யுவராஜ் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு | yuvaraj singh

வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (12/12/2013)

கடைசி தொடர்பு:07:58 (12/12/2013)

யுவராஜ் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

டிசம்பர் 12: யுவராஜ் சிங் மீண்டும் இந்திய ஒரு நாள் அணிக்குள் இடம் பிடித்திருக்கிறார். தன்னம்பிக்கை,முடிவில்லாத உழைப்பு,வலிகளில் சிரித்தல் எல்லாமும் சேர்ந்த கலவை தான் யுவி. சின்ன வயதில் ஸ்கேட்டிங் என்றால் யுவிக்கு அவ்வளவு ஆசை. தங்கப்பதக்கம் வென்று விட்டு அப்பாவிடம் காண்பிக்க ஆசையாக ஓடி வந்தால் அதை தூக்கி வீசிவிட்டு "கிரிக்கெட் மட்டும்
தான் நீ ஆட வேண்டும் !" என்று சொன்ன பொழுது கொஞ்சமாக கண்ணீர் விட்டார் சுட்டி யுவி.

அம்மாவும்,அப்பாவும் சண்டை போட்டு பிரிந்த காலத்தில் யுவயும், அவரின் தம்பியும் எக்கச்சக்க மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அப்பொழுது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே அவரை தேற்றியது. ட்வென்டி ட்வென்டி உலககோப்பையின் முக்கியமான போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணியினர் இவரை சீண்டினார்கள். ஆறு சிக்சர்கள் ஒரே ஓவரில் பறந்தது தான் பதிலாக இருந்தது. கூடவே கொஞ்சம்
ஆக்ரோஷம் பொங்க சின்ன பையன் போல கத்தவும் செய்வார் யுவி.

சச்சினுக்கு கடைசி ஒருநாள் உலகக்கோப்பை. இருபது ஆண்டுகள் ஆடியும் கிட்டாத கனவு. யுவராஜ் அணிக்குள் பார்மே இல்லை என்று சொல்லப்பட்ட சமயத்தில் சேர்க்கப்பட்டார்.சச்சினும் தோனியும் தோள் மேல் கைபோட்டு ,"உன்னால் முடியும் யுவராஜ் !" என்றார்கள். அடித்து ஆடினார் யுவராஜ். முக்கியமான போட்டிகளில் இவரிடம் பந்தை கொடுத்தால் முக்கியமான விக்கெட்டுக்கள்
கண்டிப்பாக விழும். ஆஸ்திரேலிய அணியுடனான காலிறுதியில் ஐம்பத்தி ஏழு ரன்கள் அடித்து அணியை ஜெயிக்க வைத்ததும் முட்டிபோட்டுக்கொண்டு குழந்தை போல அழுதார் அவர். உலககோப்பை இறுதி போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்து கைகொடுத்தார். நான்கு ஆட்ட நாயகன் விருது,தொடர் நாயகன் விருது என எல்லாமும் வென்ற அவர் சச்சின் கையில் உலககோப்பையை திணித்தார்

அதற்கு பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. நுரையீரல் மற்றும் ஆர்டரிக்கு நடுவே 15cm x 11cm x 13 cm  என்கிற அளவில் ஒரு கேன்சர் கட்டி வளர்ந்து கொண்டிருந்தது. உலககோப்பை சமயத்திலேயே அது இருந்திருக்கிறது, கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் மாரடைப்பு வந்து யுவி இறந்து இருக்க வேண்டியது தான் என்று டாக்டர்கள் சொன்னார்கள். தோனி,சச்சின் எல்லாம் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு அவரை தேற்றினார்கள். கேமோதெரப்பி எடுத்து வலியோடு போராடி மீண்டு வந்து கலக்கினார் யுவி. சுட்டிகள் என்றால் யுவிக்கு ரொம்பவும் பிரியம். இந்த சிகிச்சையின் பொழுது அவர் கேட்ட ஒரே கேள்வி " நான் கொஞ்ச ஒரு குழந்தை  பிறக்க முடியாமல் போய் விடாது அல்லவா ?" என்பது மட்டும் தான்.

சிக்சர்களாக போட்டிகளில் பறந்தன. இன்னமும் தீர்க்கமாக ஷாட்கள் அவரிடம் இருந்து வெளிப்பட்டன. இப்பொழுது இன்னமும் சூப்பராக  இந்தியாவின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் அணியில் யுவி இடம் பிடித்தார். சமீபத்தில் பயிற்சி போட்டிகளில்  123, 40, 61 என்று அடித்து கலக்கியதே
இந்த தேர்வுக்கு காரணம்.

எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று யுவியை பார்த்து கேட்ட பொழுது ,"எனக்குமட்டும் ஏன் இப்படி நடந்தது என்று நான் இறைவனிடம் புலம்பவில்லை. இது தான் எனக்கான பாதை இதை நான் தன்னம்பிக்கையோடு கடப்பேன் என்று முடிவு செய்து கொண்டேன். " என்று சொன்னார். அவரின் பிறந்தநாள் இன்று.

பூ.கொ. சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்