுமத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் நவினல் கிராம மக்கள், தற்போதுவரை நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர். 

ஒரு சதுர மீட்டர் நிலத்தை 1 ரூபாய்க்குப் பெற்ற அதானி, அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதே நிலத்தை, ஒரு சதுர மீட்டர் 600 ரூபாய் என்ற மதிப்பில் வாடகைக்கு அளித்தார். துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று, அதானியின் சொத்து மதிப்பு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. எல்லாவற்றுக்கும் பின்னால், அதானியின் நண்பராக, குஜராத்தின் முதல்வராக மோடி நின்று கொண்டிருந்தார்.

அதானியின் தொழில் குஜராத்திற்கு வெளியே, பல மாநிலங்களில் கால் பதிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களுக்கு, அதானி குழும விமானங்களில் பயணித்து வாக்கு சேகரித்தார். 2014-ம் ஆண்டு, மே 16 அன்று, பி.ஜே.பியின் வெற்றி அறிவிக்கப்பட்டு, மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், அதானி குழுமம் ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதாகப் பெருமையாக அறிவித்தது. 

அதானி விமானம்

மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதே நாளில் அதானி குழுமம் தம்ரா துறைமுகத்தைப் பெற்றதும், வரவிருந்த எதிர்காலத்தைச் சூசகமாக இந்திய மக்களுக்கு அறிவித்தது.

தன் தேர்தல் பிரசாரங்களுக்கு விமானம் தந்த அதானியை, தனது வெளிநாட்டுப் பயணங்களில் இணைத்துக்கொண்டு, நட்புக்கு விசுவாசமாகச் செயல்பட்டார் பிரதமர் மோடி. அதானி குழுமத்தின் மீது தொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தொடர்பான வழக்குகள், வரி ஏய்ப்பு வழக்குகள், அதானிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குஜராத் மாநில அரசு மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முதலியன மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் முக்கியத்துவம் குறைந்தனவாகக் கருதப்பட்டன. 

மோடியுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அதானிக்கு இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, தன் நண்பர் அதானிக்கு மிகப்பெரிய பம்பர் பரிசாக, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார். 

மோடி அதானி பயணம்

ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு, பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக வழங்கியது. நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் இடம், அதானி மீதுள்ள வாராக்கடன் குற்றச்சாட்டுகள் முதலியவற்றைக் கணக்கிட்டு, வெளிநாட்டு வங்கிகள் அவருக்குக் கடன்தர மறுத்தபோதும், மோடி தலைமையிலான மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்குக் கடன் உதவி செய்து, தன் நட்பை வெளிப்படுத்தியது.

துறைமுகங்கள், மின்சார உற்பத்தி எனப் பெருகிய லாபத்தில், அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. இங்கும் அவருக்குக் கைகொடுத்தது அவரது நண்பர் மோடிதான். அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களின் விமான நிலையங்கள் தனியார் பராமரிப்புக்காக ஏலத்தில் விடப்பட்டன. அதன் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு ஐந்து விமான நிலையங்களும் வழங்கப்பட்டன.

தற்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி `அம்பானிக்கும், அதானிக்கும்தான் பிரதமர் மோடி சௌகிதாராகச் செயல்படுகிறார்' என்று குற்றம்சாட்டினார். தன் நட்பை இழிவுபடுத்திய போதும், ஐந்தாண்டு ஆட்சி முடியும் நேரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் நிலத்தை அதானிக்கு அளித்தது மோடி அரசு. நிலம் அளித்தது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதல் முறையாக மின் உற்பத்தி நிலையம் ஒன்றுக்கு, `சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற அந்தஸ்தை வழங்கியது. இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வங்காளதேசத்திற்கு விற்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.

மோடி அதானி நட்பு

பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்கள் நட்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இங்கு நட்பு என்பதை மோடி - அதானி ஆகிய இருவருக்கும் இடையிலானது என்று மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது. மோடிக்குப் பதிலாக வேறொரு பிரதமரும், அதானிக்குப் பதிலாக வேறொரு தொழிலதிபர் இருந்திருந்தாலும், இதே நிலைதான் தொடர்ந்திருக்கும். இந்தியா முழுவதும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும், அவரது தகுதிநிலைக்கேற்ப இப்படியொரு தொழிலதிபர் நண்பர் இருக்கிறார். இந்த நட்பு, இந்திய அரசின் கீழ் இயங்கும் அரசியல்வாதிகளுக்கும், மிகப்பெரிய முதலாளிகளுக்கும் இடையிலான நட்பு.

அதானியின் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் குஜராத்தின் சாமான்யர்களும், ஆஸ்திரேலியாவின் சாமான்யர்களும். தேசங்கள் கடந்தும், இரு நாட்டு சாமான்யர்களின் கோரிக்கையும் ஒன்றாகத்தான் இருக்கிறது. எனினும், அவர்களுக்கு இடையிலான நட்பு பெரிதாக சாத்தியப்படவில்லை. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மோடி மீண்டும் வெல்வாரா என்ற கேள்வி இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மோடியின் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, `மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியவுடன், பங்குச் சந்தையில் அதானியின் பங்குகள் 17% வரை உயர்ந்தன. மோடியின் வெற்றிச் செய்தியாலேயே அதானியிடம் குவிகிறது லாபம். ஆம், இதுதான் உன்னதமான நட்பு! 


டிரெண்டிங் @ விகடன்