வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (09/04/2015)

கடைசி தொடர்பு:13:10 (10/04/2015)

ஹனிபா எனும் அன்பன்!

''உலகில் வேறு எந்த இயக்கமும், அதன் வளர்ச்சியும், கலையை சார்ந்து முன் னேற்றம் கண்டிருந்ததில்லை. ஆச்சர்யமாக தமிழகத்தில் திராவிட இயக்கத் தின் வளர்ச்சி அத்தனை கலைகளையும் பயன்படுத்தி வளர்ந்தது. அதில் இசைக்கலையில் தன் கம்பீர குரலினால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கள் சிலர்.

அதில் தவிர்க்கவியலாதவர் நாகூர் ஹனிபா'' என நெகிழ்வான குரலில் ஹனிபா புகழ் பேச ஆரம்பித்தார் ஹனிபா குழுவில் கீபோர்ட் வாசித்தவரும் ஹனிபாவின் பதினைந்து வருட நண்பருமான திருச்சி கென்னடி.

''கொண்ட கொள்கையில் நழுவாமல் தி.மு.க.-விலேயே இறுதி வரையில் இருந்தவர். இஸ்லாம் சமுதாயத் திற்கு பெரும் இழப்பு அவரது இழப்பு. இஸ்லாம் சமுதாயத்தில் என்றும் இவருடைய புகழ் நிலைத்து நிற் கும். யாருக்குமே பயப்பட மாட்டாரு. என் சிறுவயதில் என் அப்பா சுந்தரராஜனை பார்க்க எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். அப்போது என்னையும் ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்பாரு. நாகூர் ஹனிபாவின் எதிரொலி என்று என்னை மக்கள் இன்று அழைக்கிறார்கள்.

மேடை ஏறிவிட்டால் கச்சேரி முழுவதும் தன்னுடைய பாடல்களால் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பார்.   நாகூர்ல என் முதல் கச்சேரியின்போது, அவர்  'இவர் பாடினத நான் இன்னிக்குத்தான் நேர்ல பார்க்கிறேன். இவரை எல்லா தர்காவிலும் பாடவையுங்கள். நல்லிணக்கம் வளரும்'னு மனதார பாராட்டினாரு.

1991-ம் ஆண்டு திருச்சி தாராநல்லூர் தர்காவுலயும்,  நான்கு முறை தி.மு.க மாநாட்டிலேயும், இரண்டு முறை கத்தார், பஹரில், துபாய்லேயும் அவர்கூடப் போய் வாசித்திருக்கேன். அவருடைய பாட்டுக்கு நல்லா வாசிச்சா, நல்லா மனதாரப் பாராட்டுவார்.

பதினோரு வயசுலயே பாட ஆரம்பிச்சிடார். அறிஞர் அண்ணாவின் தீவிர தொண்டர். கலைஞருடைய தீவிர ரசிகர். ஹனிபா இல்லேன்னா தி.மு.க. இல்லேன்னு சொல்ற அளவுக்கு அவருடைய பங்களிப்பு அந்தக்காலத்தில் அதிகம். கார்ல தி.மு.க. கொடி கிடையாது, தி.மு.க. வேஷ்டி கட்ட மாட்டாரு. காமராஜர் ஆட்சி காலத்துல கச்சேரிக்குப் போனா, அங்க இரண்டு தி.மு.க. கட்சி பாடல் பாடுவாரு. தர்காவுக்கு போனா அங்க இரண்டு தி.மு.க. பாடலைப் பாடுவார். கச்சேரிக்கு புக் பண்ணும்போதே “என்னை எந்த கச்சேரிக்குக் கூப்பிட்டாலும், அங்க தி.மு.க. பாடல்களை கண்டிப்பா பாடுவேன். இதை ஒத்துக்கிட்டா நான் கச்சேரிப்பண்றே”னு கறாரா சொல்லிடுவார்.

ஒரு கச்சேரியில் தி.மு.க. பாடலைப் பாடும்போது குறுக்கிட்ட சிலர், காமராஜர் பாட்டைப் பாடுய்யா...னு சொல்லி தகராறு பண்ண, டென்ஷனான ஹனிபா,  'அப்படில்லாம்  பாடமுடியாது... ஒரு அப்பன், ஆயிக்கு பிறந்திருந்தா மேடைக்கு வாங்கடா' னு சொல்லி மைக்கத் தூக்கினதாக சொல்வாங்க. அந்தளவுக்கு துணிச்சலானவர்.  திமுக வளர்ந்த காலத்தில்  ஒவ்வொரு இடத்திலும் தி.மு.க. பாடல்களை கண்டிப்பாக பாடுவாராம்.

அவரது பாடல்களில் எல்லா மதத்தினைரையும் கவர்ந்த பாடல் 'இறைவனிடம் கையேந்துங்கள்' பாடல். 
''ஹனிஃபாவின் சசோதரர் பட்டறை வைத்திருந்தாராம். அண்ணனும். அவரும் கடையில இருக்கும்போது பாடிட்டே இருப்பாராம். அப்போ திருச்சி, கலிஃபுல்லா (கவாலி பாடகர்) உருதுமொழி பாடகர். அவரோட மேடையில இவரை தமிழ் பாடலைப் பாடக் கூப்பிட்டாராம்.

அப்படித்தான் ஹனிபா பெயரும் வெளியே தெரிந்து புகழ்பெற்று பெரிய அளவில் பாட ஆரம்பிச்சாராம். வரகனேரி மேட்டுத்தெருதான் இவரோட பாட்டுப் பயணம் ஆரம்பமான இடம்.  அங்கே மாசம் 10 கச்சேரி நடக்கும். முதல் முதல்ல தமிழ் இஸ்லாமிய கீதம் பாடியவர் இவர்தான்னு அப்பா சொல்வார். திமுக மேடை கள்ல கூட்டத்துல எதாவது சத்தம் அதிகமாச்சுனா உடனே அண்ணா, ஹனிபாவக் கூப்பிடுங்க னுசொல்லி கச்சேரிப் பண்ண சொல்லுவாராம். குண்டூசி விழுந்தா சத்தம் கேட்குமாம் அந்த அளவுக்கு அமைதியாக 'அழைக்கிறார் அழைக்கிறார், அண்ணா அழைக்கிறார்' என இவர் பாடுவதை அண்ணா உட்பட அத்தனை பேரும் மெய் மறந்துபார்த்துக்கொண்டிருப்பார்களாம். 

இடியாப்பம், கறி, டீ அவருக்கு பிடித்த  உணவுகள். வேறு எந்த ஒரு சின்ன கெட்டப் பழக்கமும் கிடையாது. பெரியோர்களேனுதான்  எல்லாரையும் கூப்பிடுவார். எல்லாம் எழுதிக் கொடுத்திருக்காங்க.. இஸ்லாமிய கீதங்களை 6000 பாடல்களுக்கு மேலப் பாடியிருப்பார். நாகூர் சலீம், நாகூர் சாதிக் என நிறையபேர் இவருக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க. இரண்டு மகன்கள், இரண்டு பொண்கள்ல நெவ்சாத் என்ற மகன் கச்சேரி பண்ணிட்டு இருக்கார். நான்கு வருடத்திற்கு முன்பு வரைக்கும் பாடியே தன்னுடைய வாழ்க்கையை கரைத்தவர் ஹனிபா.

''உன் மதமா, என் மதமா, ஆண்டவன் எந்த மதம், நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்' என்று அவர் பாடிய பாடலைப்போல... வாழும்போதும் சரி, வாழ்ந்து முடித்த பிறகும் அவர் ஆண்டவன் மதமாகவே, எல்லா மதத்தினர் மனதிலும் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.'' என்று கண்களில் கண்ணீர் மின்ன முடிக்கிறார் கென்னடி.

''அட போங்கடா போங்கடா போங்கடா -இங்கு
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா -கூட
வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா ''- அவருடன் நம்மையும் இழுத்துச்செல்லும் ஹனிபாவின் பாடல்கள் என்றுமே அழியாதச் சரித்திரம்.

ஹனிபாவை கலைஞர் கட்சியில் சேருங்கள் என்று கேட்டுக் கொண்டபோது, 'உங்களுக்காக நான் சேருகிறேன்.. ஆனால், யாரையும் கையெடுத்து கும்பிடமாட்டேன்.. யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன்' என்று தீர்க்கமாக சொன்னாராம்.அதேபோல கட்சியில் வாக்குறுதி கேட்கும்போதும் கூடவே நிற்பாரே தவிர ஓட்டுக் கேட்க மாட்டாராம்.

இன்னிக்கு நான் பண்ற கச்சேரிகளில் பெரும்பாலும் ஹனிபாவின் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். எல்லோராலும் எளிதில் பாடக் கூடிய வகையில் அமைந்திருக்கும் என்பது ஹனிபா பாடல்களின் சிறப்பு.  இன்று நாம் அவரை இழந்திருப்பது பேரிழப்பு'' என்றார் 'பூபாலம் இசைக்குழு 'பிரகதீஸ்வரன்.

கட்சியில் அவரது அத்தனை கால உழைப்பிற்கு எம்.எல் .சியாக இருந்தது மட்டுமே அவருக்கு கட்சி செய்த கைமாறு. 2003 ல் வாணியம்பாடியில் சட்டமன்றத் தேர்தலில் அவரை நிற்கச் சொல்லி  கருணாநிதி வற்புறுத்த, அவரது வற்புறுத்தலுக்காக நின் றார். ஆனால் அந்த தேர்தலில்  தோல்வியடைந்தார். அதன்பின் அரசியலில் அவரது ஈடுபாடு அவ்வளவாக இல்லை.

மேடைக்கச்சேரிகளோடு தன் கட்சி உறவை நிறுத்திக் கொண்டார். திராவிட இயக்க வளர்ச்சிக்கு ஒரு பாட்டுப்பறவையாக அலைந்து திரிந்து அதன் வளர்ச்சிக்கு  பங்காற்றிய இந்த பாட்டுக்குயில் ஹனிபாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

- வே. கிருஷ்ணவேணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்