முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 8) | Mullai periyaru dam: a detailed story part- 8

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (10/09/2015)

கடைசி தொடர்பு:11:39 (10/09/2015)

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு! (மினி தொடர் - 8)

டந்த 2014 ஆம் வருடம் மே ஏழாம் தேதி  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் ‘ முல்லை பெரியாற்றினை மீட்டவர் ‘ என அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகளின் பெயரில் ‘அ.தி.மு.க-வினர் பாராட்டு விழா’வினை மதுரையில் நடத்தினர்.

அதற்கடுத்த தினங்களில் ‘முல்லை பெரியாறை வென்றெடுத்தவர்‘ என தி.மு.க சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் மக்களுடன் சேர்ந்து போராடியவர் என்ற முறையில் வைகோ-வும் பாராட்டப்படுகிறார். இதைவிட ஒருபடி மேலே சென்ற ‘அதிரடி’ ஈ.வி.கே.எஸ், ‘எங்களுடைய ஆட்சிக்காலத்தில் இத்தகைய புகழ்மிக்க தீர்ப்பு வந்தது. எனவே முல்லை பெரியாறு விவகாரத்தில் எங்களுடைய பணி தான் சிறந்தது’ என்கிறார்.

இவர்கள் தான் வெற்றிக்கு சொந்தக்காரர்களா?  ஒரு தனி மனிதனுக்குத்தான் இந்த வெற்றிகள் சேரும் என்றால், இன்றும் முல்லை பெரியாறு அணைக்கு அருகில் ஒரு புதிய அணை கட்டுவேன் என சொல்லும் கேரளாவிடம் தனி மனிதனாக மட்டுமே போராடி வென்று விடுவார்களா ?

முல்லை பெரியாறு வெற்றி யாருக்கு சொந்தம் ?

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 136 அடியாக குறைந்ததிலிருந்தே விவசாயிகள் போராடி கொண்டுதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறை ஆய்வுக்குழுக்களும் , அதனுடைய அறிக்கைகளும், நீதிமன்ற உத்தரவும் வரும்போதெல்லாம்  பொறுமையோடு காத்திருந்தனர். கேரள அரசியல்வாதிகள் மேலும் மேலும் சோதிக்க, 2011-ன் இறுதியில் விவசாயிகள் திமிறி எழுந்தனர். லோயர்கேம்பிலிருந்து கூடலூர் வரை கிட்டத்தட்ட ஆறெழு கிலோ மீட்டருக்கு வெறும் மக்கள் தலையாகவே இருந்து கேரளாவை நோக்கி அலை அலையாய் நகர்ந்தனர்.

தேக்கடி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் மதகினை உடைக்க கேரள காங்கிரஸ், பி.ஜே.பி-யினர் முற்பட்ட போது, ‘அணையை பாதுகாப்போம்’ என்ற உறுதியில் கிராமம் கிராமமாக மக்கள் தேக்கடிக்கு நடந்தே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்குகளை தாங்கள் மேல் சுமந்தவர்களுக்கு, இலவசமாகவே ஜாமீன் எடுத்துக்கொடுத்தனர் வழக்குரைஞர்கள். 2011 ஆண்டின் இறுதி மாதங்களில் இந்த போராட்டம் உக்கிரமடைந்து,  தங்களுடைய தொழிலை, வருமானத்தை விட்டு  பெரும்பாலான நேரத்தை போராட்டத்திலேயே கழித்தனர் விவசாயிகளும் அப்பகுதிவாழ் மக்களும்.

போராட்டத்தின் உச்சகட்டமாக, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேனி  பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நேரு சிலையில்  முல்லை பெரியாறு அணைக்காக தீக்குளித்தார். சீலையம்பட்டியை சேர்ந்த இடிமுழக்கம் சேகரும், சின்னமனூரை சேர்ந்த  ராமமூர்த்தியும்  தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஒவ்வொரு முறையும்  மக்கள் அணி திரண்டு கேரளாவிற்குள் நுழைவதும், காவல்துறை அவர்களை தடுப்பதும், தமிழக எல்லையில் இருக்கும் விவசாயிகள் போராட்டக்காரர்களுக்கு உணவு கொடுப்பதும், திரும்பவும் போராட்டம் தொடருவதும் என போராட்டமாக கடந்த நாட்கள் அவை. அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் மக்களை அடக்கியவர்கள் இன்று பாராட்டப்படுகிறார்கள்.
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும்,  காற்று அதனை விடுவதில்லை’ என்றார் மாவோ. 

முல்லை பெரியாறு பிரச்சனைக்காக காற்றாக அசைந்து கொண்டிருந்த மக்கள்,  மரக்கலங்களாக இருந்த  ஆட்சியாளர்களை அசைத்தார்கள் அல்லது மக்களின் அசைவினை ஓட்டு வங்கியாக மாற்ற நினைத்த  அரசியல்வாதிகள் சிறிது அசைவது போல் காட்டிக்கொண்டார்கள். அத்தகைய  மக்கள் போராட்டம் மட்டும் இல்லையென்றால் இத்தகைய மரக்கலங்கள் அசைந்திருக்காது.

அரசியல்படுத்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு  அரசியல்வாதிகள் தங்களுடைய அடையாளத்தை சூட்டிக்கொண்டு முல்லை பெரியாரை காத்தவர்கள் என தங்களுக்கு தாங்களே பெயர் சூட்டிக்கொண்டனர். கடைக்கோடியில்  இருக்கும்  இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் இருக்கும் விவசாயி பிழைக்க தேனியில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும்,  இடிமுழக்கம் சேகரும் , ராம மூர்த்தியும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? மக்களின் நலனில் அக்கறை கொண்ட போராட்டம் என்பதால் மட்டுமே இத்தகைய தற்கொலைகள் சாத்தியமானது.  

அரசின் மக்கள் விரோத செயல்பாட்டினை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் படுத்தப்படுகிறார்கள். அந்த அரசியல்படுத்துதல் தன்னைவிட்டு திமிரும்போது  அவை ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கமாகவும், தங்களுக்குள்ளேயே அடைபடும் போது தற்கொலையாகவும்  மாறுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னாலும் அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்துவதற்கு இன்னமும் கேரளா முரண்டுபிடிக்கும் நிலையில், அதற்கான தீர்வையும் போராட்டம் மூலம் பெற்றுவிட முடியும். அது அறவழி போராட்டமா ? அல்லது ஆயுதமேந்திய போராட்டமா ? என்பதையும் மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

(நிறைந்தது) 

- உ.சிவராமன்
படங்கள்:
வீ.சக்தி அருணகிரி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்