ஹாங்காங் குடை புரட்சி..!

ப்போது ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்திருப்பது, ஹாங்காங் நகரத்தை நோக்கி. கொண்டாட்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த நகரம் இப்போது போராட்டத்தின் அடையாளம் ஆகியிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் படுத்துறங்கி, இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் குடைகளுடன் வந்து கோஷம் எழுப்புகின்றனர். #umbrella movement,# hongkong students,# revolution என்ற ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் பரபரவென பரவுகின்றன. அப்படி என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில்? அந்த மக்களின் கோரிக்கைதான் என்ன?

ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். அயலுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும். 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஹாங்காங்கை பல்லாண்டு காலமாக இங்கிலாந்துதான் கட்டுப்படுத்தி வந்தது. 1997ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இது சீனாவின் கீழ் வந்தது.

கடந்த பத்தாண்டுகளாக யாரோ ஒரு நாட்டின் செல்வாக்கு வரம்பின் கீழ்தான் ஹாங்காங் இருந்து வருகிறது. இதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் அவ்வப்போது எழுந்து வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வந்தது. ஹாங்காங் ஒரு தன்னாட்சிப் பிரதேசம் என்ற போதிலும் அது பெயருக்குத்தான். உண்மையில் அங்கு நடந்ததும், நடப்பதும் சீனாவின் பொம்மை அரசுதான். ஆகவே அந்த மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது என்னவெனில், 1997ல் ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ‘2017-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம்’ என்பதுதான்.

இந்நிலையில்தான் அதற்கும் பிரச்னை வந்தது. தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடுவது முடியாது. சீன அரசு வேட்பாளர்களாக சிலரைத் தேர்வு செய்து அறிவிக்கும். அவர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து மக்கள் வாக்களிக்கலாம் என்றது சீன அரசின் அறிவிப்பு. இதைத் தொடர்ந்துதான் மக்கள் கொதித்து எழுந்தனர். இத்தனை காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த வெறுப்புணர்வு அனைத்தையும் வெளியேக் கொண்டு வந்தனர். இந்த கோபத்தின் முக்கிய நாயகர்கள் அந்நாட்டு மாணவர்கள் தான். சமூக வலைதளங்களில் சீன எதிர்ப்பு கோஷங்கள் தீயாய் பரவின.

ஹாங்காங்கில் குடையை வைத்து போராடுவது ஓர் அடையாளம். மக்கள் தங்கள் குடைகளுடன் வந்து சாலைகளில் அமர்ந்துகொள்வார்கள். ஹாங்காங்கின் இன்றைய போராட்டமும் இப்படித்தான் குடையில் இருந்து தொடங்கியது. நகரத்தின் முக்கியமான வணிக வீதிகள் தொடங்கி, அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக குடை பிடித்து, அணிவகுத்தனர். எங்கும் மனிதத் தலைகள்; காணும் இடம் எங்கிலும் குடைகள். கண்ணீர் புகை குண்டு, பெப்பர் ஸ்ப்ரே, தடியடி என காவல்துறையின் அடக்குமுறை அதிகரிக்க, அதிகரிக்க... குடைப்புரட்சியும் அதிகரிக்கிறது. இப்போது வரை ஹாங்காங் வீதிகளில் குடையும், போராட்டமும் ஓயவில்லை.

மக்களின் கோரிக்கை, தங்களுக்கு ஜனநாயக முறைப்படியான வாக்களிக்கும் உரிமை வேண்டும்; யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட உரிமை வேண்டும் என்பவைதான். இவற்றை மறுத்து போராட்டத்தை ஒடுக்குவதில் சீன அரசு முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியது. இந்தப் போராட்டப் புகைப்படங்கள் உலகம் எங்கும் மின்னல் வேகத்தில் பரவியதால், இதைத் தடுக்க சீன அரசு ‘இன்ஸ்டாகிராமை’ தடை செய்தது. ஏற்கெனவே பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. டுவிட்டருக்கும் கடும் தணிக்கை. டிரென்டிங் ஹேஷ் டேக்குகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. ஆனாலும் கூட மக்கள் சுய உள்ளுணர்வுடன் வீதிகளில் இறங்குகின்றனர். மாணவர்கள் மஞ்சள் நிற ரிப்பனை அணிந்து வகுப்புகளை கவனிக்கிறார்கள். அந்த ரிப்பன் எதிர்ப்பின் அடையாளம். அதே மாணவர்கள் மாலையில் போராட்டக்காரர்களாக வீதியில் இருப்பார்கள்.

எகிப்து, துனிஷியா, லிபியா உள்ளிட்ட அரேபிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற திடீர் மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தன. அதிலும் இளைஞர்களும், சமூக இணையதளங்களும் முக்கிய பங்காற்றின. அந்த வரிசையில் இந்த ஹாங்காங்கும் சேர்ந்திருக்கிறது. சீனாவை பொருத்தவரை இதை அனுமதித்தால், நாளை திபெத் உள்ளிட்ட எல்லையோரத்தில் உள்ள பிரச்னைக்குரிய பிரதேசங்கள் எல்லாம் இதே வழியைப் பின்பற்ற ஆரம்பித்துவிடும் என்று அஞ்சுகிறது. ஆகவே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது சீனாவின் கணக்கு.

ஒரு பொதுவான பார்வையில் முந்தைய நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் இன்றைய விளைவுகள், மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எந்த தலைமையை அகற்ற மக்கள் போராடினார்களோ, அந்த தலைமை அகற்றப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட; கொண்டு வரப்பட்ட தலைமைகள் எதுவும் மக்கள் நலனுக்குரியதாக இல்லை. எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு உதாரணமாக விளங்குகின்றன. ஆகவே மக்கள் போராட்டம் என்பது மக்கள் நடத்தினாலும் கூட, அது மக்களால் உருவாக்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி. போராட்டத்தின் லஹான் வேறு எங்கோ இருக்கலாம். மக்கள் போராடுவதற்கு தூண்டப்படலாம்.

இன்றைய நவீன உலகில் வல்லரசுக்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் அல்ல... சந்தையை கைப்பற்றவும், கட்டுப்படுத்தவும் தெரிந்த நாடுதான் வல்லரசு. இந்த வகையில் ஒரு பக்கம் அமெரிக்காவும், மறுபக்கம் சீனாவுமாக உலகம் இரண்டு திசைகளில் ஒதுங்க ஆரம்பித்துள்ளது. இந்தப் பின்னணியில் ஹாங்காங் போராட்ட செய்திகளை மதிப்பிடும்போது, சீனாவின் ஜனநாயக மறுப்புக் குறித்து, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளிவருவதன் பின்னால் மேற்குலகின் லாபியும் இருக்கலாம் என்ற கோணமும் ஆய்வுக்கு உரியதுதான்.  

- சுதாகர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!