வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (08/02/2014)

கடைசி தொடர்பு:08:31 (08/02/2014)

பிப்ரவரி 8: ஜூல்ஸ் வெர்னே புனைகதை எழுத்தாளர் பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஜூல்ஸ் வெர்னே எனும் இணையற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிறந்த தினம் பிப்ரவரி எட்டு. . பிரான்ஸ் தேசத்தில் பிறந்த இவர் குட்டி பையனாக இருக்கும் பொழுது படகில் ஏறி தன் ஊரின் ஊடாக ஓடிய நதியில் பயணம் போய் எண்ணற்ற நாட்டு படகுகளை,பயணிகளை கண்டு வியந்தார் . சாகச எண்ணம் மனதில் எரிய ஆரம்பித்தது .வீட்டை விட்டு கிளம்பி மேற்கிந்திய தீவுகள் போக கப்பலேறி விட்டார் ; அவரை சிவப்பிந்தியர்கள் வரவேற்கவில்லை .அடுத்த துறைமுகத்தில் அவரின் அப்பா தான் இரண்டு அடி விட்டு இழுத்து போனார் .

வக்கீல் தொழிலுக்கு படிக்க பாரிஸ் அனுப்பினால் மனிதர் புகழ் பெற்ற விக்டர் ஹுகோ,அலெக்சாண்டர் டுமாஸ் ஆகியோரிடம் நட்பு கொண்டு எழுத்தாளர் ,ஆக முயற்சி செய்தார் . அப்பா விஷயம் தெரிந்து பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார் . மனிதர் அசரவில்லை ;அறிவியல் சங்கதிகளோடு சுவாரசியமான கதைகளை வடித்தார் ;ஆனால்,அவற்றில் ஏகத்துக்கும் அறிவியல் விஷயங்கள் இருப்பதாக புறக்கணித்தார்கள் .

சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையை ஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார் ;சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார் .அப்படியே செய்தார் இவர் ; நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார் .

வசதிகள் குறைவாக இருந்த அக்காலத்தில் எண்பது நாட்களில் உலகை சுற்றி பயணம் வரும் கதையை படைத்தார் .ஹெலிகாப்டர்,விமானங்கள்,நீர் மூழ்கி கப்பல்கள்,நிலவுக்கு விண்கலம் எல்லாமும் இல்லாத 19 ஆம் நூற்றாண்டிலேயே அவற்றை தன் எழுத்தில் கொண்டு வந்தார் . அதைப்படித்து எண்ணற்ற இளைஞர்கள் அவற்றை உருவாக்க ஆர்வம் கொண்டார்கள் .

அறிவியல் புனைகதையின் தந்தைகளில் ஒருவராக போற்றப்படுகிறார் இவர் .ஒரு மனநலம் குன்றியவர் சுட்டு ஒரு காலை விந்தி விந்தி நடந்தும்,நீரிழிவு நோயோடு போராடிக்கொண்டும் இருந்தாலும் தன் கதைகளில் அத்தனை சாகசத்தை இவர் வாசகனுக்கு பரிசளித்தார் .

அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது . பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர் . முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர் .". தங்க எரிமலை "எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை பொற்குழம்பு போல - உமிழ்ந்த அவரின் பிறந்தநாள் இன்று.

- பூ.கொ.சரவணன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்