'ஏறினால் ரயில்..... இறங்கினால் ஜெயில்..தோழமையை இழந்து நிற்கிறோம்!' | freedom fighter mayandi bharathi death madurai imprisionment for 13 years

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (26/02/2015)

கடைசி தொடர்பு:15:11 (26/02/2015)

'ஏறினால் ரயில்..... இறங்கினால் ஜெயில்..தோழமையை இழந்து நிற்கிறோம்!'

ஐ.மாபா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி ஐ.மாயாண்டி பாரதி கடந்த 24 ந்தேதி  மதுரையில் காலமானார். 99 வயதை கடந்த ஐ.மாபா, தனது வாழ்நாளை 13 ஆண்டுகள் வரை சிறையில் கழித்தவர். ’ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்’ என்ற வார்த்தை ஐ.மாபாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை.

இருளப்பன், தில்லையம்மாளுக்கு மகனாக பிறந்த மாயாண்டி பாரதி தனது 14 வது வயதிலே சுதந்திர போராட்டதில் பங்கெடுத்தவர்.

“ நாங்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது தெருவில் வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே! என்று சத்தமாக சொல்லிக்கொண்டு மதுரை வீதிகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக செல்வார்கள். அதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு பைகளை தூக்கி எறிந்துவிட்டு அவர்களுடனே சென்று விடுவேன். தடையை மீறி ஊர்வலம் சென்று முதல் முறை கைதானபோது, போலீஸ் பள்ளிக்கூடபையன் என்று திருப்பி அனுப்பி விட்டது. ஆனால் தொடர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டதால் கைது செய்தார்கள்” அதுதான் என்னுடைய முதல் கைது என்று தன்னை சந்திக்க வருபவர்களிடம் நினைவு கூர்வார் மாயாண்டி பாரதி.

கடந்த மாதம் குடியரசு தின விழாவிற்கு மதுரை காந்தி மியூசியத்தில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தயாராகும் பொழுது கழிவறையில் வழுக்கி விழுந்தவர், கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் இருந்து உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மகபூபாளையத்தில் உள்ள கம்னியூஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியும், செங்கொடியும் போர்த்திய அவரது உடலுக்கு பொது மக்கள் மற்றும் தோழர்கள் மரியாதை செய்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்குகாக தெருவில் இறங்கி போராடி சிறை சென்றவர் ஐ.மாபா.  முன்னாள் குடியரசு தலைவர்களான சஞ்சீவ ரெட்டி, வெங்கட்ராமன் முதல் ஜீவா, காமராஜர் வரை பல்வேறு முக்கிய நபர்களுடன் சிறையில் இருந்து இருக்கிறார். அவரது எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை. போருக்கு தயார், தூக்கு மேடைப்பாலு, படுகளத்தில் பாரத தேவி, வெள்ளையனே வெளியேறு, பாரதத்தாயின் விஸ்வரூபம், வெடி குண்டுகளும் வீரத்தியாகிகளும், அரசு என்றால் என்ன? போன்ற நுால்களையும் அவர் எழுதி இருக்கிறார். 

ஐ.மாபாவின் துணிச்சலான செயல் என்று நீதிமன்றமே பேசிய சம்பவம் உண்டு. நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி “உனக்கு சொத்துக்கள் இருக்கா? உன்னை ஜாமீனில் விடுகிறேன்” என்றதும் ஐ.மாபா “சொத்துக்கள் நிறைய இருக்கு, ரயில்வே ஸ்டேஷன், மீனாட்சியம்மன் கோவில், மங்கம்மா சத்திரம் எல்லாமே எங்களுடையதுதான்”. என்று ஆவேசமாக கூற, ஒரு மாத காலம் கூடுதலாக சிறைத்தண்டனை பெற்றார்.     
    
குழந்தைகள் இல்லாத ஐ.மாபா மனைவி பொன்னம்மாள் இறந்த பிறகு, தனிமையில் கழிக்காமல் தெருவில் இருக்கும் குழந்தைகளை எல்லாம் வாரி அணைத்துக் கொள்வார். குழந்தைகளின் மத்தியில் அவருக்கு மிட்டாய் தாத்தா என்ற செல்லப் பெயர் உண்டு.

பாரத சக்தி, லோக் சக்தி, நவசக்தி, தீக்கதிர் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி பல்வேறு செறிவான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவரது கட்டுரைகள் சுதந்திர போரட்டத்தை கிளர்ச்சியடைய செய்கிறது என ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய பத்திரிகை அலுவலகம் தேடிச் சென்றபொழுது பல்வேறு முறை, அவரிடமே மாயாண்டி பாரதி எங்கே? என்பார்களாம். “ அவர் வெளியே சென்றிருக்கிறார். இன்று போய் நாளை வாங்க,” என்று சாதுர்யமாக பதில் சொல்லி பலமுறை காவலர்களை ஏமாற்றி இருப்பதாக அடிக்கடி சொல்லுவார் ஐ மாபா.

இவரது மரண செய்தி அறிந்ததும் இரவு 12 மணிக்கு அடித்துபிடித்து வந்தார் நல்லகண்ணு. “ 70 ஆண்டு கால நட்பை இழந்துவிட்டேன். 'ஏறினால் ரயில்.. இறங்கினால் ஜெயில் ' என்ற வரியை வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்தவர். சிறந்த எழுத்தாளாராக இருந்து தீக்கதிர், ஜனசக்தி பத்திரிக்கையில் பணியாற்றி, மிகுந்த போராட்ட குணத்தோடு வாழ்ந்தார். 70 ஆண்டுகால தோழமை மறைந்து விட்டது. அவருக்கு என்னுடைய வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று உருகினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் “ஐ.மாபா வின் இழப்பு பெரும் இழப்பு. கண்முன்னே வாழ்ந்த ஒரு வரலாற்றை இழந்து நிற்கிறோம்” என்றார் கண்ணீருடன்.

“விடுதலைக்காக போராடி, சிறை சென்ற பிறகு குடும்பம், அவர்களது பிள்ளைகள், உற்றார் உறவினர் என்று பல்வேறு உறவுகளை இழந்து நின்ற நபர்களை ஐ.மாபா வாரி அணைத்துக்கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக அமைப்பை உருவாக்கி, அவர்களுக்கு ஓய்வூதியம் பெற்று தருவது உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்குகாக போராடினார். முதன் முதலில் சுதந்திர போராட்ட தியாகிகளை ஒன்றிணைத்தவர் ஐ.மாபாதான்.” அவருக்கு நாங்கள் பெரும் கடமைப்பட்டு இருக்கிறோம்“ என்றார் அஞ்சலி செலுத்த வந்த தியாகி ஒருவர்

“தமிழ்ச் சிறுகதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் தனது இளமை பருவத்தில் கம்னியூஸ்ட் கட்சி சென்னை அலுவலகத்தில் தங்கி புத்தகம் படிப்பது, பொதுவுடைமை நூல்களை படிப்பது என்று அறிவு ஜீவியாக இருந்தார். அடிக்கடி பல்வேறு சந்தேகங்களை கேட்பதால் அவரை கடலூர் கட்சி அலுவலகத்திற்கு மாற்றினார்கள். அவருக்கு சென்னையை தாண்டி போக விருப்பம் இல்லை. கடைசியில் ஐ மாபாவை சந்தித்து ஆலோசனை கேட்டார். “ உண்ணாவிரதம் இருப்பா, உனது நிலைப்பாட்டில் உண்மையாக இருந்தால் வெற்றி பெறுவாய்” என்றதும் அப்படியே செய்தார் அவர். கட்சி அலுவலகத்திற்குள் ஒரு இளைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றதும் ஆடிப்போனது கட்சி அலுவலகம்.

அரசு முடிவுகள், பல்வேறு தொழிற்சாலைகளை பல்வேறு போராட்டங்களில் மடக்கிய கம்னியுஸ்ட் கட்சியையே ஒரு உண்ணாவிரத்தில் மடக்கினார் அந்த எழுத்தாளர். கடைசியில் அவரது உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. பின்னாளில் அவர் தமிழகத்தின் ஸ்டார் எழுத்தாளராக போற்றப்பட்டார். “ ஐமாபா இல்லை என்றால் நான் இல்லை. அன்று எழுதும் சூழலை உருவாக்கி கொடுத்தவர் ஐ.மாபா” என்று உருகுவார் அந்த எழுத்தாளர்” என நினைவு கூர்ந்தார் பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு எழுத்தாளர். இப்படி பல்வேறு ஆளுமைகளை உருவாக்கியவர் ஐ.மாபா.

உடல்நிலை குன்றிய நிலையிலும் நாட்டின் மீதான அக்கறையுடனே இருந்தார். சில நாட்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை சந்தித்து கிரானைட் கொள்ளைக்கு எதிராக பேசியவர், ' பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ? நாங்கள் சாகவோ? ஆண்பிள்ளைகள் அல்லவோ அழுது கொண்டு இருப்போமோ? என்று பாரதி பாடிய பாடலை சத்தமாக பாடியவர், 'இது இரண்டாவது சுதந்திர போராட்டப்போர். ஊழலுக்கு எதிரான போர் உங்களுடன் நான் இருக்கிறேன்' என்று உற்சாகபடுத்தி பேசினார்.

தனது 99வயதிலும் நாட்டை பற்றியே சிந்தித்து வாழ்ந்தவர் ஐ.மாபா. அதனால்தான் ஒரே நேரத்தில் தேசிய கொடியும்,செங்கொடியும் ஒரே நேரத்தில் அவரது உடலுக்கு போர்த்தினர்

ஐமாபாவின் நீண்ட நாள் ஆசை பாரதமாதா  சிலை செய்து அதனை பூஜித்து வாழவேண்டும் என்பது. ஆனால் இறுதிவரை அவரது ஆசை நிறைவேறவே இல்லை.   .      .  

- சண்.சரவணக்குமார்


படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்,

நா.ராஜமுருகன் (மாணவ புகைப்படக்காரர்  )

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்