முதல்வர் கவனத்துக்கு... உடனடி தேவை கன்றுகள் அல்ல, கத்திகள்!

கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 'தானே' புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும் தென்னை போன்ற பயிர்களை மீண்டும் பயிரிட, இலவச மரக்கன்றுகள், பயிர்களுக்கான ஓராண்டு இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா!

'தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாய வேலையாட்களுக்கான சம்பளம், சொந்த நிலங்களில் நில மேம்பாடு, குழி எடுத்தல் போன்ற விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தின்படி ஊதியம்.

இடைப்பட்ட காலங்களில் இந்த விவசாயிகள், உளுந்து, பாசிப்பயறு, சிறு தானியங்கள் மற்றும் வேர்க்கடலை போன்ற ஊடுபயிர்கள் சாகுபடி செய்து வருமானம் ஈட்டும் வகையில், அவற்றை பயிரிடுவதற்கான சான்று விதைகள், உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவையும் ஓராண்டு காலத்துக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றெல்லாம்கூட அறிவித்துள்ளார், முதல்வர்.

இவை அனைத்துமே... சந்தேகமே இல்லாமல் வரவேற்க தக்க அம்சங்களே!

அதேசமயம், முக்கியமான ஒரு விஷயத்தை முதல்வர் மறந்துவிட்டார். ஒருவேளை, அது அவருடைய கவனத்துக்கு கொண்டு வரப்படாமல்கூட போயிருக்கலாம்.

அதாவது, புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மரங்களை முதலில் அப்புறப்படுத்தினால்தான், அடுத்தக்கட்டமாக புதிய கன்றுகளை நடுவது, ஊடுபயிர் செய்வது போன்றவற்றில் ஈடுபட முடியும். மரங்களை அறுத்து எடுக்க இயந்திரங்களும், ஆட்களும் கிடைக்காமல் அவதிப்படும் அந்த மக்களுக்கு முதல் தேவை... நிலத்தை சுத்தப்படுத்தும் பணிதான். இந்தத் தேவையை முதலில் பூர்த்தி செய்ய முதல்வர் முன்வரவேண்டும்.

போர்க்கால அடிப்படையில் அப்பணிகள் நடந்தேறுவதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்!

- பசுமை விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து - http://www.facebook.com/PasumaiVikatan

Do you like the story?

Please Appreciate the Author by clapping!