பெண்களுக்கு புற்றுநோய் வர முக்கியக் காரணம் உயரமே..!

- சா.வடிவரசு

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் - யெஷிவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தி முடித்தார்கள். அதில், உயரமான பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக புதிய தகவல் தெரியவந்தது.

மேலும், அந்த ஆய்வில் மாத விலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு, அவர்களது எடை அல்ல உயரம்தான் முக்கிய காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இப்படி புற்றுநோய்க்கு உயரம் ஒரு முக்கிய காரணமாக இருப்பது அந்த ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு, அதிரவும் வைத்துள்ளது. 

இந்த ஆராய்சிக்காக, கடந்த 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 50 வயது முதல் 79 வயது வரை உள்ள சுமார் 144,701 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இந்த 12 ஆண்டுகள் அவர்களை கண்காணித்ததில் இருந்து அவர்களில் மொத்தம் 20,928 பேருக்கு 19 வகை புற்றுநோய்கள் ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு, அந்த ஆய்வில் இவை அனைத்திற்கும், உயரத்திற்கும் முக்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
 
மேலும், மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் ஆகியவற்றுக்கும் உயரத்திற்கும் கூட தொடர்பு உள்ளது. அதோடு புற்றுநோய் என்பது வளர்ச்சியுடன் தொடர்புடையது என்றும், அதனால் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பிருக்கலாம் என்றும் அந்த ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியார்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இதைப் பற்றி சென்னையை சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர், டாக்டர். கண்ணனிடம் கேட்டபோது, ''இந்த கண்டுபிடிப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இவர்கள் இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள மக்களை வைத்து மட்டுமே செய்திருக்கிறார்கள். அங்கு இருக்கும் மக்களைப் போலவே உலகத்தின் மற்ற இடங்களிலும் மக்கள் இருப்பதில்லை. அதனால் இது அங்கே இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். உலகின் மற்ற இடங்களில் இருக்கும் மக்களுக்கு இது பொருந்தும் என்று சொல்வது எற்றுக்கொள்ளகூடியது இல்லை.

உதாரணமாக, சீன மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட குள்ளமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இது எப்படி பொருந்தும். இதேப்போல் உலகின் மற்ற பகுதியில் உள்ளவர்களும் இது சரிவர பொருந்தும் என்று எப்படி சொல்லமுடியும்?. இந்த ஆராய்ச்சி வெறும் ஒரு ஆரம்ப கட்ட ஆராய்ச்சி மட்டுமே. இதை கருத்தில் கொண்டு இதுதான் காரணம் என்று முடிவு செய்துவிட முடியாது. அடுத்த கட்டமாக இந்த ஆராய்ச்சியை உலகில் உள்ள எல்லா நாடுகளை சேர்ந்த மக்களையும்  பங்கேற்கச் செய்து கண்டறிய வேண்டும். அப்போதும் இதே முடிவு வந்தால் நிச்சயம் முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம்..'' என்றார்.

உயரமான பெண்கள் இனி புற்றுநோய் விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லதுதான்..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!