அன்புள்ள அப்பா... உங்கள் மகள் உங்களிடம் இதைச் சொல்லியிருக்கிறாளா? | Little Girl's 'Dear Daddy' Video Goes Massively Viral

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (07/01/2016)

கடைசி தொடர்பு:18:47 (07/01/2016)

அன்புள்ள அப்பா... உங்கள் மகள் உங்களிடம் இதைச் சொல்லியிருக்கிறாளா?

“அன்புள்ள அப்பா.....அம்மாவின் வயிற்றிலிருந்து இந்தப் பூமிக்கு நான் வருமுன்னர் இருந்தே, என்னை மிக அக்கறையாக கவனமாகப் பார்த்துக் கொண்டதற்காக உங்களுக்கு நன்றி.  அம்மாவையும் அவள் வயிற்றில் இருக்கும் என்னையும் ஒரு சூப்பர் மேனைப் போல் நீங்கள் பார்த்துப் பார்த்து பராமரித்தீர்கள். அதற்காக ஆயிரம் நன்றிகள் அப்பா. ஆனால், இப்போது உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.....” என்று தொடங்கும் அந்த வீடியோ அடுத்தடுத்து பேசும் விஷயங்கள்... மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்புகிறது!

யூ டியூபில் Dear Daddy என்ற ஹேஷ்டேக்குடன் இருக்கும் அந்த வீடியோ, இதுவரை 72 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்களுக்கு மேல் குவித்திருக்கிறது. ஒரு மகளின் குரலாக ஒலிக்கும் அது,  உலகின் அத்தனை தந்தைகளுக்குமானது!

“நான் ஒரு பெண். நான் டீனேஜை எட்டும்போது என் ஆண் நண்பர்கள் தங்களுக்குள் என்னை ஆபாச வார்த்தைகளால் குறிப்பிடுவார்கள். என் உடல் அங்கங்களையும் செயல்களையும் வரைமுறையில்லாமல் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு ஜாலி விளையாட்டாகத் தோன்றும். ஏன், நீங்களும் உங்கள் டீனேஜில் உங்கள் நண்பர்களைக் குஷிப்படுத்த அப்படியான விஷயங்களைச் செய்திருப்பீர்கள். நீங்கள் அதை வேண்டி விரும்பி செய்திருக்கவில்லையென்றாலும், அந்தப் பழக்கம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது.

என் 16 வயதில், என் ஆண் நண்பர்களில் சிலர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிப்பார்கள். 20 வயதுக்கு மேல் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, யாரேனும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவார்கள். யார் கண்டது... அந்த நபர், உங்களுடன் பெண்களை கேலி பேசிச் சிரித்த உங்கள் நண்பர்களில் எவருடைய மகனாகக் கூட இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் நான் என் மனதுக்குப் பிரியமானவனைக் கண்டுபிடிப்பேன். அவன் எனக்கானவனாக இருப்பான். நாங்கள் சந்தோஷமாக இருப்போம். ஆனால், ஒரு நாள் ஏதேனும் சண்டை வந்தால், அவனும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டுவான். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பெண்களைப் பற்றி அர்ச்சித்த வார்த்தைகளைப் போலவே. பிறகு என்னை அடிப்பான்!” - இப்படி ஒரு பெண் சிசு, தான் பிறப்பதற்கு முன் தன் தந்தையிடம் வைக்கும் கோரிக்கையாக பல வேண்டுகோள்கள் அடுக்கப்படுகிறது அந்த வீடியோவில்.

வீடியோவில் வரும் சில வார்த்தைகள் நம் ஊரில் சிலருக்கு ’டூ மச்’ ஆகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள் முழுக்க ஒரு பெண்ணின் உடலில் இருந்தால்தான், அவர்களுக்கு வீடியோ சொல்லும் விஷயத்தின் வீரியம் புரியும். இடம், பொருள், ஏவல் வித்தியாசமில்லாமல் எங்கு சென்றாலும் வேசி, அயிட்டம் என்ற வார்த்தைகள் பெண்களைத் துரத்தியடிக்கும். ஒரு ஆணிடம் சில நிமிடம் சிரித்துப் பேசி விட்டால் அவ்வளவுதான்... அது வதந்தியாகக் கிளம்பி, கிசுகிசுவாகப் பரவி, நமுட்டுச் சிரிப்புகளைத் தோற்றுவிக்கும்.

இதனாலேயே ஒரு முசுட்டு முகமூடியை எங்களில் பலர் மாட்டிக் கொண்டு, ஒரு பதற்ற மனநிலையுடனே நாட்களை நகர்த்துகிறோம். அதை ’தந்தை’யாக இருக்கும் ஆண்களுக்கும் பிற ஆண்களுக்கும் உணர்த்துவதே அந்த வீடியோவின் மையக்கருத்தாக இருக்கிறது.

அதே சமயம் அந்த 'டியர் டாடி' வீடியோவுக்கு எதிர்வினையாகவும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில், 'பெண்களுக்கான எல்லா சிக்கல்களும் எங்களுக்கும் கூட இருக்கிறது' என்று ஆண்களின் பார்வையில்,  சில அடிப்படையற்ற பிரச்னைகளை பூதாகரப்படுத்துகிறார்கள். அப்படியான முதிர்ச்சியற்ற புரிதல் மற்றும் செயல்களுக்குக் காரணம் உளவியல் சிக்கல்தான். அந்த சிக்கல்தான் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கும் அடிப்படை.  அந்த வீடியோவை அப்படியே நம் தமிழ் சமூகத்துக்குப் பொருத்த முடியுமா என்பது கேள்விகுறிதான்.

ஆனால், அதை முற்றிலுமாக மறுக்கவும் முடியாது. வருங்காலத்தில்.... இல்லை இல்லை... இப்போதே அதுதான் பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதைக் கரிசனத்துடன் காது கொடுத்துக் கேட்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமை.

பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு சாகும் போது, ’அவளுக்கு பாடம் கற்பிக்கவே அவன் அப்படிச் செய்தான்’ என்ற சட்டம் படித்த சில வக்கீல்களே வாதிடும் இந்த சமூகத்தில், பெண்களுக்கே மீண்டும் மீண்டும் புத்திமதி சொல்லப்படுகிறது. ஆனால், இந்த எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம் ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் மனப்போக்குதான்.

அதனாலேயே ஆண்கள் பெண்ணை என்றுமே தனக்கான உடைமையாகப் பார்க்கிறான்; பெண்களை அடைகிற பொருளாக, ருசிக்கின்ற பண்டமாகக் கருதுகிறான். அந்தப் பார்வையை ஒரு சட்டத்தின் மூலமோ, சில மாத பிரசாரங்கள் மூலமோ மாற்ற முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் அருமை, பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை ஆண்கள் மனதில் அழுத்தமாக விதைத்துக்  கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு குழந்தையை பிரசவிக்கும் வலியை அம்மாக்கள், தத்தமது மகன்களுக்கு உணர்த்தி இருந்தாலே, இந்த சமூத்தில் பெண்கள் இத்தனை வார்த்தை வதைகளுக்கும், உடல் வாதைகளுக்கும் உள்ளாகியிருக்க மாட்டார்கள்!

டியர் டாடி வீடியோவைப் பார்க்க க்ளிக் செய்க...:
https://www.youtube.com/watch?v=dP7OXDWof30- ரமணி மோகனகிருஷ்ணன்
                                                                                                           

(மாணவப் பத்திரிகையாளர்)


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்