கருணாநிதி சமாதான முயற்சிக்கு அழகிரி மறுப்பா?

சென்னை: மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை ஒன்றாக அமரவைத்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காணவும், அழகிரியை சமாதானப்படுத்தவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வர அழகிரி மறுத்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரிக்கும், அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுரை தி.மு.க.வை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

நீக்கப்பட்ட அனைவரும் தனது ஆதரவாளர்கள் என்பதால், அழகிரி ஆவேசமடைந்தார். இது தொடர்பாக இன்று காலை அவர் தி.மு.க. தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்தே மு.க. அழகிரி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.

இந்த நீக்கம் அவரது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அழகிரியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில்  அழகிரி, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக அமரவைத்து பேசி, கட்சிக்குள் நிலவி வரும் தற்போதைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதியை தி.மு.க. இரண்டாம் மட்டத்தலைவர்கள்  கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கருணாநிதி கேட்டுக்கொண்டதன்பேரில் இதில் கலந்துகொள்ள மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வந்தபோதிலும் அழகிரி வரமறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை முருகன், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகிரி நீக்கம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டம் அழகிரியை சமாதானப்படுத்துவதற்காக கூட்டப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தி.மு.க. வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

 

இருப்பினும் ஆலோசனை முடிந்து வெளியே வந்த துரைமுருகனை  செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு,  நைசாக வீட்டிலிருந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின்,  செய்தியாளர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, படக்கென்று சென்று காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதேப்போன்று கனிமொழியும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனிடம்,  அழகிரி நீக்கம் நிரந்தரமானதா அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அழகிரி நீக்கம் தற்காலிகமானதுதான் என்றும், வரவிருக்கும் நாட்களில் அவரது ( அழகிரி) நடவடிக்கைகளை  பொறுத்து அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கட்சியின் நலன்கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைதி காக்க அழகிரி வேண்டுகோள்

இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தம்மை தொடர்புகொண்ட தமது மதுரை ஆதரவாளர்களிடம் அமைதி காக்குமாறு அழகிரி கேட்டுக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படங்கள்: சொ. பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!