அழிந்து வரும் கழுகுகள்... ஆதரவு குரல் கொடுப்போம்!

இயற்கையின் அம்சமே ஒன்றையொன்று சார்ந்ததுதான். 'ஒன்றின் கழிவு, இன்னொன்றின் உணவு' என்பதால்தான் இயற்கையின் விதி சரியாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படி இறந்து அழுகிப்போன மனித, விலங்குகளின் உடல்களை சாப்பிட்டு இயற்கையின் துப்புரவாளனாக செயல்பட்டு வரும் இனம் கழுகு.

இன்றும் பறவையினங்களில் கழுகுகளை ஒருவித அச்சத்தோடு பார்ப்பவர்கள் ஏராளம். கழுகுகள் வானத்தில் பறந்தாலே, கெட்ட சகுனத்தின் அறிகுறிகளாக கதை புனைவது வழக்கம். பொதுவாகவே பறவைகளின் வாழ்வியல் சூழல்கள், வசிப்பிடங்கள், இனப்பெருக்க காலங்கள், வாழ்நாட்கள், இறப்புகள் என்று பல தகவல்களும், புள்ளிவிவர கணக்கெடுப்புகள் ஓரளவுக்கு வெளி உலகுக்கு தெரியும். ஆனால், இயற்கையின் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் 'பாறு' கழுகுகள் எனும் 'பிணந்தின்னி கழுகு' வகைகள் பற்றிய முழுமையான, புள்ளி விவர தகவல்கள் நம்மிடம் இல்லை.

ஒருகாலத்தில் காகங்களைப் போல அன்றாடம் பார்க்கக்கூடிய, பறவைகளில் ஒன்றாக இருந்தது பாறு கழுகுகள், இன்று அரிதாகி கொண்டே வருகின்றன.

கழுகு.. படம்: ராஜசேகர்

இந்த கழுகுகள் இறந்த உயிர்களை உண்டு, மனிதர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுத்தும், மண்ணிற்கு எச்சங்களை அளித்து நுண்ணுயிர்கள் வளர காரணமாக இருந்தவை. ஆனால் இந்த இனங்கள் அரிதாகிக் கொண்டே வருவது, இயற்கையின் உணவுச் சங்கிலியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாவதற்கான காரணமாகிவிட்டது என்கிறார் இயற்கை ஆர்வலரும், கழுகுகளை பாதுகாத்து வரும் 'அருளகம்' என்ற அமைப்பின் செயலாளருமான பாரதிதாசன். இந்த பாறு கழுகுகள் குறித்து நம்மிடம் பேசினார்.

கருங்கழுத்து பாறு கழுகு:படம்: பாரதிதாசன்

"பொதுவாகவே மற்ற பறவைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை நாம் கழுகுகக்கு கொடுப்பதில்லை. ஆனால், நம் இலக்கியத்திலேயே 'சென்செறு எருவை' 'ஜடாயு' 'கருடன்' என்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளன. பாறு கழுகுகள் என்கிற பிணந்தின்னி கழுகுகள்தான் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழுகு வகைகள் இருந்ததாக சொல்கிறார்கள். இந்திய அளவில் மில்லியன் கணக்கில் இருந்தன. ஆனால் தற்போது நம் நாட்டில் முப்பது வகையான கழுகுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் வெண்முதுகு பாறுகழுகு, கருங்கழுத்து பாறுகழுகு, மஞ்சள் முகக்கழுகு, செந்தலைப் பாறுகழுகு என நான்கு வகையான பிணந்தின்னி கழுகுகள் மட்டுமே உள்ளன. இவற்றைத் தவிர நில அமைப்புகளுக்கு ஏற்றபடி வாழும் கழுகுகளும் இருந்து வருகின்றன.

கருங்கழுத்து பாறு கழுகு: படம்: பாரதிதாசன்

இறந்துபோன கால்நடைகள்தான் இதற்கு பிரதான உணவு. அதிலும் மாடுகள்தான் அதிகளவில் உண்ணக் கிடைக்கின்றன. ஆனால் மாடுகளின் மடிவீக்கம், காய்ச்சல், உணவு உண்ணாமை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், ப்ரூனிக்சின், கீட்டோட்ரபைன் போன்ற மருந்துகள் இந்த கழுகுகளுக்கு எமனாகி நிற்கின்றன.

இந்த மருந்துகள் தீங்கானது என்று அரசு தரப்பு ஆராய்ச்சியே உறுதி செய்துள்ளது. அதிலும் “டைக்குளோ பினாக்” மிகவும் தீங்கானது. ஆனால் இதைத்தான் கால்நடைகளுக்கு மருந்தாக அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்துகளை உட்செலுத்தி, இறந்து போகும் கால்நடைகளை நேரடியாகவே சாப்பிடும் பிணந்தின்னி கழுகுகள் குறுகிய கால அளவிலேயே சிறுநீரக செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன.

வெண்முதுகு பாறு கழுகு

இறந்த விலங்குகள் மேல் மருந்தை தடவி வீசி விடுவதாலும், பிணந்தின்னி கழுகுகள் விரைவாக அழிந்து வருகின்றன. இதுதவிர முன்பெல்லாம் மலை சார்ந்த பகுதிகளில் பட்டி மாடுகளின் புழக்கம் இருந்தது. தற்போது வெகுவாக பட்டிமாடுகள் குறைந்து வருவதும் ஒரு காரணம். இதுவரை கழுகுகள் பற்றிய முறை யான கணக்கெடுப்புகள் நடந்ததேயில்லை. இந்த கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையான நிலவரம் அனைவருக்கும் தெரியும்.

செங்கழுத்து பாறு கழுகு: படம்: வெங்கடாசலம்

‘டைக்ளோபினாக்’ மருந்து பயன்பாட்டால் சமீபத்தில் கூட முதுமலைப் பகுதிகளில் நான்கு கழுகுகள் இறந்து போயின. திருக்கழுக்குன்றம் பகுதியில் இருபது ஆண்டுகளாக வந்து செல்லும் மஞ்சள்முக பாறு கழுகு இப்போது வருவதில்லை.

வனத்துறைகள், சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டைக்குளோபினாக் மருந்தை அரசு தடை செய்ய வேண்டும். மக்களும் இந்த வகையான மருந்துகளை பயன்படுத்தாமல், கழுகுகளை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்றார்.

- கு.முத்துராஜா (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!