வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (19/10/2015)

கடைசி தொடர்பு:15:15 (19/10/2015)

கைதட்டலை கணித்த கெட்டிக்காரர் எஸ்.எஸ்.வாசன் ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-13)

 

'பாலநாகம்மா' பெற்ற வெற்றி

ஜெமினியில் உருவான முதல் தயாரிப்பான 'மதன காமராஜன்' ,  திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் பல மாதங்கள் ஓடியது. படம் சூப்பர் ஹிட்.  வாசனுக்கு நல்ல வருவாய் கொடுத்தது.

வாசனின் அடுத்த முயற்சி

இதன்பிறகு 'பால நாகம்மா' என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன். அதே படத்தை ஆந்திரத்திலும் தமிழக திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது, தெலுங்கு பதிப்பு. ஆனால் மற்ற தமிழ் தயாரிப்புகளுக்கு இணையாக வெற்றிகரமாக ஓடியது.

நந்தனார்

காதல் காட்சிகள் இல்லாமலேயே ஒரு தமிழ் படத்தை தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தைத் தமிழ்த் திரையுலகில் விதைத்தவர் வாசன். முருகதாசு இயக்கத்தில் நந்தனார் படத்தை வாசன்,  ஜெமினியில் தயாரித்தார். காதல் இல்லாத பக்தி கதை. படத்தில் நந்தனாராக பிரபல தமிழிசைப் பாடகர் எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்தார்.


படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் தண்டபாணி தேசிகர் பாடிய ''கான வேண்டாமோ?, ''வழி மறித்து நிக்குதே'' ''என்னப்பன் அல்லவா" பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. காதல் காட்சிகள் எதுவும் இடம்பெறாத நந்தனார் படத்தை தயாரித்து, வெற்றிகரமாக வெளியிட்டு சாதனை புரிந்தார் வாசன்.

சந்திரலேகா இன்னும் சில சுவாரஸ்யங்கள்

1943-ல் ஜெமினியின் தயாரிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்'  மெகா ஹிட் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. படத்தில் ரஞ்சனும், வசுந்தராதேவியும் (நடிகை வைஜயந்தி மாலாவின் தாயார்) ஜோடியாக நடித்தனர். டைரக்ட் செய்தவர் ஆச்சார்யா. படத்தில் வசுந்தராதேவி ஆங்கில பாணியில் ஆடிய நடனமும், பாட்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், படத்தின் கதையை தமிழ் பத்திரிகைகள் சில ஆட்சேபித்து எழுதின. மங்கம்மா சபதத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆங்கில படங்களுக்கு இணையாக தமிழில் ஒரு படம் தயாரிக்க வாசன் திட்டமிட்டார். அதற்கான கதையை உருவாக்குவதில் ஜெமினி கதை இலாகா ஈடுபட்டது. அந்தப் படம் தான் 'சந்திரலேகா' 

கதை இலாகாவில் அப்பொழுது பணியாற்றிய கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, வேம்பத்தூர் கிருஷ்ணன், நயினா ஆகியோர் பல மாதங்கள் இரவு பகலாக விவாதித்து 'சந்திரலேகா' கதையை உருவாக்கினார்கள்.

ஜெமினி சர்க்கஸ்  என மாறிய கமலா சர்க்கஸ்

சர்க்கஸ் காட்சிகளை பின்னணியாகக் கொண்ட அந்த படத்தில் நடிக்க,  கமலா சர்க்கஸ் கம்பெனியையே பல மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து, ஜெமினி ஸ்டுடியோவுக்குள் அழைத்து வந்து கூடாரம் போட்டு தங்க வைத்தார் வாசன். படத்தில் ஹீரோவாக எம்.கே.ராதாவும்,  வில்லனாக ரஞ்சனும் நடித்தனர். கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி.  என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரிபாய், ஆர்.நாராயணராவ் ஆகியோர் படத்தில் நகைச்சுவை காட்சியில் நடித்தனர்.

பாடல்களை பாபநாசம் சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் எழுதியிருந்தார்கள். (மங்கம்மா சபதம் படத்தை டைரக்ட் செய்தவர் டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா). ஆச்சார்யா, வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.

சில கருத்து வேற்றுமையால் ஆச்சார்யா விலகிக் கொள்ள, 'சந்திரலேகாவை' எஸ்.எஸ்.வாசன் டைரக்ட் செய்தார். வாசன் டைரக்ட் செய்த முதல் தமிழ்ப்படம். 'சந்திரலேகா' இதுதான் தமிழ் பட வரலாற்றில் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட முதல் பிரம்மாண்ட தயாரிப்பும் கூட. பின்னாளில் சந்திரலேகா பெற்ற வெற்றியினால் கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்றே மக்களிடையே புகழ்பெற்றது.

திரையில் சுமார் மூன்றேமுக்கால் மணி நேரம் ஓடிய இப்படத்தை,  ரூ.35 லட்சம் செலவு செய்து தயாரித்தவர் வாசன். இந்த படத்தின் தயாரிப்பிற்காக தனது ஜெமினி ஸ்டுடியோவையும், வீட்டையும் வட இந்திய ஃபைனான்ஸியர் ஒருவரிடம் அடகு வைத்து பணம் திரட்டினார். அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருந்த வாசன், மாதம் தோறும் செலுத்த வேண்டிய வட்டி தொகையைக் கண்டு சற்று நிலைகுலைந்து போனார். கடன் சுமை வாசனை அழுத்தியது.

படத்தை வாசன் தயாரித்து முடிக்க, சுமார் மூன்றரை வருட காலம் ஆனது. வாசன் மனம் தளரவில்லை. ஸ்டுடியோவை விற்றுவிட்டு கடன் சுமையிலிருந்து மீளலாமே என நண்பர்கள் சிலர் வாசனுக்கு ஆலோசனை கூறினர். வாசன் முன்னம் இருந்ததை விட மிகவும் மன உறுதியுடன் இருந்தார். 'சந்திரலேகா' படத்தை 1948-ம் ஆண்டு வெளியிட ஆயத்த பணிகளைச் செய்தார்.

1948- ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் அதாவது தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று 'சந்திரலேகா' படத்தை காக்கிநாடாவிலிருந்து கொழும்பு வரை, தென்னிந்தியா முழுவதும் 50 தியேட்டர்களில் ஒரே நாளில் திரையிட்டார்.

சென்னை நகரில் பிரபாத், க்ரௌன், ஸ்டார், வெலிங்டன் ஆகிய நான்கு தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இப்படத்தைக் கண்டு களித்தனர். படம் வெற்றிகரமாக ஓடியது. வாசன் கடன் சுமையிலிருந்து மீண்டார்.

படத்தில் கவர்ச்சி வில்லனாக நடித்த நடிகர் ரஞ்சனின் குதிரை சவாரிக் காட்சி, வாள் சண்டையை பற்றி பத்திரிக்கைகள் வெகுவாக சிலாகித்து எழுதின. கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி சர்க்கஸில் பார் விளையாடும் காட்சி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டன. ஒரு பத்திரிகை 'ஊதியமாக ஒரு லட்சம் பெற்ற டி.ஆர். ராஜ குமாரியின் அற்புதமாக பார் விளையாடும் காட்சியை காணத்தவறாதீர்கள்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.

* அந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக வசூலைத் தந்தப் படம் என்ற பெருமையை 'சந்திரலேகா' பெற்றுத்தந்தது.

ஹிந்தி பேசிய சந்திரலேகா


சந்திரலேகா படத்தை அப்படியே 'டப்' செய்யாமல், சில காட்சிகளை மீண்டும் ஹிந்தியில் படமாக்கினார். ஹிந்திப் படத்தின் வசனங்களை பண்டிட் இந்திரா என்பவர் எழுதினார். தமிழ் படத்தில் நடித்த 'ரஞ்சன் உள்ளிட்ட சிலர் தங்கள் பாகங்களை, தாங்களே ஹிந்தியில் பேசி நடித்தார்கள். சந்திரலேகா டப்பிங் முடிந்ததும் ஹிந்தி பதிப்பை பம்பாய் நகரில் முதலில் வெளியிட முடிவு செய்தார். அதற்காக பம்பாயிலிருந்து வெளியான Times of India போன்ற பிரபல நாளேடுகளில் முழு பக்க விளம்பரங்கள் வெளியிட்டார்.

'சந்திரலேகா' படத்தின் விளம்பர பேனர்களை ஹிந்தியில் அச்சடித்து' மும்பையின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். 'சந்திரலேகா' இந்திப்பட விளம்பரங்களுக்காக வாசன் செலவழித்த தொகை அந்நாளிலேயே சுமார் 7 லட்சம். ''ஆங்கிலப் படங்களுக்கே சவால் விடும்படி இப்படி ஒரு படத்தை தமிழர் ஒருவரால் இந்தியாவில் எப்படி தயாரிக்க முடிந்தது'' என்று வட இந்திய பட வட்டாரங்கள் வியப்பில் மூழ்கின. இப்படத்தின் மூலம் 'வாசனின் நறுமணம் திக்கெட்டும் பரவியது. வட இந்திய தயாரிப்பாளர்களை ''படம் எடுப்பதில் தமிழர்கள் திறமைசாலிகள்தான்” என்பதை இப்படத்தின் மூலம் ஒப்புக்கொள்ள வைத்தார் வாசன்.

ரஞ்சனுக்கு வரவேற்பு


சந்திரலேகாவில் ரஞ்சனின் நடிப்பும், அனல் பறக்கும் அவருடைய வாள் வீச்சும் வட இந்திய ரசிகர்களை கவர்ந்தது. மும்பை பட அதிபர்கள் ரஞ்சனை இந்திப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ரஞ்சனுக்கு ஹிந்தி தெரியுமாதலால் மும்பைக்கு குடியேறி, வீரதீரச் செயல்கள் நிறைந்த இந்திப் படங்களில் நடித்து புகழப்பட்டார்.

ஆங்கிலத்தில் சந்திரலேகா

சந்திரலேகாவின் நீளத்தை குறைத்து ஆங்கில விளக்க உரையுடன் அமெரிக்கா, சுவீடன், ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகளில் திரையிட்ட தகவலும் அந்நாளில் ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்ற விஷயம். மொத்தத்தில் உலக அளவிலும் புகழ்பெற்ற முதல் தமிழ்ப் படம் 'சந்திரலேகா' என்று கூறலாம்.

திரையுலகின் வாசன் புகுத்திய புதிய முறை

ஜெமினியில் தயாராகும் படங்களில் எஸ்.எஸ்.வாசனின் கவனத்தை மீறி எதுவும் இடம்பெறாது. படம் தயாரித்து முடிந்ததும், தன்னிடம் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களிடமும் கதை பற்றி கருத்து கேட்பார். யாரொருவர் படத்தின் காட்சியையோ, கதையின் ஓட்டத்தையோ விமர்சித்தாலும் அதற்கு முக்கியத்துவம் தந்து படத்தில் மாற்றங்கள் செய்வார்.

ஒருமுறை தான் எடுத்த படத்தின் காட்சிகளை பார்த்த வாசன், தியேட்டரில் அந்த படத்திற்கு எத்தனை இடங்களில் கைதட்டல் எழும் என கணித்திருந்தார்.

பெரும்பாலும் அவரது கணக்கு தப்பாது. அத்தனை கூர்மையான மனிதர். ஆனால் படத்தின் பிரத்யேக காட்சியில், அவர் சொன்னதற்கு மாறாக ஒரு இடத்தில் பார்வையாளர்களிடமிருந்து எந்த சலனமுமில்லை. குழம்பிப்போன வாசன், உடனடியாக அந்த காட்சியை திரும்ப வேறு விதமாக சூட் செய்து படத்தில் புகுத்தினார்.

படம் தியேட்டரில் ரிலீசானபோது வாசன் கணித்ததுபோல் அதற்கும் சேர்த்து ரசிகர்களிடமிருந்து கைதட்டல் எழுந்தது. நிம்மதியடைந்தார் வாசன். அதுதான் அவரது தொழில் ஈடுபாடு.

நடிகர்,  நடிகைகளை ஒப்பந்தம் செய்வதிலும், பிறர் பின்பற்றாத ஒரு வழக்கத்தை வாசன் பின்பற்றினார். சினிமா நடிகைகளையும், நடிகர்களையும் தனது ஸ்டுடியோவில் மாத ஊதியம் பெரும் கலைஞர்களாக வாசன் நியமித்துக் கொண்டார்.

இதன் மூலம் கால்ஷீட் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்த்தார்.  எம்.கே.ராதா, புஷ்பவல்லி, கொத்தமங்கலம், சுப்பு, நடிகை சுந்தரிபாய், ஶ்ரீராம், வனஜா, எல்.நாராயணராவ் போன்றவர்கள் ஜெமினியில் மாத சம்பளத்தில் பணியாற்றிய கலைஞர்கள். 1940- களிலேயே நடிகர் எம்.கே.ராதாவுக்கு மாத சம்பளமாக 2 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது.

சந்திரலேகா படத்தை தயாரிப்பதற்கு முன் குறுகிய கால தயாரிப்பு களாக 'தாசி அபரஞ்சி', 'மிஸ் மாலினி' ஆகிய படங்களை தயாரித்தார் வாசன். இரண்டு  படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

பிரபல நாவல் எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் ஆங்கிலத்தில் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' என்ற நாவல்தான் 'மிஸ் மாலினி' என்ற பெயரில் படமாகியது. கதாநாயகி மாலினியாக புஷ்பவல்லி நடித்தார். இப்படத்தில் சினிமா டைரக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர்,  பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜாவர் சீத்தாராமன்.

மிஸ் மாலினி படத்தில்தான் ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடம் ஒன்றில் நடித்தார் என்பது கூடுதல் தகவல்

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க