இந்தியாவில் இணைய அடிமைகள் அதிகம்: ஆய்வில் தகவல் | Internet usages India status

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (02/12/2014)

கடைசி தொடர்பு:12:49 (02/12/2014)

இந்தியாவில் இணைய அடிமைகள் அதிகம்: ஆய்வில் தகவல்

ணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த 'ஏடி கியார்னே குலோபல் ரிசர்ச்' எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இணைய பயன்பாடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

'கனெக்டெட் கன்ஸ்யூமர்ஸ் ஆர் நாட் கிரியேடட் ஈக்வல்' ( Connected Consumers Are Not Created Equal: A Global Perspective.) எனும் இந்த ஆய்வு, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது. வாரம் ஒருமுறையேனும் இணையத்தை பயன்படுத்துபவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் 1,000 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் விழித்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு மணிக்கும் இணையத்தில் தொடர்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். சர்வதேச அளவில் இது 51 சதவீதம். அமெரிக்காவில் 51 சதவீதம். சீனாவில் 36 சதவீதம். ஜப்பானில் 39 சதவீதம். ஆனால் பிரேசிலில் 71 சதவீதம். நைஜிரியாலும் இது அதிகம் என்பதுதான் ஆச்சர்யம். இணைய தொடர்பு என்றால், ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறையேனும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் என்று பொருள். (அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள்தான் இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்).

இணைய பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் 9 நாடுகள் மற்றும் 25வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்க பிரதிநிதித்துவத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

இணைய பயன்பாட்டிற்கு மூன்று விஷயங்கள் முக்கியமாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, சுய வெளிப்பாடு மற்றும் மின்வணிகம் போன்ற இணைய சேவைகளை பயன்படுத்துவது ஆகியவற்றுக்காக இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் சுயவெளிப்பாட்டிற்காக இணையத்தை பயன்படுத்துவது அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக் பயன்பாட்டிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 97 சதவீதம் பேர் ஃபேஸ்புக்கில் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனிடையே மாணவர்களின் இணைய பயன்பாடு பற்றிய ஆய்வு ஒன்று 93 சதவீத இந்திய மாணவர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 73 சதவீத மாணவர்கள் கல்விக்காக இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்பதுதான்.

இணையத்தை கல்வி சார்ந்த தகவல்களை பெற நம்பகமான இடமாக கருதுவதும் அதிகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் பற்றி மற்ற இடங்களில் தெரிந்து கொண்டாலும் இணையம் மூலம் அதை சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சர்வதேச ஆய்வு: http://www.atkearney.com/consumer-products-retail/connectedconsumers/full-study/-/asset_publisher/Aj6WmQ8WDHBx/content/connected-consumers-are-not-created-equal-a-global-perspective/10192


- சைபர்சிம்மன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close