வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (25/05/2015)

கடைசி தொடர்பு:17:36 (25/05/2015)

'அப்படினா...ஆதார் எண் இல்லாதவர்கள் எல்லாம் போலி வாக்காளர்களா?'

ண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட பிழைகள் திருத்தம் செய்யும் பணிகளும், புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியும் நடந்து வருகின்றன.

இருப்பினும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள், போலி வாக்காளர்கள் குறித்த புகார்கள் குறைந்தபாடில்லை. இதற்காக இந்தமுறை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நேற்றுடன் ஆதார் எண் பதிவு முகாம் நிறைவடைந்தன. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யவில்லை என்றால், வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் எல்லோரிடமும் ஆதார் அட்டை இல்லை. இதனால் ஆதார் எண் இல்லாதவர்கள் எல்லாம் போலி வாக்காளர்கள் என்று கருதமுடியுமா என்று அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமான்ய மக்கள் வரை தேர்தல் ஆணையத்தைப் பார்த்து கேள்விக் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. அப்போது, பாஜனதா கட்சி ஆதார் அடையாள திட்டம் தேவையில்லாதது என்று விமர்சித்தது. இதனால் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தபோது மக்களிடையே பெரும் வரவேற்பு இல்லை. ஏனோதானோ என்ற நீதியிலேயே மக்களின் ஆர்வம் காணப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி பீடத்தில் ஏறிய பா.ஜனதா கட்சி தனது முந்தைய நிலைக்கு மாறாக,  ஆதார் அட்டை அனைவருக்கும் அவசியம் என்பதைப் போல செயல்பட்டு வருகிறது. நேரடி மானியத்திட்டத்தில் தொடங்கி வங்கி கணக்கு தொடங்குவது வரை என எல்லாவற்றுக்கும் ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. இதனால் ஆதார் கார்டு இல்லை என்றால் பொது மக்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் நிலை உள்ளது. இதனால் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க மக்கள் ஒரே நேரத்தில் ஆர்வம் காட்டினார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களில் திருவிழாக் கூட்டம்.

ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து இன்று வரை புகைப்பட எடுக்க அழைக்கப்படாதவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும். இந்த சமயத்தில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து போலி வாக்காளர்களை களை எடுப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆதார் கார்டு எண்ணை கொடுக்காதவர்கள் போலி வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் கருதுவதில் எந்தவிதத்தில் நியாயம் இருக்கிறது என்பது பொது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

அதே சமயம் ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நாட்டில் இன்னமும் தனிப்பட்ட மொபைல் போன் மற்றும் இமெயில் முகவரி இல்லாதவர்கள் லட்சக்கணக்கானவர்கள் உள்ளர். அப்படியெனில் அவர்கள் ஓட்டுப்போட தகுதி இல்லாதவர்களா...அல்லது போலி வாக்காளர்களா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்த ராஜ் என்பவர் கூறுகையில், “திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தேன். அப்போது ரேசன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றார்கள். ஆனால் என்னிடம் ரேசன் கார்டு இல்லை. இதனால் வாக்காளர் அடையாள அட்டை உதவியுடன் விண்ணப்பித்தேன். புகைப்படம் எடுக்கும் தேதி விவரம் உங்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த எஸ்.எம்.எஸ்-சும் வரவில்லை. ஆதார் கார்டு இல்லை என்பதால் என்னை போலி வாக்காளராக கருத முடியுமா?” என்றார் ஆதங்கத்துடன்.

தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக முகாம்கள் நடத்தப்பட்டன. வீடு, வீடாகவும் சென்று இந்த விவரங்களை ஊழியர்கள் சேகரித்தனர். அந்த சமயத்தில் வீடுகளில் ஆளில்லாதவர்களுக்கு அறிவிப்பு விடுக்கும் வகையில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 100 சதவிகித ஆதார் கார்டு என்ற நிலை வந்தப்பிறகே ஆதார் எண் இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம்” என்றனர்.

சென்னை மாநகராட்சி தேர்தல் ஆணையர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், “உங்கள் ஆதார் விவரங்களை சேகரிக்க வீட்டுக்கு வந்த போது நீங்கள் இல்லை. எனவே ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் அதிகாரிகளிடம் உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் வாக்காளர் பட்டியலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு கட்டாயமல்ல என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஆதார் எண்ணை இணைத்தால் போதுமானது என்று இந்திய தேர்தல் ஆணையம் அன்று சொல்லியது. அதுமட்டுமல்லாமல் ஆதார் எண்ணை எந்த ஒரு அரசின் திட்டத்திற்கும் கட்டாயமாக்கக் கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது இப்படி நோட்டீஸ் ஒட்டியுள்ளது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்