Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேறுமா 'தோரியம்' உலைகள்?

- ந.வினோத்குமார்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

நாளுக்கு நாள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுக் கொண்டே இருக்கிறது. அது தமிழகத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அணுசக்திக்கு எதிரான ஒத்த கருத்துடைய செயற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களின் ஆதரவை கூடங்குளம் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் 'கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க' வட இந்தியாவில் இருந்து அணுசக்திக்கு எதிரான போராளிகள் சுமார் 100 பேர் யாத்திரை மேற்கொண்டு, கடந்த 10-ம் தேதி மதுரை, திருநெல்வேலி வழியாக இடிந்தகரைக்கு வந்து தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.

மதுரையில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனும், சென்னையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனும் யாத்திரையை நெறிப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக 13-ம் தேதி லயோலா கல்லூரியில் அணுசக்தி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மக்களின் மனநிலையும் அப்துல் கலாம் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாக இருக்க, அவர்களின் சார்பில் சில கருத்துகளை முன்வைத்தார். சுவ்ரத் ராஜூ. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய அமெரிக்க 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது, அப்துல் கலாம் குறிப்பிட்ட தோரியம் அணு உலைகள், செர்னோபிள் விபத்து எண்ணிக்கை போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்...

"உலகெங்கும் உள்ள அணு உலைகளில் யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம், வெவ்வேறு ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும், வெவ்வேறான இயற்பியல் பண்புகளையும் பெற்றிருக்கும் ஒரு பொருளாகும். அதில் யு-235 என்பது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய, அணுவைப் பிளக்கக் கூடிய ஐசோடோப்பாக இருப்பதால் அதுவே எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துகிறோம். மற்ற நாடுகளில் யுரேனியத்தை செறிவூட்டி அதன் எண்ணிக்கையை 235 ஆக உயர்த்தி எரிபொருளாக்கப்படுகிறது.

ஆனால் தோரியம் அப்படியல்ல. அதை முதலில் ஓர் உலையில் வைத்து அணுவைப் பிளக்கும் தன்மை உள்ள ஐசோடோப் யுரேனியமாக அதாவது யு-233 ஆக மாற்ற வேண்டும். இதற்கு மூன்று தன்மைகள் இருக்கின்றன.

முதலாவதாக, இந்த யு-233 அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும். இதைச் சுத்தப்படுத்தி அதை மீண்டும் உபயோகிக்க அதிகம் செலவுபிடிக்கும். இரண்டாவதாக, யு-232 மூலமாக யு-233 பெற முடியும் என்பதால் யு-232 உடன் நாம் நிறுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், யு-232 மூலமாக அதிகளவில் காமா கதிர்வீச்சு இருக்கும். மேலும், யு-233-ஐ நாம் அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அணுமின் நிலையப் பணியாளர்களை வெகுவாகப் பாதிக்கும்.

மூன்றாவதாக, புளூட்டோனியத்தால் இயங்கும் அதிவேக ஈணுலைகளின் மூலம் யு-233-ஐ பெறலாம் என்பது அணுசக்தித் துறையின் திட்டம். ஆனால் கனநீர் உலைகளைக் காட்டிலும் ஈணுலையில் பணிகள் நடக்க ஆரம்பித்தால் மிக விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

இந்த காரணங்களுக்காக பல நாடுகளும் தோரியம் அணு உலை ஏற்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கின்றன. ஆனால் தான் மட்டும் தனியாக ஓடி, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றுவிட நினைக்கிறது இந்தியா.

இந்திய அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தான நொடியில் இருந்து அணுசக்தி மூலம் உருவாகக் கூடிய ஓர் எதிர்காலத்தைக் கனவு காண்கின்ற நிலை சராசரி இந்தியர்களின் மனதில் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் தந்திர வழிநடத்துதலின் படி செயல்பட்டு, ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி மையத்தில் (ஐ.ஏ.இ.ஏ) இரண்டு முறை வாக்களித்தது. அதனால் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுறவில் ஏற்பட இருந்த பெட்ரோலிய பைப்லைன் திட்டம் எனும் முக்கியமான எரிசக்தி ஆதாரம் நின்றுபோனது.

இந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மராத்திய நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர், "வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் நலனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலைகளை நாம் இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்... 'வெளிநாட்டு கை' மக்களுக்குப் பின்னால் இருக்கிறதா அல்லது அரசுக்குப் பின்னால் இயங்குகிறதா?

செர்னோபிள் விபத்து போன்று இங்கும் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் கொள்வதற்கும், கவலை கொள்வதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. அணுசக்திக்கு ஆதரவாகப் பேசும் சிலர் செர்னோபிள் விபத்தின் போது வெறும் 57 பேர்தான் இறந்து போனார்கள் என்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உலக சுகாதார நிறுவனம் 9,000க்கும் அதிகமான மரணங்கள் இந்த விபத்தால் நிகழ்ந்திருக்கின்றன என்கிறது. நேரடியான மரணங்கள் தவிர புற்றுநோய் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் அந்த விபத்தின் போது ஐயோடின்-131 என்ற வேதிப் பொருளை உள்வாங்கிய குழந்தைகள் நாளடைவில் தைராய்டு புற்றுநோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்கிறது. இன்றும் செர்னோபிள் பகுதியில் 10,000 சதுர கிலோமீட்டர்கள் வரை 'ஸ்ட்ரிக்ட் கன்ட்ரோல்' எனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சீஸியம்-137 எனும் மாசு படர்ந்திருக்கிறது. இது தன்னுடைய கதிரியக்கத்தை இழக்க சுமார் 30 வருடங்கள் ஆகும்.

இது ஒருபுறம் இருக்க, கூடங்குளத்தில் அமைய இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை என்று கூறுவது அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை. குறிப்பாக, பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் 'கன்ட்ரோல் ராட்' எனப்படும் ஒருவகையான இயங்குமுறையில் பிரச்னைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த 'கன்ட்ரோல் ராட்' என்பது எந்த ஓர் அணுப்பிளவும் நிகழாமல் நியூட்ரான்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆகியவற்றின் அணுப்பிளவை கட்டுப்படுத்த இவை அணு உலைகளில் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. 2006, மார்ச் 1-ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4-வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சர்க்குலேஷன் பம்ப்கள் வேலை செய்யவில்லை. இதனால் 'கன்ட்ரோல் ராட்' இயங்குமுறையில் பிரச்னை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இது ஓர் உதாரணம் தான்.

இவற்றுடன், இழப்பீடு முறையையும் நாம் கவனிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலைகளை விற்ற ஆட்டம்ஸ்ட்ராய்க்ஸ்போர்ட்  எனும் நிறுவனம் சிறப்பு இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம், மக்கள் தன்னிடம் இழப்பீடு கோருவதைத் தடை செய்கிறது. இந்தியாவில் இருக்கும் அணு விபத்து இழப்பீடுச் சட்டம் காரணமாக வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணு உலை விற்பனை நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க யோசிக்கின்றன.

ஆக, இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதில் தவறு இல்லை என்கிற போது, தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள போராடும் மக்களின் உணர்வுகள் மட்டும் எப்படி தவறாகும்?" என்று கேட்டார் சுவ்ரத் ராஜூ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement