வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (28/12/2015)

கடைசி தொடர்பு:18:27 (28/12/2015)

தென்னகத்தின் இசைக்குயில் மறைந்தது; தமிழ் சினிமா முன்னோடிகள் தொடர்-19

ந்தனார் படப்பிடிப்பு தொடங்கி இறுதிக்காட்சிக்கு வந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. "நந்தனாரே! உன்பெருமையை அறியாமல் மோசம் போனேனே..!" என்று வருந்தி,  வேதியராக நடித்த மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர்,  நந்தனராக நடித்த கே.பி. சுந்தராம்பாளின் காலில் விழ வேண்டும்.

நந்தனராக நடித்தவர் விஸ்வநாத அய்யர். 'போயும் போயும் ஒரு பெண்ணின் காலில் அவர் விழுவதா?' என அன்றைய சமூகச் சூழலில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. "கே.பி.எஸ் என் முன்னால் தெய்வம் போல் நிற்கிறார், கலைஞர்களான எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது" என்று கூறி,  அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஸ்வநாத அய்யர்.

கே.பி.எஸ். மீது ஒரு பிரபல சங்கீத வித்வான் கொண்டிருந்த மரியாதையை இது காட்டியது.

சினிமாவில் கே.பி.எஸ்.

நந்தனார் படத்தைத் தொடர்ந்து, 1940-ல் மீண்டும் அஸன்தாஸ் தயாரிப்பில் மணிமேகலை என்ற படத்தில் "புத்தபிரானே..." என்ற பாடலைப் பாடி,  மணிமேகலையாக கே.பி. சுந்தராம்பாள் நடித்தார். 1953-ல் ஜெமினியின் ஔவையார் படத்தில் நடித்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்த இப்படத்தில்,  கே.பி.எஸ். பெற்ற ஊதியம் அன்றைய சினிமா உலகில் வாய்பிளக்கவைத்த விஷயம்.

திராவிட இயக்கங்கள் மற்றும் நாத்திக இயக்கங்கள் இந்துமத கடவுள் எதிர்ப்பு பிரசாரம் செய்தபோது,  தமிழரின் நன்னெறிகளையும், கடவுள் பக்தியையும் பரப்பிய பெருமைக்குரிய திரைப்படம் ஔவையார். இதில் ஔவையாராக நடித்த கே.பி.எஸ், தெய்வப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் தயாரித்த திருவிளையாடலில் மீண்டும் ஔவையாராக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இப்படத்தில் இவர் பாடிய "ஒன்றானவன்..." என்றப் பாடல் மிகப் பிரசித்தம்.

1964 ல் கலைஞரின் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகளாக தோன்றி "வாழ்க்கையெனும் ஓடம்.." என்ற தத்துவ பாடலை பாடி,  அழியாத புகழ்பெற்றார். கே.பி எஸ்.ஸின் திரையுலக சாதனையை பாராட்டி,  அவருக்கு பத்மஶ்ரீ பட்டத்தை வழங்கியது மத்திய அரசு.

1966-ல் இவர் மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் பாடிய "காலத்தில் அழியாத காவியம் பல தந்து..." என்றப் பாடல் மிக பிரசித்தம். 1967ல் கந்தன் கருணை என்ற படத்திலும், உயிர் மேல் ஆசை என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படம் ஏனோ வெளி வரவில்லை. 1969ல் சின்னப்ப தேவரின் துணைவன் மற்றும் ஏ.பி.நாகராஜனின் திருமலைத் தெய்வம்காரைக்கால் அம்மையார் ஆகிய படங்களில் நடித்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சக்தி லீலை படத்தில் ஒரு பக்தையாக தோன்றி நடித்தார். கே.பி.எஸ் நடித்து இறுதியாக வந்த படம் திருமலைத் தெய்வம்.

கே.பி.எஸ். 13 படங்களில் நடித்துள்ளார். 12 படங்கள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்த கே.பி.எஸ்,  பிரசாரங்களில் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் மேடையில் பாடி வந்தார். 1958-ம் ஆண்டு காமராசர் முதல்வராக இருந்தபோது,   தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969-ம் ஆண்டு வெளியான துணைவன் படத்திற்காக மத்திய அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். எம்.ஜி.ஆர்,  சிவாஜி போன்ற தன் அடுத்த தலைமுறை நடிகர்களிடம் பெரும் மதிப்பு கொண்டிருந்த கே.பி.எஸ்,  தன் சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டியபோது,  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் ஒரே ஜீப்பில் மக்கள் முன் வரவழைத்து பெருமைப்படுத்தினார்.

மரணம்

புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ள சிவாஜி கணேசன்,  கே.பி.எஸ் நடிக்கும்போது செட்டில் சிகரெட் பிடிக்கமாட்டார். கே.பி.எஸ் மீது அவ்வளவு மரியாதை. கே.பி.எஸ். சென்னையில் 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி,  தன் 72 வயதில் மரணமடைந்தார். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,  அரசு மரியாதை செலுத்தி,  கே.பி.எஸ்ஸின் பெருமையை நாடறியச் செய்தார்.

தன் சிறப்பு நடிப்பு மூலம் "ஔவையாராகவே" இன்றும் தமிழர் மத்தியில் உலா வரும் இசையரசி கே.பி.சுந்தராம்பாளின் புகழ் இசை, நாடக, சினிமா, உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

கே.பி.எஸ். நடித்த படங்கள்

1. நந்தனார் -1935
2. மணிமேகலை- 1940
3. ஔவையார் -1953
4. பூம்புகார் -1964
5. திருவிளையாடல் -1965
6. மகாகவி காளிதாஸ் -1966
7. கந்தன் கருணை -1967
8. உயிர்மேல் ஆசை- 1967 (வெளிவராத படம்)
9. துணைவன் -1969
10. சக்தி லீலை - 1972
11. ஞாயிறு திங்கள் - 1972
12. காரைக்கால் அம்மையார் 1973
13. திருமலை தெய்வம் 1973

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்