`ஒரு மணி நேரம் நடந்தால்தான் ஒரு குடம் நீர் கிடைக்கும்!' ஒடிசாவின் துயரம் #WhereIsMyWater | The Great Indian Water Walkathon

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (06/06/2019)

கடைசி தொடர்பு:13:50 (06/06/2019)

`ஒரு மணி நேரம் நடந்தால்தான் ஒரு குடம் நீர் கிடைக்கும்!' ஒடிசாவின் துயரம் #WhereIsMyWater

ஒடிசாவில் ஒரு சராசரி நபர் குடிநீர் ஆதாரத்துக்காக 64 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டும். அதாவது ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் பயணம் செய்தால்தான் குடிநீர் கிடைக்கிறது.

`ஒரு மணி நேரம் நடந்தால்தான் ஒரு குடம் நீர் கிடைக்கும்!' ஒடிசாவின் துயரம் #WhereIsMyWater

நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தங்களின் அன்றாடத் தேவையைக்கூட பூர்த்திசெய்யவே தண்ணீர் இல்லாமல், தவித்து வருகின்றனர். பலர் தண்ணீரைத் தேடி பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் சில இடங்களில் குடிப்பதற்கான தண்ணீரைப் பெற ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான தூரம் நடந்தால்கூட குடிநீர் கிடைப்பதில்லை என்றால் நம்பமுடிகிறதா? உண்மைதான். இந்தியாவில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஒடிசாவில் ஒரு சராசரி நபர் குடிநீர் ஆதாரத்துக்காக 64 நிமிடங்கள் பயணம் செய்யவேண்டும். அதாவது ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் பயணம் செய்தால்தான் குடிநீர் கிடைக்கிறது. 

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்குக் குடிநீர் ஆதாரம் இல்லை. மாநில வாரியாகப் பார்த்தால், ஒடிசாவை அடுத்து 48 நிமிடங்கள் பயணம் செய்து குடிநீரைப் பெறும் மக்கள் அதிகமாக வாழ்வது மத்தியப்பிரதேசத்தில்தான். தமிழகத்தில் சராசரியாக 29 நிமிடங்கள் பயணம் செய்தால்தான் சராசரி ஒரு நபருக்கான குடிநீரைப் பெற முடியும். 

Drinking water

பல்வேறு கிராமங்களில், நேரம் மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் குடிநீரைப் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டிய நிலையுள்ளது. அதாவது சுமார் 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தால்தான் அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீரைக் கூடப் பெறமுடிகிறது. 

ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 36 முதல் 39 சதவிகிதம் பேர் 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து தண்ணீரைப் பெறுகின்றனர். நகர்ப்பகுதிகளில் 20 சதவிகிதம் பேர் தண்ணீர் ஆதாரங்களை அடைவதற்கு அரைமணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்தியாவில் சாதாரண நாள்களை விடக் கோடைக்காலங்களில் 36 சதவிகிதம் குடும்பங்கள், அதிகதூரம் பயணம் செய்து தண்ணீர் பெறுகின்றனர். பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், முழுவதும் நிரப்பப்பட்ட 20 லிட்டர் தண்ணீர் உள்ள குடத்தை மக்கள் தாங்களே தண்ணீரைச் சுமந்து வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் 8 சதவிகிதம் பேர் 500 மீட்டருக்கும் மேல் கடந்து சென்று தண்ணீர் ஆதாரங்களைப் பெறுகின்றனர். 

Where is my water

இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் முக்கியக் காரணம் என்னவென்றால் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்காமலும், மக்களின் பயன்பாட்டுக்குச் சரியான முறையில் கொண்டு சேர்க்காமலும் இருப்பதுமே. 2020-க்குள் நிலத்தடி நீரும் முற்றிலும் குறைந்துவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீடு, நதிகள் இணைப்பு, நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குதல் போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் இணைத்துச் செயல்படுத்த வேண்டும். முறையான குடிநீர் ஆதாரங்களை இந்தியாவில் ஏற்படுத்தாவிட்டால் தற்போது இருக்கும் வறட்சியைக் காட்டிலும், ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் அதிக வறட்சி ஏற்பட்டு தண்ணீருக்காக விரைவில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்