வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (07/01/2016)

கடைசி தொடர்பு:18:24 (07/01/2016)

ஞானம் என்பதே விஞ் 'ஞானம்' தான்... பொட்டில் அடித்த பரஞ்சோதி மகான்

சென்னை புதுவண்ணாரப் பேட்டை 'டோல்கேட்'டை ஒட்டினார் போல் அமைந்திருக்கிறது, உலக சமாதான ஆலயம். ஞானவள்ளல், தத்துவ தவஞானி, ஜெகத்மகா குரு என்றெல்லாம் சீடர்களால் போற்றப்படும் பரஞ்சோதி மகானின் சமாதியானது, இந்த உலக சமாதான ஆலயம் என்ற கட்டடத்தில்தான் அமைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைர வியாபாரம் செய்யும் இஸ்லாமிய குடும்பத்தில் 2.5.1900- அன்று மகான் (இனி மகான் என்றே குறிப்பிடுவோம்) பிறந்தார். இளம்வயதிலேயே மகானுக்கு உலகத்தைச் சுற்றுவதில்தான் நாட்டம் சென்றதே தவிர, கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ரங்கூன் (பர்மா), லண்டன் மற்றும் ஆசிய நாடுகள் என மகானின் உறவினர்கள் வைர வணிகம் தொடர்பாக சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

அந்த எல்லாப் பயணங்களிலும் மகான் தவறாது இடம் பெற்றார். அப்படித்தான் ஓர் நாள் லண்டன் மாநகரில் ஒரு அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டி (11.11.1911)போய்க் கொண்டிருந்தது. இங்கிலாந்து இளவரசரை அதில் அமர வைத்து மக்கள்  ஊர்வலமாக கொண்டு போய்க் கொண்டிருந்தனர். வழி நெடுகிலும் அந்த சாரட்டில் இருந்த அரசரின் வழிப்பாதையில் பூக்களைப் போட்டுக் கொண்டே சென்றனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் (மகான்) மக்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார், 'இவர் யார்? இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை?' மக்களோ, இவர் இளவரசர், அதனால்தான் இந்த மரியாதை என்றனர். 'அப்படியானால், இவரை விடப் பெரியவர் யார்?' இது மகானின் அடுத்த கேள்வி. மக்களோ, 'இளவரசரை விடப் பெரியவர் அரசர்' என்றனர். 'அரசரை விட'? இது மூன்றாவது கேள்வி. 'அரசரை விடப் பெரியவர் இந்த உலகத்தில் கடவுள்தான்' என்பதே மக்களின் பதிலாக வெளிப்பட்டது.

சிறுவனாய் இருந்த மகானிற்கோ, எல்லோருக்கும் பெரியவரான அந்தக் கடவுளை பார்த்தே ஆக வேண்டும் என்ற வேகம் யார் அந்த கடவுள்? அவர் எப்படி இருப்பார்? என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. ஒருநாள், இரு நாள் அல்ல.. ஆண்டுக் கணக்கில் இந்தக் கேள்விக்கு விடை தேடித்தேடி மகானின் பாதங்கள் கப்பல் மார்க்கமாக உலக நாடுகளெல்லாம் பயணப்பட்டது. ஓர்நாள் ரங்கூனில் (7.1.1938- அன்றுதான் ஞானம் பெற்றார், அதே தேதி, மாதத்தில்தான் 7.1.1981-ல் மகான் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்) மகானின் கேள்விக்கு பதில் கிடைத்தது. மகானின் தேடலை தொடர்ந்து கவனித்து வந்த 'மார்க்க' அறிஞர் ஒருவர் 'வா, உனக்கு அந்தக் கடவுளைக் காட்டுகிறேன்' என்று மகானின் நெற்றியைத் தொட்டு 'நெற்றிக்கண்' திறப்பு என்றும் ராஜயோகம் என்றும், குண்டலினி யோகம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படும் 'தீட்சை'யை அளித்தார். அத்துடன் நில்லாது, 'இதை தகுதியான நபரா, என்று சோதித்துப் பார்த்த பின்னரே நீ, இந்த உலகத்துக்கு இதை போதிக்க வேண்டும்... எனக்கு சத்தியம் செய்' என்று கேட்க, மகானோ, அதற்கு சம்மதிக்காது மறுத்து விட்டார். ஆண்டாண்டு காலமாய் நான் தேடித்தேடி அலைந்து பட்ட கஷ்டத்தை இனி வேறு எவரும் படக் கூடாது.

இந்த 'தவம்' மிகச் சிறப்பான ஒன்று, மனித வாழ்வுக்கு மிக அற்புதமான நலத்தை அளிக்கக் கூடிய ஒன்று. இதை பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் நான் போதித்தே தீருவேன். இந்த தவத்தின் ஆற்றலே அதைப் பெறுகிறவரை வழி நடத்தும் என்று கூறிச் சென்று விட்டார். 'சரி, இனி உன் விருப்பம்... நான் கொடுத்த சக்தியை, பயிற்சியை நானே திரும்பப் பெறுவது சாத்தியமில்லாதது' என்று கூறி மகானை வாழ்த்தி அனுப்பி விட்டார்.

மகானின் பயணம் தொடர்ந்தது. மதுரையிலும், தஞ்சையிலும் பின்னர் சென்னையிலும் உலக சமாதான ஆலயத்தை உருவாக்கி அனைவருக்கும் போதித்தார். மதுரையில் பல்லாண்டு காலங்கள் தொடர்ந்து தங்கியிருந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். வணங்காதே, வணங்க வைக்காதே... ஞானம்தான் விஞ் 'ஞானம்', தலைக்கு மேலே (சொர்க்கலோகம்?)யும் ஒன்று மில்லை, காலுக்கு கீழேயும் (பூலோகம்?) ஒன்றுமில்லை... இதை தவத்தால் அறிக ! சந்தோஷம்...  மகானின் சொற்பொழிவுகளில் இந்த வார்த்தைகள் மிகவும் பேசப்பட்டன.

... 'இது மறை பொருள் ஒன்றுமில்லை, ஆர்வமுள்ளவர்கள் யாராயினும் வாருங்கள், கட்டணம் ஒன்றுமில்லை' என்று அனைவருக்கும் இந்த ஞான சக்தியை பொதுவுடமை ஆக்கினார்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேஷியா என்று உலகநாடுகளில் எல்லாம் மகான் தேடிப்போய் 'தீட்சை'யைக் கொடுத்து மக்களை தன்னைப் போலவே ஞானத் தெளிவு நிலைக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டார்.

மகானின் தவ வலிமை குறித்து கூறும் ஆந்திர மக்கள், "ஒருமுறை  ஆந்திராவில் ஜல்லடியன் பேட்டை கிராமத்தில் மக்கள் காளிக்கு நரபலி கொடுப்பதை கேள்விப்பட்டு அங்கு நேரே மகான் வந்து விட்டார். அந்த மக்களிடம் 'நரபலி கொடுப்பது தவறு, எந்த தெய்வமும் நரபலியைக் கேட்பதில்லை' என்று அவர்கள் வழியிலேயே போய் எடுத்துச் சொன்னார்.  ஆனால், கிராம மக்களோ, மகானின் வார்த்தையைக் கேட்கும் நிலையில் இல்லை. மகானோ' இந்த ஊர் எல்லையில் போய் நான் இருக்கிறேன், உங்கள் மனதை மாற்றிக் கொண்டால் வந்து சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டு அந்த ஊர் எல்லையில் போய் அமர்ந்து கடும் தவத்தில் மூழ்கிவிட்டார். மகான் தவத்தில் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த காளிகோயில் கதவு மூடிக்கொண்டு விட்டது. நாங்கள் (ஊர் மக்கள்)  எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. அவ்வளவுதான் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவந்து, 'சாமீ, எங்களை மன்னிச்சுடுங்க, தெரியாம தப்பு பண்ணிட்டோம், நீங்க சொன்னது மாதிரி நாங்க பூசணிக்காயை மட்டும் பலி கொடுக்கிறோம், கோயிலை திறந்திடுங்க' என்று  உறுதி கொடுத்த பின்னரே மீண்டும் மகான் அவர்கள் கோயிலை திறந்தார்.

ஆந்திராவின் ஜல்லடியன் பேட்டையில் (ஜக்கம்மா காளி கோயில்) மகானின் இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, அந்தக் கோயிலின் வாசலில் மகான் படத்தை வைத்து மகானை வணங்கிய பின்னரே இன்றளவும் எங்கள் கிராமத்து மக்கள் கோயிலுக்குள் போகின்றனர்" என்கின்றனர்.

.... அதேபோல் ஆந்திராவின் ராஜமுந்திரியில் அமைந்துள்ள பாலயோகியார், சின்ன பாலயோகியார் என்ற மகான்(சகோதரர்) களுக்கு ஞானதீட்சை அளித்ததும் மகான் தான். ஆந்திராவில் பாலயோகியார் சமாதிகளுக்கு சென்றுவர  விஷேச நாட்களில் அரசே சிறப்புப் பேருந்து வசதியை செய்து கொடுத்துள்ளது... என்கின்றனர்.

சிங்கப்பூரின் அன்றைய கலாச்சாரத்துறை அமைச்சர் 'லீ-கூன்- சாய்' க்கு இன்று வயது 92. அவர் மகான் பற்றிக் கூறும்போது, "இப்படியொரு அற்புதமான ஆற்றல் உள்ள மகானைக் காண்பது அரிது. நான் அவரிடம் நேரடியாக தவத்தைக் கற்று 'தீட்சை' பெற்றதால்தான் இன்றளவும் ஆரோக்கியமாக, சுறு சுறுப்பாக இருக்கிறேன்" என்கிறார்.

....வாழ்க வளமுடன் என்ற சொல்லுக்கு சொந்தக் காரராக விளங்கும் வேதாத்ரி மகரிஷி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இன்னும் சில பிரபல அரசியல், ஆன்மிக தலைவர்கள் மகானின் சீடர்களாய் இருந்து அவர் தவத்தை சீராக கடைப் பிடித்தவர்கள்... என்கிறார், மகானின் ஒரே மகளான மும்தாஜ் அம்மையாரின் கடைசி மகனும், மகானின் பேரனுமான குரு.நூர்தீன்.  உலக சமாதான ஆலயத்தை, மகான் நினைவைப் போற்றும் விதமாக இவர்தான் தற்போது நிர்வகித்து வருகிறார். மகானைப் போலவே இந்த 'பயிற்சி'யைப் போதிப்பதன் மூலம் பணம் பண்ணாமல் இருப்பதால், 'கார், வேன்களுக்கு கண்ணாடிகளை பொருத்தும் சுயவேலையில் பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்.

மகானின் ரத்தம் அப்படித்தான் பயணிக்கும்.

மகானின் நூல்கள்


மகானின் சொற்பொழிவுகள், மேடைப் பேச்சுகள் பல நூல்களாய் அவர் காலத்திலேயே வெளியிடப்பட்டிருந்தன. அதில் 'ஐ காட்' என்று ஆங்கிலத்திலும், 'நான் கடவுள்' என்று தமிழிலும் மகான் இயற்றிய நூலே மிக நுட்பமான அத்தனை கருத்துகளையும் மொத்தமாக கொண்டிருக்கும் நூல் என்ற கருத்து தீட்சை பெற்ற 'உணர்வாளர்' களின் கருத்தாக இருப்பதால் இதுவரை பதினாறு பதிப்புகள் அந்நூல் வெளியாகி உலக நாடுகளில் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

மகானின் புத்தகத்திலிருந்து,:

...ஞானமும், அரசியலும் ஒன்றுபட்ட அன்றே, உலக சமாதானம். பசிப்பிணியையும் ஒழித்து, பணத்துக்குள்ள மரியாதையையும் ஒழித்து, உருவ வழிபாடுகளையும் ஒழித்து, உலகிலுள்ள ஜாதி, மத, வேத, போத-பேதங்களையும் ஒழித்து, எந்நாட்டில் விளைந்த விளைவானாலும் அது எல்லா நாட்டிற்கும் பொதுவாய் நிர்வகிக்கும் நிர்வாகமுள்ள அன்றே உலக சமாதானம்!

... புகழை நம்பி, அறிவை  அடிமைப் படுத்தாதீர்கள், துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டு விடாதீர்கள்... ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட , அரை நிமிட ஆராய்ச்சியே மேல்!

-ந.பா.சேதுராமன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்