டிசம்பர் 5: கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு

                                                         அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது..!

கேப்டன் ஜான் மிட்செல் 1860 இல் ஒரு சிறு நூலகத்தை சென்னை அருங்காட்சியகத்தோடு இணைத்து தொடங்கினார். எயில்பேரி நூலகத்தின் தேவைக்கு அதிகமான புத்தகங்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தன. பின்னர் பெரிய நூலகம் ஒன்றை கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் அப்படி எழுந்தது தான் கன்னிமாரா நூலகம்.

1890 இல் அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு வருடங்களில் இந்நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கன்னிமாரா பிரபு அவரின் பெயராலேயே இந்நூலகம் வழங்கப்படுகிறது. பழைய கட்டிடங்கள் எல்லாம் பர்மா தேக்கால் கட்டப்பட்டவை,கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நம்பெருமாள் செட்டி குழுமமே இந்த கட்டிடத்தை
கட்டிக்கொடுத்தது.

இரு கழுகுகள் பாம்பைக் கொத்தி பறப்பது போன்று இருந்த ஆங்கிலேய அடையாளம் தான் இருந்தது. விடுதலைக்கு பின்னர் அதன் மேலே அசோக சிங்கத்தை பொறித்திருக்கிறார்கள். தமிழின் மிக பழமையான அச்சு நூலின் பிரதி ,1560இல்  அச்சிடப்பட்ட பைபிள், 1553 இல் வெளியான இலத்தீன் மருத்துவ நூல், 1852 இல் எழுதப்பட்ட தேம்பாவணியின் இரண்டாம் பாகம், 1578 இல் வெளியான
பிளாட்டோவின் நூல், 1886 இல் வெளியான இந்திய வானிலை அறிக்கையின் தொகுப்பு ஆகியன இங்கே உள்ள பழமையான நூல்கள். 1861 இல்  வெளியான உலக அட்லஸ் தான் மிகப்பெரிய நூல்

'இந்திய பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் அனைத்துப் புத்தகங்களின் நகல்களை பெறும் நான்கு முக்கியமான நூலகங்களில் இதுவும் ஒன்று’, 'தமிழில் வெளியான முதல் நூலின் நகலை கொண்டது, முதல் அட்லஸ் உள்பட பழமையான நூல்களை உள்ளடக்கியது’ என, சென்னை கன்னிமரா நூலகம் ஏகப்பட்ட சிறப்புகளைக் கொண்டது. அதுவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் 'புத்தகக் காப்புப் பிரிவு’  கன்னிமராவுக்குப் பெருமை சேர்க்கக்கூடியது'

 'கன்னிமராவில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் 'புத்தகக் காப்புப் பிரிவு’ பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள் பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருவார்கள் என்பதால் ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை
மாத வாரியாகப் பிரித்துவைத்து பாதுகாக்கிறார்கள்

தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத பழமையான நூல்கள் இங்கு உள்ளன.

''அறிஞர் அண்ணா படித்திராத கன்னிமரா நூல்களே இல்லை’ என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அதேபோல் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலர் வந்து இருக்கிறார்கள். வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

பூ.கொ.சரவணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!