வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (13/11/2014)

கடைசி தொடர்பு:16:27 (13/11/2014)

அங்கன்வாடியிலும் தீண்டாமை கொடுமை!

ருக்கு செல்ல வழி கேட்கும் போதே...‘ இன்னார் தெருவுக்கா.. இல்லை அவங்க தெருவுக்கா...’ என்று நம்மை வலுக்கட்டாயமாக அறிமுகமாக்கிக்கொள்கிறார்கள் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பதி கிராமத்தில்.

அங்கன்வாடி பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பிள்ளைகளை மட்டும் தனியே ஒரு கட்டடத்தில் அமர்த்தி பாடம் சொல்லித்தருவதாக பகீர் புகார் கிளம்பியது இந்த கிராமத்தில்தான்.

சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட கிராமம்தான் இந்த மேட்டுப்பதி. தலித்துகளும் மற்றுமொரு சமூகமும் சரிபாதி எண்ணிக்கையில் வசிக்கும் இங்கு கணிசமாக பிற சாதியினரும் கலந்துவாழ்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு அங்கன்வாடி பள்ளியும் இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடி பள்ளியில் 40 மாணவர்கள் பயில்கிறார்கள்.

ஆனால் வளாகத்தில் இருக்கும் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தலித் குழந்தைகளுக்கென தனியே ஒரு ஓட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்களுக்கு சமைத்துப்போடுவதற்கு ஒரு தலித் பெண்ணையே பணியமர்த்தி அவர்களை தனிமைப்படுத்துவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து மேட்டுப்பதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார் ஆட்சியர். இப்போது தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடி பள்ளியிலயே தலித் குழந்தைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 21 ம் நுாற்றாண்டில் இப்படி குழந்தைகளிடையே சமூக பேதத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பதியை சேர்ந்த சண்முகம் ‘‘ எங்க காலத்துல கூட இப்படியெல்லாம் ஒசந்த சாதிக்கு பிள்ளைகளை ஒரு கட்டடத்திலேயும் தாழ்த்தப்பட்டவங்க பிள்ளைகளை ஒரு கட்டடத்திலேயும் உட்கார வச்சது இல்லை. இப்போ ஒரு நாலு அஞ்சு வருஷமாகத்தான் இப்படி பண்றாங்க, எது எடுத்தாலும் எங்க பிள்ளைங்கனா கொஞ்சம் உதாசீனமாதான் நடத்துறாங்க. இன்னொரு சமூகத்து பிள்ளைகளையெல்லாம் ஒட்டுக்கட்டடத்துல ஃபேனுக்கு கீழ் உட்கார வச்சிருக்காங்க. அங்கயே விளையாட்டு சாமான்கள் எல்லாம் அவர்களுக்கு இருக்கு.

டாய்லெட் வசதியும் அங்கயே இருக்குது ஆனா எங்க வீட்டு பிள்ளைகளை அந்த பள்ளிகூடத்துக்கு வெளியில இருக்கிற ஒரு சின்ன ஓட்டு கட்டடத்துல உட்காரவச்சிருந்தாங்க, அங்க எந்த வசதியும் இல்லை சின்ன இடம்தான், யூரின் போறதுக்கு கூட பக்கத்துல இருக்கிற சோளக்காட்டு பக்கம்தான் போகணும், அந்த பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்தாங்கனா எங்க வீட்டு பிள்ளைகளுக்கு அரை முட்டைதான் கொடுப்பாங்க, எங்க பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்துமாவையெல்லாம் கொடுக்காம அதை மாட்டுக்கு விற்பனை செஞ்சிகிட்டு இருந்தாங்க இப்போ கலெக்டர் வந்துட்டு போனபிறகுதான் ஒண்ணா உட்கார வச்சிருக்காங்க” என்றார் வேதனையான குரலில்..

அடுத்து பேசிய மணிவண்ணன் ‘‘ சாப்பாடுகூட தனித்தனியாதான் சமைக்கிறாங்க. எங்க பிள்ளைகளுக்கு சமைப்பதற்கு தனியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த பெண்ணையே வேலைக்கு வச்சிருந்தாங்க. சின்ன பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல போய் இப்படி பண்றாங்களே இது நியாயமா..? அவுங்க பிள்ளைகளை மட்டும் காம்பவுண்டுக்குள்ள இருக்கிற கட்டடத்துல பாதுகாப்பா உட்கார வச்சிருக்காங்க, தாழ்த்தப்பட்டவங்க என்பதால எங்க பிள்ளைகளை ரோட்டோரத்துல பாதுகாப்பு இல்லாம உட்கார வச்சிருக்காங்க. எங்க உயிர் மட்டும் உயிர் இல்லையா, எதாவது ஆச்சினா யார் பதில் சொல்வாங்க சொல்லுங்க..? கலெக்டர் கேட்டதுக்கு “இடப்பற்றாக்குறை“னு சொல்லி சமாளிக்கறாங்க. அதே கட்டடத்துல 50 பிள்ளைகளெல்லாம் உட்கார்ந்து படிச்ச காலம் இருக்கு. இப்போ 40 பேரை உட்கார வைக்க முடியலைனு சொல்றாங்க!" என்றார் ஆவேசமாக

இது தொடர்பாக விளக்கம்பெற மேட்டுப்பதி அங்கன்வாடி பள்ளிக்குச் சென்றோம் அங்கன்வாடி ஊழியர் நிர்மலா ‘‘அவர்கள் சொல்வது போல எதுவும் கிடையாது இங்க நாற்பது பிள்ளைங்க இருக்காங்க அவங்களுக்கு  போதுமான இடவசதி இங்க இல்லை அதனாலதான் அங்க பாதி பிரிச்சு உட்காரவச்சோம், அதிலும் எல்லா சாதி பிள்ளைகளும் கலந்துதான் இருந்தாங்க. யாரையும் தனிமை படுத்தவில்லை, இரண்டு அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டு உதவியாளர்கள் இருந்து நல்லாதான் பார்த்துகிட்டோம்.

கலெக்டர் வந்து பார்த்துட்டு புது கட்டடம் ஒதுக்கித்தருவதாக சொல்லியிருக்கிறார், அதுவரைக்கும் எல்லோரையும் ஒரே கட்டடத்தில் உட்காரவைக்கச்சொல்லியிருக்கிறார்“ என்றார்.

எதிர்கால முன்னேற்றத்துக்கு முன்னோட்டமாக குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்கத் துவக்கும் அங்கன்வாடி பள்ளியிலேயே அவர்களுக்குள் பிரிவினை விதையை விதைப்பது கொடுமை!

-எம்.புண்ணியமூர்த்தி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க