வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (07/09/2014)

கடைசி தொடர்பு:07:16 (07/09/2014)

செப்9: சீன வரலாற்றை மாற்றிப் போட்ட மா சே துங் சிறப்பு பகிர்வு

மா சே துங் என அறியப்படுகிற மாவோ சீன வரலாற்றை மாற்றிப் போட்டவர். சீனாவை மாவோவின் இளமைக்காலத்தில் பல நூறு வருடங்களாக ஆண்டு கொண்டிருந்த மன்னர் பரம்பரையே ஆண்டு கொண்டிருதது. சன் யாட் சென் அதை எதிர்த்து புரட்சி செய்து கோமின்டங் கட்சியைக் கொண்டு ஆட்சியை விட்டு அவர்களை விரட்டினார். அப்பொழுது அந்த கட்சியில் இணைந்து மாவோ பணியாற்றினார்.

நூலகத்தில் அவருக்கு வேலை கிடைத்து இருந்தது. ரஷ்ய புரட்சிக்கு பின்னர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ வேறு சிலருடன் இணைந்து ஆரம்பித்தார். அந்த கட்சி சீனாவின் முன்னேற்றம் சார்ந்து இயங்கினாலும் சன் யாட் சென்னுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்திருந்த சியாங் காய் ஷேக் அவர்களை கண்டு அஞ்சினார். கொடிய அடக்குமுறைகள் மற்றும் ராணுவ தாக்குதல்களை இவர்கள் மீது ஏவி விட்டார். சீனாவை ஜப்பான் தாக்கிய தருணத்தில் மட்டும் இணைந்து பணியாற்றினார்கள். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைகள் மாவோ மற்றும் இன்ன பிற தோழர்களை துரத்தி வந்தபடியால் தப்பி போவதே சரியான வழி என்று முடிவு செய்து பெரும் நடைபயணம் ஒன்றை முன்னெடுத்தார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட தோழர்கள் இறந்து போனார்கள். நகர்ப்புறங்களை விட்டு நகர்ந்திருந்த படியால் கிராமப்புறங்களில் இருந்த மக்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவர்களுக்கு கைகொடுத்தது.

சீனாவின் சிந்தனைப் போக்கை கன்புசியஸ் பெரிய அளவில் நிர்மாணித்து இருந்தார். அதை தவறு என்று சொல்கிற தைரியம் யாருக்கும் அமைந்திருக்கவில்லை. மாவோ அஞ்சாமல் அதை தாக்கினார். மக்களின் சிக்கல்களை தீர்க்க இடதுசாரி பாதையே சரியென்று குரல் கொடுத்தார். ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இறந்த பொழுது ,"அவளின் தற்கொலைக்கு மூவர் காரணம். அவளின் குடும்பம்,வருங்கால குடும்ப உறவுகள் மற்றும் இந்த சமூகம். அவளின் விருப்பம் என்னவென்று கேட்காமல் அவளை கட்டாயத்திருமணத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அவள் சுதந்திரமாக முடிவெடுக்க இந்த சமூக அமைப்பு வாய்ப்பு தரவில்லை. இதை முழுதாக மாற்றி அமைக்க வேண்டும். குடும்ப அமைப்பே கூடாது !" என்று அவர் எழுதினார். லெனினால் ஈர்க்கப்பட்டாலும் தன்னுடைய நாட்டுக்கு ஏற்றவாறு கம்யூனிசத்தை அவர் கட்டமைத்தார்.

அதே போல தற்காப்பு என்பதையே போர்க்கலையின் முக்கிய அம்சமாக கொண்டிருந்த சீனர்களுக்கு திருப்பி தாக்குதல் என்கிற மரபு மாவோவிடம் இருந்தே வந்தது. மாவோ உலகப்போருக்கு பின்னர் அதிகாரத்தை கைப்பற்றினார். நில சீர்திருத்தங்களை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தினார். கல்வி மற்றும் மருத்துவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டது. நூறு மலர்கள் மலரட்டும் என்று அவர் தன்னை விமர்சிக்கலாம் என்று கொண்டு வந்த திட்டத்தில் மிகக்கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு குரல்கள் வரவே அவற்றை முற்றிலும் ஒடுக்கினார்.

மாபெரும் முன்னெடுப்பு என்று சொல்லிக்கொண்டு எழுபத்தி ஐந்தாயிரம் விவசாயிகளை கூட்டாக விவசாயம் செய்ய வைத்தார். வெள்ளங்கள்,உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை சேர்ந்து கொண்டன. இது பயன் தராது என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு முதல் நான்கு கோடி மக்கள் பஞ்சத்தால்,பசியால் இறந்து போனார்கள். இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லைத்தகராறை சாதகமாக்கி தயாராக இல்லாத இந்தியாவை போரில் வென்று வீழ்ந்த மதிப்பை சரி கட்டிகொண்டார் அவர்.

கலாசார புரட்சி என்று சொல்லி நகரங்களில் இருந்த இளைஞர்களை கிராமங்கள் நோக்கி கட்டாயப்படுத்தி அனுப்பினார். பண்டைய சீனாவின் அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு இளைஞர்கள் புதிய புரட்சிக்காக கிராமங்களில் போய் கடின வேலைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். பூர்ஷவா சக்திகள் முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வர முயல்கின்றன என்று சொல்லி சந்தேகத்துக்கு உள்ளான பல்லாயிரம் பேர் செம்படையால் கொல்லப்பட்டார்கள். என்றாலும்,சீனாவின் வலிமையான இன்றைய பாய்ச்சலுக்கான அடித்தளம் மாவோவில் இருந்தே துவங்குகிறது.

- பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்