எதிர்க்கப் பழகுங்கள்! | Habit to resist!

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (10/12/2014)

கடைசி தொடர்பு:12:48 (10/12/2014)

எதிர்க்கப் பழகுங்கள்!

பொது இடங்களில் பாலியல் கேலி, சீண்டல், தொல்லை தரும் ஆண்களை அடக்குவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்வது பற்றியும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தமிழ்நாடு கடலோர காவல்படையின் கூடுதல் டிஜிபி டாக்டர் சி.சைலேந்திர பாபு.

எதிர்க்கப் பழகுங்கள்!


பொதுவாக, பேருந்து, ரயில், தியேட்டர், கூட்ட நெரிசல்கள் போன்ற பொது இடங்களில் ஈவ்டீஸிங் செய்யும் கயவர்கள், தைரியமான பெண்களைவிட, பயந்த சுபாவம் கொண்ட பெண்களைத்தான் இலக்காக்குவார்கள். காரணம், தங்களுக்கு ஆண்கள் தொல்லை தந்தாலும், அதை எதிர்க்கத் தயங்கி அந்தப் பெண்கள் சகித்துக்கொள்வது அல்லது பிரச்னை எதுவும் இன்றி ஒதுங்கிவிடுவதுதான். இதுதான் தவறு செய்வதற்கான பலத்தை அந்த ஆண்களுக்குத் தருகிறது. எனவே, ஒரு ஆண் தன்னை பாலியல் சீண்டல் செய்கிறான் என்றால், அது எந்த இடமாக இருந்தாலும், முறைப்பதில் தொடங்கி, சத்தம் போட்டு அவனை எச்சரிப்பது, திட்டுவது, அந்தக் கூட்டத்திடம் சொல்லிக் கேவலப்படுத்துவது என்று அந்தப் பெண் தன் எதிர்ப்பை வெளிப்படையாக, அவன் வெலவெலத்துப் போகும்படி காட்ட வேண்டும்.

பெண்களுக்கு முக்கியம் ஃபிட்னஸ்!

‘இரண்டு, மூன்று பேர் சேர்ந்த கும்பலிடம் மாட்டிக்கொள்ளும்போது, நாங்கள் எப்படி எதிர்ப்பது?’ என்று பெண்கள் கேட்கலாம். நீங்கள் ஃபிட்னஸுடன் இருந்தால், அது சாத்தியமே. ஈவ்டீஸிங் செய்பவர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் மேன்கள் அல்ல. எனவே, ஒரு பெண் ஃபிட்டாக இருந்து, ஈவ் டீஸிங் கும்பலிடம் இருந்து தப்பித்து ஒரு கிலோ மீட்டர் வேகமாக ஓடினால், அவர் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம். எனவே, பெண்கள் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதுடன், காரத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதும் சிறந்தது.

‘பெப்பர் ஸ்பிரே’ வைத்துக்கொள்ளுங்கள்!

பெண்கள் தங்கள் ஹேண்ட் பேகில் பெப்பர் ஸ்பிரே வைத்துக்கொள்ளப் பழகினால், ஆபத்து நேரங்களில் குற்றவாளியின் முகத்தில் அதை ஸ்பிரே செய்துவிட, அவனால் ஒரு அடி கூட நகர முடியாது. இந்த ஸ்பிரேயை பயன்படுத்துவது குறித்து ஒரு சின்ன பயிற்சி எடுத்துவிட்டால், பாதுகாப்பு உங்கள் கைப்பைக்குள்!

ஆபத்து நேர அழைப்பு எண்கள்!

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின் எந்த இடத்தில், எந்த நேரத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை அனுபவிக்க நேர்ந்தாலும் 100 அல்லது பெண்களுக்கான ஹெல்ப் லைன் நம்பரான 1091 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இடம், அந்த ஆணின் அடையாளம் ஆகியவற்றைச் சொல்லுங்கள். நிச்சயமாக உதவி கிடைக்கும், நடவடிக்கை பாயும். மேலும், ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உதவியையும் நாடுங்கள்.

தண்டனைகள் என்னென்ன?

இந்திய சட்டத்தின்படி ஈவ்டீஸிங்  என்ற சொல் கிடையாது. பெண்களைத் துன்புறுத்துதல் அல்லது ஒரு பெண்ணின் கௌரவத்தை சீர்குலைத்தல் என்று அது குறிப்பிடப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் படி, ஒரு பெண்னை மானபங்கம் செய்தாலோ, அவர் மீது தாக்குதல் நடத்தினாலோ, பலவந்தப்படுத்தினாலோ 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை உண்டு. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, ‘பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவும் இதில் அடங்கும்.

தைரியமாகப் புகார் கொடுங்கள்!

பெரும்பாலும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்து, தொடர்ந்து குற்றங்கள் நடைபெற காரணமாகிறது. குற்றவாளிகளே தைரியமாக இருக்கும்போது, பெண்கள் ஏன் தயங்க வேண்டும்? தைரியமாக காவல் நிலையம் வாருங்கள். உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவனுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கச் செய்யலாம். காவல் நிலையத்தில் நீங்கள் புகாரை சமர்பித்த காவலரிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லுங்கள். அரசு தரப்பு பிரதிநிதியாக அவர் உங்களுக்காக வாதாடுவார். அவரே அந்த வழக்கையும் நடத்துவார்.

ஆண்களுக்கான எச்சரிக்கை!


இது என் அறிவுரை. பெண்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு பாலியல் தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றம். சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்தால்தானே என்ற உங்களின் அசட்டு தைரியத்தை, இன்று காவல் நிலையங்களில் தைரியமாகப் புகார்களைப் பதிவு செய்து வரும் சகோதரிகள் சுக்குநூறாக உடைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் அவர்களுக்கு எந்த அவமானமும் இல்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பாலியல் குற்றத்துக்காக உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது உங்களுக்கும், இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த உங்கள் குடும்பத்துக்குமான அவமானமே. நாகரிகம் பழகுங்கள் ஆண்களே!’’

- கே. அபிநயா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்