ஜல்லிக்கட்டு நடக்குமா? மத்திய அரசுக்கு வந்த முட்டுக்கட்டை!

ல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கான அறிவிப்பு இதோ வந்துவிடும்... அதோ வந்துவிடும்... என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், தமிழக பா.ஜனதா தலைவர்களும் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்க, அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவாகவே உள்ளது என்கிறது டெல்லி வட்டார தகவல்கள். 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு பொங்கலின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கூறி வருகிறார். இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 30-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதேபோல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், அன்றைய கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கவில்லை எனவும், ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது எனவும், மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ஜவடேகர் இவ்வாறு கை விரித்தபோதே ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கத்தில் மத்திய அரசு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறது என்பது புலனாகியது.

ஆனாலும் பிரகாஷ் ஜவடேகர், 'ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்' என்று மீண்டும் சொல்லத்தொடங்கி உள்ளார். அதேப்போன்று பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் பல தமிழக பா.ஜனதா தலைவர்களும் அதே பல்லவியைதான் பாடி வருகின்றனர்.

ஆனால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு மட்டத்தில் நடக்கும் உள்விவகாரங்கள் குறித்து கிடைக்கும் தகவலோ வேறு மாதிரியாக உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல், இவ்விஷயத்தில் மாறுபட்ட கருத்தை அரசுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கலாமா? என்பது குறித்து அட்டார்னி ஜெனரலின் கருத்தை மத்திய அரசு கேட்டதாகவும், அதற்கு அவர், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மீண்டும் அனுமதிப்பது என்பது உச்ச நீதிமன்றம் கடந்த 2014 மே மாதம் வழங்கிய தடை தீர்ப்பை மீறுவதாக அமைந்துவிடும் என்று அறிவுறுத்தியதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான புதிய சட்டம் கொண்டு வர முடியாமல் போய்விட்டதாக மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் முன்னர் கூறியிருந்தார்.

இதனையடுத்து "பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த வழி செய்ய ஏதுவாக மிருகவதை தடுப்பு சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வருவதற்கு வசதியாக நாடாளுமன்ற கூட்டத்தை நீட்டிக்கவோ அல்லது சிறப்புக் கூட்டத்தை கூட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறப்பு நிகழ்வாக கருதி, 2016 ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்" என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு வசதியாக நாடாளுமன்ற கூட்டத்தை நீட்டிக்கவோ அல்லது சிறப்புக் கூட்டத்தை கூட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா மட்டுமல்லாமல் மேலும் பல கட்சித் தலைவர்களும் விடுத்த வேண்டுகோளும் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விட்டது. ஆக தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு, ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதுதான். அதற்கும் அட்டார்னி ஜெனரல் கருத்து முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மத்திய அரசு குழம்பிப்போய் உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில், கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, 'கூடங்குளம் அணு உலை இன்னும் 15 தினங்களுக்குள் செயல்படும்' என சென்னை விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் கூறி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானதைப்போன்று பிரகாஷ் ஜவடேகரும், பொன் ராதாகிருஷ்ணனும் ஆகாமல் இருந்தால் சரி! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!