'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்! | DIG, SP's Change: Halted sand smuggling murders?

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (18/03/2015)

கடைசி தொடர்பு:19:16 (18/03/2015)

'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்!

விரும்பத்தகாத செயல் எப்போதாவது நடந்தால் அதை அசாதாரணம் எனச் சொல்லலாம். எப்போதுமே நடந்துகொண்டிருந்தால் அதை எப்படி சொல்லவது? ‘அதெல்லாம் சாதாரணம்’ என்றுதானே சொல்லமுடியும்? அப்படித்தான் ஆகிவிட்டது தென்மாவட்டங்களில் அடிக்கடி நடந்துவரும் ‘ஆற்று மணல் கொள்ளை... அதனால் ஏற்படும் கொலை’ சம்பவங்கள்.

‘மற்ற உயிரினத்திற்கு ஐந்து அறிவு மட்டும்தான் இருக்கிறது’ என ஆறு அறிவு உள்ள  மனிதன் கூறுகிறான். அப்படிப்பட்ட கூடுதல் அறிவுள்ளவனிடத்தில்தான் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கி இருக்கிறது. அதுதான் இப்போது பிரச்னையாகவும் இருக்கிறது.

எதிர்கால நோக்கம் இருந்ததால் நல்ல வழி, கெட்ட வழி என பிரித்து பார்க்க வேண்டிய அவசியமும் வந்தது. கூடிவாழ்வதற்கு மொழி அவசியம் என்பதுபோல், நல்ல வழியை வகுத்து அதன்படி நடக்க செய்யும் ஆன்மிகமும் அவசியமாக இருந்தது. வாழ்க்கை போராட்டத்தில் உருவான சாதி என்கிற இன குழுதான் ஆறு அறிவுள்ள மனிதனுக்கு பிரச்னையாகவும் ஆகியிருக்கிறது.

எதிர்கால நோக்கம் மனிதனுக்கு ஆசையை தூண்டுகிறது. நல்லவழியை காட்ட வேண்டிய ஆன்மிகம் மதமாக உருவெடுத்ததால் அதில் அதிக ஈடுபாடு கொண்ட மனிதன் யானையைபோல், ‘மதம்’ பிடித்து அலைய துவங்கிவிட்டான். பொருளாதார வேறுபாட்டில் உருவான சாதி, மனிதனை குழுக்குழுவாக பிரித்துவிட்டது மட்டுமில்லாமல் மக்களிடையே உள்ள இணக்கத்தை சிதைத்து வருகிறது. இதுபோதாதென்று ஒவ்வொருவருக்குள்ளும் தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கபட்ட மொழியும் வெறியை தூண்டும் ஆயுதமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் புரிந்து சரிபடுத்தவேண்டிய இடம் அரசாங்கம்.

ஆனால், அங்கு இருக்கும் ஆயிரத்து எட்டு அரசியல் சதுரங்கத்தில் இதை ‘எப்படி கையாளுவது’? என்கிற விதமே தெரியாமல் விழிக்கிறது அரசாங்கம்.   
 
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், குடிநீர், தொழில் அத்தனைக்கும் தேவைப்படும் தண்ணீரை கொடுப்பதுபோல் மணலையும் தாமிரபரணி ஆறு கொடுக்கிறது. அந்த மணலை வெளியிடங்களுக்கு கடத்தியதின் அடிப்படையில் சுமார் 120 கீ.மி தூரம் கொண்ட அந்த ஆறு தற்போது களையிழந்து கிடக்கிறது. இதனை காணப்பொறுக்காத சில சமூக ஆர்வலர்கள் திரண்டு, மணல் அள்ளுவதை தடுத்தனர். அப்படிப்பட்ட தகராறில் முனைப்பாக போராடி வந்த கொங்கராயன்குறிச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவசாகாயம் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சமீபகாலமாக நெல்லை மாவட்டத்தில் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் கொலை சம்பவம் நடந்து வருகிறது. வெவ்வேறு சமூகத்தினருக்குள் நிகழ்த்தப்பட்ட அந்த சம்பங்களை தொடர்ந்து, சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பாஸ்கரன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

பாஸ்கரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வந்த எம்.எல்.ஏ.வான டாக்டர் கிருஷ்ணசாமி, ''இந்த கொலை முழுக்க முழுக்க மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் நிகழ்த்தப்பட்டது. மணல் கடத்தலே இல்லை என்கிற தோற்றத்தை உருவாக்க அதிகாரிங்க முயற்சி பண்றாங்க. அவங்க அணுசரனையில்தான் மணல் கடத்தலே நடக்கிறது. அதிகாரிங்க நேர்மையாக நடந்திருந்தால் இந்த கொலைகளை தடுத்திருக்கலாம். அவர்கள் ஒரு பிரிவினருக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் இப்படி ஆகிவிட்டது. இதுபோன்ற சம்பவத்தை இல்லை என்று முதல்வரே மறைப்பதால்தான் குற்றவாளிகள் தைரியமாக கொலை செய்கிறார்கள். அரசு பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த உக்கிரம் குறைவதற்குள் அதே பகுதியிலுள்ள அரசு பண்ணை ஒன்றின் காவலாளியாக இருந்த துரைப்பாண்டி (60) கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த உலகநாதனுக்கும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவ பதற்றம் குறையாமல் இருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கொங்கராயன்குறிச்சியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் பிச்சையா (54) கொலை செய்யப்பட்டார். இது தேவசகாயம் கொலைக்கு பழிக்கு பழியாக நடத்தப்பட்டது என சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து நடந்து வரும் கொலை சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யான துரையிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அவர் பிஸியாக இருக்கிறேன் என தொடர்ந்து மறுத்துவிட்டதால், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யான விஜயகுமாரிடம் கேட்டோம், ‘‘நான் இங்கே பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. இரவு ஒரு மணிக்கும் மேலாக இந்த பகுதியில் ரோந்து செய்து வருகிறோம். இருந்தாலும் இப்படி நடந்து விடுகிறது. இந்த கொலை பழிக்கு பழியாக நடத்தப்பட்டதுதான்’’ என்றார்.

மணல் கொள்ளை சம்பந்தமாகத்தான் பிரச்னை ஏற்படுகிறது அதனால்தான் கொலை நடக்கிறது என்கிறார்களே? என்றதற்கு, ‘‘மணல் கொள்ளை மட்டும்தான் பிரச்னை என்பது இல்லை. அதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான். பெரிய அளவில் ஆற்றுமணல் கொள்ளை இல்லை. குரு மணல் திருட்டுதான் ஆங்காங்கே எதாவது நடக்கிறது. விடாம விரட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்’’ என்றார்.

ஆனால், அந்த பகுதியைச் சேர்ந்த சிலரோ, ‘‘மணல் கடத்துகிற வாகனம் மெயின் ரோடு வழியா போகாம ஒவ்வொரு ஊர் தெருக்கள் வழியாகவும் செல்கிறது. அதை தட்டி கேட்கும்போதுதான் கொலை வரையிலும் போய் நிற்கிறது'' என்கின்றனர்.

அப்படி உருவான பகை இப்போ சாதி ரீதியாக உருவெடுத்து இருக்கிறது. எப்பவோ உள்ள பகையை பயன்படுத்தி கூலிப்படைகள், கொலைகளை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த வழக்குகள் சம்பந்தமாக அனைத்து தரப்பிலும் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான ஸ்ரீவை.சுரேஷ், துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி நெல்லை, தூத்துக்குடி எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களாவது ஏதாவது வித்தை செய்து மணல் கொள்ளையால் நடக்கும் கொலைகளை தடுக்கிறார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்...

-எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்