அரசு, ஆலம், மாதுளை... குழந்தைப்பேறுக்கு கைகொடுக்கும் இயற்கை!

குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் கஷ்டப்படுறாங்க. இதுக்கு உடல்ரீதியா நிறைய காரணங்கள் இருந்தாலும், ரசாயனம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுறதும் ஒரு காரணமா இருக்கு. இதைச் சொன்னா பலபேரு நம்ப மாட்டாங்க. ஆனா, நம்ம உடம்புல வர்ற பல பிரச்னைகளுக்கும் காரணமே... தினம் தினம் நாம சாப்பிடற சாப்பாடு, தண்ணி இது ரெண்டும்தான்.

இதை உறுதிப்படுத்திக்க எங்கயும் போகத் தேவையில்ல... ஒவ்வொரு நாளும் காலையில எழுந்திருக்கும்போது உடம்பு சும்மா ஃப்ரெஷ்ஷா இருந்தா... பிரச்னையே இல்லை. இதுக்கு மாறா எழுந்திரிக்க முடியாம, கஷ்டப்பட்டு எழுந்திரிச்சாலும், தூக்கம் தூக்கமாவே இருக்கும் சிலருக்கு. காலைக் கடன்களை உடனே முடிக்காத நிலையும் இருக்கும். அதுக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு கும்னு அடைச்சுக்கிட்டு இருக்கும். கண்ணு ரெண்டும் பொங்கிக்கிட்டு வரும். இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தா... நாம சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ பிரச்னைங்கிறத புரிஞ்சுக்கலாம்.இப்போதைய சூழல்ல எல்லாருடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்களும் காலத்துக்கு தகுந்தமாதிரி நிறையவே மாறிக்கிடக்கு. உதாரணமா சொல்லப்போனா எலுமிச்சை ஜூஸ்னா... ஒரிஜினல் எலுமிச்சம்பழத்தை சாறு எடுத்து, சர்க்கரையோ, தேனோ சேர்த்து சாப்பிடணும். இந்த அவசர உலகத்துல பாட்டில்ல அடைச்சி வச்சிருக்கிற ஜூஸையோ, கூல்டிரிங்க்ஸையோ வாங்கி குடிக்கிறோம். இது, நாம தயாரிக்கிற லெமன் ஜூஸைவிட டேஸ்ட்டா இருக்கும். ஆனா, இதுக்காக என்னென்ன ரசாயனங்கள் கலந்திருப்பாங்கனு நமக்குத் தெரியாது. பாக்கெட்டுல அடைச்சி விக்கிற மஞ்சள் தூள், சாம்பார் பொடியில என்னென்ன கலந்திருக்குனு யாருக்கு தெரியும்?

இப்படி தினந்தோறும் நாம சாப்பிடுற எல்லா பொருட்கள்லயும் கண்ணுக்கு தெரியாத என்னென்னவோ பொருட்கள் கலந்திருக்கு. இதெல்லாம் உள்ள போய், எந்த பாகத்தை பாதிச்சி, என்ன மாதிரியான பிரச்னைகளை உண்டாக்கும்னு யாருக்கும் தெரியாது. போதாக்குறைக்கு பான்பராக், கஞ்சா மாதிரி போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகுறவங்க ஒருபக்கம். தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் திறந்துவிட்டதால வயசு வித்தியாசம் இல்லாம ஆணும், பெண்ணும் குடிக்கிறாங்க. இதுமாதிரியான பழக்கங்களால கணையம் தொடங்கி உடல் உறுப்புகள் பலதும் பாதிக்கப்படுது. இதனாலயும் குழந்தை இல்லாத பிரச்னை தலைதூக்கி நிக்குது.

குழந்தைப் பேறு தர்றோம்னு முக்குக்கு முக்கு ஆஸ்பத்திரி திறந்துட்டாங்க டாக்டருங்க. இப்பல்லாம், இங்கதான் கூட்டம் அப்பிக்கிட்டிருக்கு. சிலருக்கு பலன் கிடைக்குது. சிலருக்கு கிடைக்கிறதுல்ல. இதுக்காக கொடுக்கிற மருந்துகள்லயும் ரசாயனம்தான் தலைதூக்கி நிக்குது. இதுவே இயற்கைமுறை மருத்துவத்தை பயன்படுத்தினா, நிச்சயம் கைமேல பலன் கிடைக்கும். ஆனா, இதுக்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

அற்புதம் செய்யும் அரச இலை!

உதாரணமா... அரச இலையை சாப்பிட்டாலே இந்த பிரச்னையை பெரும்பாலும் சரி பண்ண முடியும். அரச இலைக்கு அவ்வளவு அற்புதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. ஏனோ பலருக்கும் இது தெரியுறதில்லை. அரச இலை ஆண்மைக்குறை போக்குறதோட, பெண்களோட கர்ப்பப்பை பிரச்னையை சரிபண்ணி, குழந்தைப்பேறு தரக்கூடிய அற்புதமான மருந்து. அரச மரத்தோட இளம்தளிர் இலைகளை அரைச்சி, தயிர் சேர்த்து காலையில வெறும் வயித்துல 48 நாள் சாப்பிட்டு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே சாப்பிடணும். இந்தக் காலகட்டத்துல உடலுறவு வெச்சுக்கக்கூடாது. பிரச்னையைப்பொறுத்து 48 நாளோ அல்லது 3, 4 மாதமோ சாப்பிட்டு வந்தால் அதன்பிறகு பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால்தான் அரச மரத்தை சுத்தி வந்தா கருத்தரிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அரச மரத்தோட இலை,பழம், பட்டை எல்லாமே கர்ப்பப்பைக் கோளாறை சரி செய்யக்கூடியது. இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியமாகுது.

வாழைப்பூவும் கைகொடுக்கும்!

கர்ப்பப்பை கோளாறுகளுக்கு வாழைப்பூவும் கைகொடுக்கும். வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து, பனங்கல்கண்டு சேர்த்து அவ்வப்போது பெண்கள் சாப்பிட்டு வரலாம்.  வாழைப்பூவை பொரியல் செஞ்சி ஆண் - பெண் ரெண்டு பேருமே சாப்பிடலாம். இதை பிரச்னை தீரும் வரை சாப்பிடலாம்.

ஆலம்பூவை பொடியாக்கி, ஆணும் பெண்ணும் சாப்பிட்டு வந்தா... காலப்போக்குல குழந்தையில்லா பிரச்னை சரியாகும்.

மாதுளம் பூ

மாதவிலக்கு வந்த 3வது நாள்ல இருந்து மொத்தம் ஏழு நாளைக்கு, தினமும் 4 மாதுளம்பூவை கஷாயம் பண்ணி, பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை குடிச்சிட்டு வரணும். அடுத்தடுத்த மாசங்கள்லயும் இதேபோல செய்துட்டு வந்தா... 3வது மாசத்துக்கு பிறகு, கர்ப்பப்பை பிரச்னை முழுசா சரியாகி, குழந்தை தங்குறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

இதேமாதிரி கீழாநெல்லி இலையை எடுத்து அரைச்சி ஒரு கோலிக்காய் அளவு எடுத்து, பால்ல கலந்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். இதையும் மாதவிலக்கான 3வது நாள்ல இருந்து 7 நாள் சாப்பிட்டு வரலாம். அடுத்தடுத்து 3 மாசம் வரை சாப்பிடணும்.

மாதவிடாய் நிக்குற காலத்துல வரக்கூடிய ‘மெனோபாஸ்’, சிலரை பாடாய்படுத்தி எடுத்துவிடும். இதை சரி பண்ணணும்னா வாழைப்பூவை கஷாயம் பண்ணி, அதோட சோம்புனு சொல்ற பெருஞ்சீரகம், சீரகம் எல்லாத்தையும் நெய்விட்டு தாளிச்சி தினமும் சாப்பிட்டு வந்தா, ஒரு வாரத்துல பிரச்னை சரியாகும். ரத்தப்போக்கு நிக்குறதோட, கர்ப்பப்பையில வரக்கூடிய கோளாறுகள் சரியாகி கர்ப்பப்பையும் சுருங்கிப்போயிரும்.

இளம் ஆலம் விழுது 20 கிராம் அளவு எடுத்து அரைச்சி, பசும்பால்ல சேர்த்து மாதவிலக்கு வந்த முதல் நாள்ல இருந்து 5 நாள் வரை சாப்பிட்டு வந்தா... கர்ப்பப்பை கோளறுகள் சரியாகும்.

செலவில்லாத எளிய இயற்கை முறைகள்ல இப்படி நிறைய வைத்தியம் இருக்கு. இதையெல்லாம் சரியான விதத்துல செஞ்சுட்டு வந்தா, நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.

மேலே சொன்ன இந்த வைத்தியமும் சரி, கூடுதலா வேற விளக்கம் எதுவும் வேணும்னாலும் சரி, கடலூர்ல உள்ள வைத்தியர் அன்னமேரி பாட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிடலாம்.

-எம்.மரிய பெல்சின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!