ஏ ஃபார் ஆல்ஃபபெட்! | A for Alphabet

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (11/08/2015)

கடைசி தொடர்பு:19:18 (11/08/2015)

ஏ ஃபார் ஆல்ஃபபெட்!

லேப்டாப்பை கண்டுபிடித்தது யார்? விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் அளவு என்ன? - இது போன்ற கேள்விகளை யாராவது நம்மிடம் கேட்டால், நமது கைகள் தானாக கணினியில் டைப் செய்யும் இணையதளம் கூகுள்.காம்-ஆகதான் இருக்கும். மாற்றத்திற்கு பெயர் போன நிறுவனமான கூகுள், தன்னை எப்படி மாற்றத்துக்கு தயார்படுத்திக் கொள்கிறது என்பதற்கு உதாரணம்தான் கூகுளின் சீரமைப்பு.

இதுவரை தனி நிறுவனமாக இயங்கி வந்த கூகுள் நிறுவனம், தேடுதல் தளமாகதான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் வீடியோ பதிவுகள், சமூக வலைதளம், மின்னஞ்சல் என பல முகங்களுக்கு தன்னை விரிவுபடுத்திக் கொண்ட கூகுள்,  தனது அதிகாரத்துக்கு கீழே அனைத்து துணை செயல்பாட்டு பிரிவுகளையும் வைத்திருந்தது.

தற்போது கூகுள் எடுத்திருக்கும் சீரமைப்பு முடிவில், கூகுளின் தேடுதல் பிரிவு, தன்னை ஆல்ஃபபெட் எனும் தாய் நிறுவனத்தின் கீழ் இணைத்துக் கொள்ளும் என்றும், மற்ற சேவைகளும் தனித்தனியே ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆல்ஃபபெட் நிறுவனம் என்ன செய்யும்?

ஆல்ஃபபெட் நிறுவனம் என்பது பல நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனமாக செயல்படும் என்றும், அதன் நிர்வாகத்தை தற்போது கூகுளை நிர்வகித்து வந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பின் கவனிப்பார்கள் என்றும், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கூகுளின் புதிய சிஇஓவாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்படுவார் என்றும் அதன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

கூகுளின் தேடுதல் சேவை மட்டுமின்றி, கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் சுந்தர் பிச்சைதான் தலைவராக செயல்படுவார் என்று கூறியுள்ளார் லாரி பேஜ். கூகுளின் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் கூகுளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் விஷயமாக அமையும்.

கூகுள் எப்போதுமே தன்னை ஒரு வழக்கமான நிறுவனமாக முகம் காட்டி கொண்டதில்லை. இதே நிலையில் கூகுள் இயங்க விருப்பப்படுவதும்தான் இந்த சீரமைப்பின் நோக்கம். கூகுளின் வளர்ச்சிக்கு இந்த சீரமைப்பு உதவும். கூகுளின் செயல்பாடுகள் ஆல்ஃபபெட்டுக்கு கீழ் மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்ஃபபெட் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய அமைப்பாக இருக்கும்போது, இதன் கீழ் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அதன் தலைமையோடு சிறப்பாக இயங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இது நிறுவனத்தின் வளர்ச்சியை பன்மடங்காகும் என்று கூகுள் கூறியுள்ளது. ஆல்ஃபபெட்,  நிறுவனங்களை கண்காணிக்கும் மற்றும் வர்த்தகங்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் நிறுவனமாக செயல்படும். இதற்கு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தலைமை தாங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற சிஇஓக்களின் நிலை என்ன?

கூகுளின் சிஇஓவாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபபெட்டுக்கு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சேவைகளான யூ-ட்யூப் போன்றவற்றுக்கு யார் தலைமை தாங்குவார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு பதில்,  யூ-ட்யூபிற்கு சூசன் சிஇஓவாக தொடருவார் . இது எப்படி எனில் ஒரு சிஇஓ மற்றொரு சிஇஓவுக்கு தகவல் அனுப்புவதை போன்றது. இது போன்ற புதுமைகள்தான் கூகுள் சீரமைப்பின் சிறப்பம்சங்கள்.

கூகுள் பங்குகளின் நிலை!

கூகுள் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை இந்த மாற்றத்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. ஆல்ஃபபெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்குகளாக மாற்றப்படும் என்றும், பங்குகளின் விலை, அதன் மீதான உரிமை என எதிலும் மாற்றம் இருக்காது என்றும் கூகுள் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையிலும் GOOG  மற்றும் GOOGL என்ற குறியீட்டுடன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆல்ஃபபெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

1.தொலைநோக்கு பார்வையில் நிறுவனங்களை வளர்க்க, ஆல்ஃபபெட் பெரிய மேடையாக இருக்கும்.

2.தொழில்முனைவோர்களை மேம்படுத்தவும், தனி நிறுவனங்கள் பொலிவடையவும் இது உதவும்.

3.நிறுவனங்களுக்கு இடையேயான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கூகுள் நிறுவனத்தின் மீது கூடுதல் கவனத்தை அதிகரிக்கவும் ஆல்ஃபபெட் உதவும்.

4.கூகுளில் பணிபுரிய எப்படி அதிக விருப்பம் தெரிவிக்கிறார்களோ, அதேபோல் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களிலும் சூழலை உருவாக்குவது.

5.தனி நிறுவனங்கள் தன்னை மேம்படுத்தவும், அவர்களது பிராண்ட் வளரவும் ஆல்ஃபபெட் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

எப்போதுமே மிகப்பெரிய நிறுவனங்கள், தங்களுக்கு கீழ் நிறுவனங்களை இணைத்துக் கொண்டு மேலும் விரிவடையும். ஆனால் கூகுளின் இந்த உத்தி வியக்கத்தக்கது. புதிய தாய் நிறுவனத்தை துவங்கி,  அதன் கீழ் இயங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம், இதுபோன்ற முடிவுகளை எடுப்பது பிற்காலத்தில் உலகமே தொடரும் உத்தியாக மாறும். யாருக்கு தெரியும் நாளைக்கு இந்த ஆல்ஃபபெட் கூட ஏதோ ஒரு நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் நிலை உருவாகலாம். அதற்கு ஒரு இந்தியர் கூட தலைமை பதவியை வகிக்கலாம்.

உடனடியாக பதில் தேடி தந்த கூகுள்,  இனி உத்திகளை தேடவும் எடுத்திருக்கும் அவதாரம்தான் ஆல்ஃபபெட்.... இனி ஏ  ஃபார் ஆப்பிள் என்றவர்கள் எல்லாம் ஏ ஃபார் ஆல்ஃபபெட் என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

- ச.ஸ்ரீராம், ராஜா ராமமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close