வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (04/02/2014)

கடைசி தொடர்பு:09:35 (04/02/2014)

பிப்ரவரி 4: ரோசா பார்க்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு

மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபடவேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ். மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா பார்க்ஸ். பிறப்பால் ஆப்ரோ அமெரிக்கர் அவர்.

கணவர் முடிதிருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். கறுப்பின மக்கள் பேருந்தில் தனி இருக்கைகளில் அமர வேண்டும் ; அதுவும் முன்புறம் இருந்து ஏறக்கூடாது. பின்புறம் இருந்தே ஏற வேண்டும். வெள்ளையின மக்கள் வந்தால் இடம் கொடுத்து எழுந்து நகர்ந்துவிட வேண்டும். டிக்கெட் எடுத்திருக்கிறேன் நான் என்று விதியெல்லாம் பேசக்கூடாது.

ஒரு நாள் அப்படி பேருந்தில் உட்கார்ந்தவாறு போய்க்கொண்டு இருந்தார் ரோசா. வெள்ளையர் வந்ததால் பின்பக்கம் போய் உட்கார சொன்னார் ஓட்டுனர். முன்பக்கம் போனார் ரோசா. கொட்டும் மழையில் பேருந்தைவிட்டு அவரை
இறக்கினார் அந்த ஓட்டுனர்.

அடுத்த முறை, அதே பேருந்து, அதே சூழல், அதே ஓட்டுனர். இடம் மாற சொன்னார் ஓட்டுனர். “எழ மாட்டேன் நான் !” என்று அமர்ந்திருந்தார் ரோசா. மூன்று ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எழுந்தார்கள். அப்பொழுதும் ரோசா எழ மறுத்தார். முடியாது என இவர் மறுக்க மறுத்தால் கைது செய்வோம் என கண்டக்டர் பயமுறுத்த செய்யுங்கள் என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர். கைது செய்யப்பட்டார். “எனக்கு நாற்பத்தி இரண்டு வயது தான் ; நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால்,எழுந்து,எழுந்து அடக்குமுறைக்கு பயந்து பயந்து
களைப்படைந்து விட்டோம் நாங்கள்.அதனால் எழ மறுத்தேன்.”என்றார் ரோசா

கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்.லூதர் கிங் பின் அணி திரண்டார்கள்;நடந்தே போனார்கள் ,டாக்சியில் போனார்கள் ஆனால் ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. நாற்பதாயிரம் மக்கள் அறப்போரில் பங்கு கொண்டார்கள். நடந்து போனார்கள் ; டாக்சி டிரைவர்கள் இலவசமாக தங்கள் வண்டிகளில் அழைத்துப்போனார்கள். ஆனால்,பேருந்தில் மட்டும் ஏறவில்லை இவர்கள்.

ரோசவுக்கு வேலை போனது ; பல இடங்களில் போராடிய மக்கள் தாக்கப்பட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ; உரிமைக்கான கனத்த மவுனம் மட்டுமே இருந்தது அங்கே.

ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,கூடவே பதினான்கு டாலர் அபராதம் விதித்தார்கள். ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள்
)அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர்
எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும்,தன்மானத்தோடு நடக்கவும் முடிகிறது !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்

-பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்