கூடங்குளத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம்...என்ன செய்யும் இது? | Kudankulam will have India's first Away from reactor. Is it safe?

வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (06/06/2019)

கடைசி தொடர்பு:18:39 (06/06/2019)

கூடங்குளத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம்...என்ன செய்யும் இது?

அணுக்கழிவு மையத்தில்தான் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் உறங்கிக் கொண்டிருக்கும். இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது விழித்துக்கொள்ளும். அப்போது நேரும் துயரங்கள் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும்.

கூடங்குளத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம்...என்ன செய்யும் இது?

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அந்த அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அணுக்கழிவாக மாறுகிறது.

கூடங்குளம் அணுஉலை - இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் அமையவிருக்கும் இடம்

அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் சேமிக்கப்படும் அணுக் கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும். இந்தச் செயல்முறைக்கு Away From Reactor என்று பெயர்.
இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்கப்படாது. இது தற்காலிகமான ஓர் அணுக்கழிவு மையமே. ஆனால், அணுக்கழிவை Deep Geological Repository எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் முறையானது. ஏனெனில் நிரந்தரமாகச் சேமித்து வைக்க பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் சேமிக்க வேண்டும். தற்காலிகமாக சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். உலகில் பல நாடுகளில் அணுக்கழிவுகள் அந்தந்த அணுஉலை வளாகத்துக்குள்தானே சேமிக்கிறார்கள் என்று தோன்றலாம். அதற்கான பலனை செர்னோபில், புகுஷிமா போன்ற அணு உலை விபத்து மூலம் அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 

பொதுவாக அணுக்கழிவுகள் என்ன செய்யும்?

ஓர் அணுஉலை இயங்கும்போது மில்லியன் கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொடுக்கலாம். சில காலங்களில் அணு உலைகள் ஓய்வெடுத்துக் கொள்ளும். ஆனால், அதன்பின்னர் அணுக்கழிவுகள் ஓய்வை முடித்துக்கொண்டு தனது பணியினைத் தொடங்கக் காத்திருக்கும். அணுக்கழிவு மையத்தில்தான் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் உறங்கிக்கொண்டிருக்கும். இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது விழித்துக்கொள்ளும். அப்போது நேரும் துயரங்கள் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும். இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவை. அந்த 24,000 ஆண்டுகள் அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்கவேண்டும்.

அமெரிக்காவில் உள்ள அணுக்கழிவு மையத்தின் நிலை!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நகரம், சான் க்ளெமென்ட். அந்நகரத்தின் அற்புதமான கடற்கரையில் செயல்படாத சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மொத்தமாக மூன்று உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனால், இவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளை இதுவரை என்ன செய்வதென்றே தெரியாமல் வைத்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் அணுக்கழிவுகள் உறங்கிக்கொண்டேதான் இருக்கின்றன. இதனால் இப்போது கிளம்பியிருக்கும் பிரச்னைதான் கொஞ்சம் பீதியைக் கிளப்பும் ரகமாக இருக்கிறது. கைவிடப்பட்டுள்ள அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகள் அங்கு வேலை செய்யும் பணியாளர்களைப் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. 

கூடங்குளம்

இப்போது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், இது அமைந்துள்ள இடம். பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது இது. இதன் 75 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமும், சான் டைகோ நகரமும் அமைந்துள்ளன. அணுஉலை பகுதியில் 85 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அம்மக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவுக்கும் மையமாகத்தான் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. 

கூடங்குளம் அணுக்கழிவு மையம் வழக்கு கடந்து வந்த பாதை!

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து அணுஉலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை (away from reactor) 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான். கால அவகாசம் முடிந்து 2018 -ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்திக் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் இந்த அணுக்கழிவு மையம் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் 2022-ம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. 
கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில் இம்மையத்தை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சுந்தர்ராஜன்அணுக்கழிவு மையத்தை அமைக்க இருப்பது பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் `ஆழ்நிலை கருவூலம்' (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விஷயமாகும். கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடும் கண்டுபிடிக்க முடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாகத் தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நிரந்தரக் கழிவுமையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தவேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதிகம். அணுஉலை கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிலையில், மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியைக் கைவிட வைப்பதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், கட்சிகளும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்போது நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டம் நேர்மையான முறையில் நடக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." என்றார்.


டிரெண்டிங் @ விகடன்