குழந்தைகள் இயற்கையாக மரணிப்பதில்லை! | dharmapuri babies dead, o.pannerselvam statement,

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (20/11/2014)

கடைசி தொடர்பு:13:40 (20/11/2014)

குழந்தைகள் இயற்கையாக மரணிப்பதில்லை!

ருமபுரி அரசு மருத்துவமனையில் இதுவரை 13 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்குள் நடந்த இந்த குழந்தை மரணங்கள் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த மரணங்களுக்கு அரசியல் தலைவர்களும் முதல்வரும் சொல்லும் காரணங்கள்தான் ஏற்புடையதாக இல்லை.

இந்தியாவின் பிற மாநிலங்களை விட குழந்தை இறப்பு விகிதம் குறைவான மாநிலம் தமிழகமும், கேரளமும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட இல்லாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில், தமிழக கிராமங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

படுக்கை பற்றாக்குறைகள், மருத்துவ தாதிகள் பற்றாக்குறை, மருத்துவர்களே இல்லாத நிலை என்று பல குறைபாடுகள் இருந்தாலும் கூட கிராமப்புற அளவில் கூட கர்ப்பிணி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏழ்மை என்பது கர்ப்பிணிகளைத் தாக்கும் கொடிய நோயாக உள்ளது. கர்ப்ப காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ சிகிச்சைகள் என்பதில் பாரிய வேறுபாடுகளும் பாரபட்சங்களும் உள்ளன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

‘’தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங் குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது.

இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவ மனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும்” என குழந்தைகள் மரணத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டையும், குறை பிரசவத்தையும் காரணம் காட்டியிருக்கிறார்.

ஊட்டசத்துக் குறைபாடு, குறைபிரசவம் எதுவாக இருந்தாலும் அது ஆண்டு முழுக்க நடக்கும் மரணங்கள்தான். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நடப்பதில்லை. அடுத்தடுத்து இத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால் மருத்துவக் குறைபாடு, மருந்துகளின் தரம் உட்பட பல காரணங்கள் இதன் பின்னால் இருக்கக்கூடும். ஏனென்றால் குழந்தைகள் இயற்கையாக மரணிப்பதில்லை. இந்த மரணங்களின் பின்னால் சமூகக் காரணங்கள் உள்ளன. அதை கண்டறிந்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமை.

- ஆதவன்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்