செந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... ? - பரபர பின்னணித் தகவல்கள்!

மிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்தும் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டு இருப்பது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் அண்மைக்கால அசைக்க முடியாத சக்தியாகவும், பலமிக்க அமைச்சராகவும் கடந்த 4 ஆண்டுகளாக வலம் வந்த செந்தில் பாலாஜி மீது, பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு என்ன நடந்தது என்றும், அவர் மீது போயஸ் கார்டனின் அக்னி வீச்சு பட என்ன காரணம் என்றும் கட்சிக்குள்ளும்,  தலைமைச் செயலக வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சி பீடத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது முதல் 4 ஆண்டுகள் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பை அலங்கரித்தவர்  செந்தில் பாலாஜி. அதிமுகவின் மூத்த தலைவர்களே அஞ்சும் அளவிற்கு கட்சியில் மடமடவென வளர்ந்தவர் செந்தில் பாலாஜி.  கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி  என்ற ஊரில், 1975 அக்டோபர் 21 ஆம் தேதி பிறந்த அவர், கல்லூரி காலத்திலேயே அரசியலில் ஈடுபட்டார். முதலில் திமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை  தொடங்கினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் அவரால் பிரபலமாக முடியவில்லை. அதனால் அவர் போயஸ் கார்டன் பக்கம் கவனத்தைத் திருப்பினார். 2000 ஆம் ஆண்டில்  ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிறகுதான், அவரின் 'அரசியல் எஸ்கலேட்டர்’ பயணம் தொடங்கியது. `வி.செந்தில்குமார்` என்ற தனது இயற்பெயரை 'வி.செந்தில்பாலாஜி’ என நியூமராலஜிப்படி மாற்றிக் கொண்டார். 'குமார்’ என்பதை துறந்து  'பாலாஜி’ என்ற பெயரைச் சேர்த்த பிறகுதான் அவருக்கு  சுக்ரதிசை தொடங்கியது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

அதிமுகவின்  மாணவர் அணிச் செயலாளராக இருந்த கலைராஜன் அறிமுகம் மூலம் கார்டன் குட் புக்கில் இடம்பிடித்தார். அடுத்த ஆறே மாதங்களில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த  2004ஆம்  ஆண்டு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பிற்கு உயர்ந்தார். பின்னர்  2006 ஆம் ஆண்டில்  எம்.எல்.ஏ சீட் பெற்றார்.  2007ஆம் ஆண்டு  மார்ச் 11 ஆம் தேதி  கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், அடுத்த 10 ஆவது நாளில் கரூர் மாவட்டச் செயலாளர் என்று விறுவிறு வளர்ச்சி அடைந்து அரசியலில் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தார்.

2006 ஆம் ஆண்டு இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு போரட்டங்களை  நடத்தினார். கரூர் பகுதிகளில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக, ஜே.சி.பி முன்பு படுத்து செந்தில் பாலாஜி நடத்திய போராட்டம் அதிமுக தலைமையின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. திமுகவின் பலமான கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக செந்தில் பாலாஜி தூக்கிய போர்க்கொடி,  போயஸ் கார்டனின் கண்களில் பட்டதால் மாவட்டச் செயலாளர் பதவி பரிசாகக் கிடைத்தது. அத்தோடு ஜெயலலிதாவின் தோழி  சசிகலாவின் உறவினர்களுடன் கைகோர்த்துக் கொண்ட பிறகு, கார்டனில்  செந்தில் பாலஜியின் செல்வாக்கு எகிறத் தொடங்கியது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில், கரூர் தொகுதியிலிருந்து  செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் சசிகலாவின் அண்ணி, இளவரசியின் சம்பந்தி கலியப்பெருமாள் உள்ளிட்ட  உறவுகளின் துணையால், 2011 மே 16 ஆம்  தேதி முதல், மாநில அமைச்சராக வலம் வர  தொடங்கினார் செந்தில்பாலாஜி. 

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 15 க்கும் மேற்பட்ட முறைகள் அமைச்சரவை அசைக்கப்பட்டிருக்கிறது. அதில் சீனியர் அமைச்சர்கள் உட்பட பலரின் அமைச்சர் பதவிகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆனால் செந்தில் பாலாஜியையோ, அவரது போக்குவரத்துத் துறையையோ அசைக்க முடியவில்லை. இப்படி உச்சாணிக் கொம்பில் இருந்த அவரின் பதவிகள் இன்று அசைக்கப்பட்டு கட்சியின் சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டு  இருப்பதன் பின்னணி பல்வேறு திருப்பங்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு  சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். இந்திய அளவில் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு,  அதிமுகவில் பூகம்பத்தை உண்டாக்கியது. அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்தபோது அதில் செந்தில் பாலஜியின் பெயரும் அடிபட்டது. ஆனால் அதிலெல்லாம் அவர் கவனம் செலுத்தாமல் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டியும்,  மீண்டும் முதல்வராக வேண்டியும் கோவில் கோவிலாக  வேண்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தார். அதிலும் உச்சகட்டமாக அம்மன் கோவில் ஒன்றில் தீச்சட்டி, காவடி என எடுத்த கையோடு அங்கப்பிரதட்சனம் செய்து கார்டனின் கவனத்தை ஈர்த்தார்.

ஜெயலலிதா விடுதலையான உடன் 5000 பேருடன் சென்று மொட்டையும் போட்டார். அத்தோடு நில்லாமல், கரூர்  கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்,  அலங்காரவள்ளி சௌந்திரநாயகி அம்பாள்  சன்னதியில் லலிதா திருட்சதை ஹோமம் மற்றும் லட்சத்து எட்டு தீபம் ஏற்றி  சிறப்பு வழிபாடும் நடத்தி அசத்தினார்.

கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்து அதிமுகவிற்கு புத்துயிர் அளித்தது. இதனையடுத்து மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. ஏற்கெனவே கார்டனின் குட் புக்கில் இடம் பெற்று இருந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் கட்சிக்குள் முக்கிய இடம் அளிக்கப்படும் என்றும்,  அவர் மீது இரண்டு வருடத்திற்கு முன்பு  கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நில அபகரிப்பு புகார் உள்ளிட்டவை எல்லாம் புஸ்வாணம் ஆகும் என்று கணிப்புகள்  வெளிவந்தன. ஆனால் இப்போதைய நிலைமையே வேறாக உள்ளது. அதிமுகவில் அமைச்சரவை தொடங்கி கட்சி பதவிகள் வரை எதுவும் நடக்கலாம் என்பதற்கு மேலும் இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது அவரின் திடீர் பதவி பறிப்பு.

பதவி பறிப்பு முடிவு கடந்த வாரமே எடுக்கப்பட்டது?

அதே சமயம் பதவி பறிப்பு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டாலும், செந்தில் பாலாஜியை நீக்குவது என்ற முடிவுக்கு கடந்த வாரமே ஜெயலலிதா வந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை  ( 24 ஆம் தேதி) இரவிலேயே ஆளுநர் மாளிகைக்கு பதவி நீக்கத்திற்கான பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு, இன்று ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியை பறிக்க வைத்த அடுக்கடுக்கான புகார்கள்...

மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவி என அடுத்தடுத்து கட்சிக்குள் முன்னேற்றம் கண்ட செந்தில்பாலாஜி மீது நீண்டகாலமாக, மூத்த அதிமுக நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு தனது  குடும்பத்தினரை வளையமாக்கிக் கொண்டார் என்ற புகார் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தை செந்தில் பாலாஜியின் தம்பி தனது 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்தார் என்றும், திருச்சியில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த நேருவுக்கு அவர் தம்பி ராமஜெயம் எப்படியோ, அதுபோல் செந்தில் பாலாஜிக்கு அவரின் 'தம்பி' என்று கூறுமளவிற்கு இருந்துள்ளது.

ஆள் கடத்தல், நில அபகரிப்பு புகார்கள்  என்று நீதிமன்றம் வரை புகார்கள் யுள்ளது. ஆனால் அசரவில்லை செந்தில் பாலாஜி. இது கரூர் அண்ணா தி.மு.க. நிர்வாகளிடையே மிகக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே இந்த விவகாரம் எதிரொலித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் செந்தில்பாலாஜி மீது பாயவில்லை.

மேலும் செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்துகளுக்கு ஜி.எஸ்.பி. கருவிகளை வாங்கியதில் முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தன. செந்தில் பாலாஜியின் கரம்  சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வரை நீண்டதாகவும், அதனால் கார்டனின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறு புகார்கள் இவர்மீது அடுக்கப்படுகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை மற்றும் சென்னை மோனோ ரயில் திட்ட சுணக்கம், லாரி உரிமையாளர்கள் பிரச்னை,டிக்கெட் வழங்கும் கையடக்க இயந்திர முறைகேடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டிரைவர், கண்டக்டர் தேர்வு செய்யும் பணியில் முறைகேடுகள் என்று செந்தில் பாலாஜியின் மீதான புகார்கள் நீண்டுகொண்டே போகின்றன.

மேலும் சொந்த ஊர் திமுக புள்ளியுடன் காட்டிய நெருக்கமும், பழைய பாசமும் கார்டனின் கோப பார்வைக்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

அத்துடன் செந்தில் பாலாஜி நீக்கத்துக்கு திமுகவில் இருந்து அதிமுகவில் அண்மையில் இணைந்த ஒரு நடிகரும் காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் செந்தில் பாலாஜி குறித்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிய வீடியோ ஆதாரம் ஒன்று  'விவகாரமான' விவகாரம் என்றும் கூறப்படுகிறது.  அந்த நடிகரின் ஊர் பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராக இருந்த செந்தில் பாலாஜி, நடிகரின் ஆதரவாளர்களுக்கு  பதவிகள் கொடுக்காத கடுப்பிலேயே, தருணம் பார்த்து நடிகர் போட்டு கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபோக அடுத்த பெரிய பதவி தனக்குதான் என்று ஒரு உற்சாக தருணத்தில் சிலரிடம் பேசியது ரகசியமாக பதிவு செய்யப்பட்டு, அதுவும் போயஸ் தோட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பதவி பறிப்புக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இருப்பது மணல் கொள்ளை விவகாரம். கரூர் அமராவதி ஆற்றிலும், காவிரி ஆற்றிலும் மணல் கொள்ளை  நின்றபாடில்லை. அங்கு திருட்டுத் தனமாக கொள்ளையடிக்கப்படும் மணல் விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க மீடியா ஆட்களே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு ` ராணுவ பாதுகாப்பு` போடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜே.சி.பி முன்பு படுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய செந்தில்பாலாஜி, இப்போது அப்படி ஒரு பிரச்னை அந்தத்  தொகுதியில் இருப்பதாக காட்டிக்கொள்வதே இல்லை என்கிறார்கள் கரூர் மக்கள்.

இப்படி ஒன்றா இரண்டா....முறைகேட்டுப் புகார்களுக்கு பஞ்சமே இல்லாமல் 4 ஆண்டுகளை நிறைவு செய்த செந்தில் பாலாஜி, கடைசியில் அமைச்சர் இருக்கையில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.

விரைவில் கூட இருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில்,  செந்தில் பாலாஜி அமைச்சர்களுக்கெல் லாம் பின்னால்  சட்ட மன்ற உறுப்பினர்களோடு அமர்ந்துகொள்வார். ஆனால் அவர் மீதான புகார்கள் உண்மையை வெளிக் கொண்டுவருமா அல்லது பதவிபறிப்போடு நின்றுவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும். 

- தேவராஜன்
படங்கள்:
என்.ஜி. மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!