வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (12/03/2016)

கடைசி தொடர்பு:18:01 (12/03/2016)

தள்ளிப்போகும் புத்தக கண்காட்சி... தவிப்பில் பதிப்பாளர்கள்!

சென்னை புத்தக கண்காட்சி மீண்டும் ஒரு முறை தள்ளிப்போயிருக்கிறது. 'பபாசி' எனப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடந்த  பல ஆண்டுகளாக சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது.

உலகம் முழுக்க இருக்கிற தமிழ் புத்தக பிரியர்களுக்கு உண்மையான தீபாவளி இந்த புத்தக கண்காட்சிதான் என்றே சொல்லலாம்.  பத்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஒருநாளாவது பங்கேற்றால்தான் ஜென்ம சாபல்யம் அடைவார்கள் வாசகர்கள்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் சென்னை புத்தக கண்காட்சி,  இந்த முறை யார் கண்பட்டதோ சென்னையில் பெய்த அசாதாரண மழையினால் ஏப்ரலுக்கு தள்ளிப்போனது.

தமிழக சட்டமன்றத் தேர்தலினால் அது இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. இதனால் புத்தக கண்காட்சி இந்த வருடம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது தற்போது.

வாசகர்கள் பெருகியிருப்பினும்,  கடந்த பல ஆண்டுகளாக பதிப்பகத் தொழில் அவ்வளவாக சிறப்பாக இல்லை என்பதே நிஜ நிலவரம். ஏற்கனவே தள்ளாட்டத்தில் உள்ள பதிப்பாளர்கள்,  புத்தக கண்காட்சி தள்ளிப்போயிருப்பதால் மேலும் நொந்துபோயுள்ளனர். காரணம் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உடனடி வியாபார களமாக இருந்து வந்தது புத்தக கண்காட்சி என்பதால்தான். 

புத்தக கண்காட்சிக்கென தயாரிக்கப்படும் புத்தகங்கள்,  பெருமளவு கண்காட்சியில் விற்பனையாவதுதான் பதிப்பாளர்களுக்கு ஓரளவாவது நஷ்டத்தை தவிர்க்கும் வாய்ப்பாக இருக்கும். இந்த கணக்கின்படிதான் கடந்த பல ஆண்டுகளாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் புத்தக கண்காட்சி தள்ளிப்போயிருப்பது சிறுபதிப்பாளர்கள் பலர் தொழிலைவிட்டே வெளியேறும் அபாயத்தை தந்திருப்பதுடன்,  மே மாதம் பிற்பகுதியில் தேர்தல் நடந்து முடிந்தாலும், அதற்கு பிந்தைய நம்பகமற்ற அரசியல் சூழலினால் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியே நடக்குமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், புலம் பதிப்பக நிறுவனருமான லோகநாதனிடம் பேசினோம்.

“புத்தக வாசிப்பு என்பது மருவிவிட்ட இந்த காலத்தில் புத்தகங்களை பதிப்பது என்பது பதிப்பாளர்களுக்கு பெரும் சிரமத்திற்குரிய பணியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் புத்தக கண்காட்சிகள் மட்டுமே நம்பிக்கையான ஒரு வியாபார தளமாக கடந்த பல வருடங்களாக உள்ளன. ஆனால் அதற்கும் இப்போது சிக்கல்கள் வர ஆரம்பித்துவிட்டன"  என்றார் ஆற்றாமையான குரலில்.

“பொதுவாக லாபம் நிச்சயமற்ற தொழிலான பதிப்பகத்தொழிலில் சிக்கலைத் தவிர்க்க,  அடுத்த ஆண்டின் விற்பனைக்கான சந்தை மதிப்பை கணக்கில் கொண்டே முந்தைய ஆண்டு அச்சிட்டு வைப்பார்கள். ஆக ஒரு வருட சந்தையை கணக்கிட்டே தயாரிப்பு நடக்கும். ஜனவரியில் கண்காட்சியில் கணிசமான விற்பனை ஆனதும் விற்பனை போக மீதமானவற்றை தமிழகம் முழுக்க அனுப்பிவைப்போம். பின் அடுத்த ஆண்டுக்கான வேலைகளை துவக்குவோம். இந்த திட்டமிடலில் கொஞ்சம் சறுக்கினாலும் பதிப்பாளர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கவேண்டி வரும்.

இப்போது கண்காட்சி தள்ளிப்போயிருப்பதால்,  2016 புத்தக கண்காட்சியை திட்டமிட்டு அச்சிட்ட புத்தகங்கள் தேங்கிவிட்டிருக்கிறது. முதலீடும் உழைப்பும் முடங்கியுள்ள நிலையில்,  அடுத்த ஆண்டுக்கான  தயாரிப்பு பணியை அதற்கான நேரம் வந்தபின்னும் தொடங்க முடியவில்லை. ஆக இப்போது நாங்கள் ஒரு வருடத்தில் நடக்கவேண்டிய பரிவர்த்தனைக்காக இரு வருடங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சென்னை மழையினால் ஏற்பட்ட சேதாரம், நுாலக ஆணை தள்ளிப்போனது, புத்தக கண்காட்சி எப்போது நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை இந்த காரணங்களால் சிறுபதிப்பாளர்களுககு 2 லிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலும், பெரிய பதிப்பகங்களுக்கு 25 லட்சம் வரையிலும் இந்த ஆண்டு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. பதிப்பகத்துறையில் இது பெரும்தொகை” என்றார்.

“கடந்த பல வருடங்களாகவே பதிப்பகத்துறைக்கு போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். கண்காட்சி மற்றும் கடைகளில் ஆகும் விற்பனை போக பதிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு விஷயம், ஆண்டுதோறும் அரசு நூலகத்திற்கான கொள்முதல் ஆணை. ஆனால் அதிலும் கடந்த சில வருடங்களாக முறையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கடந்த 2013-ம் ஆண்டிற்கான நுாலகத்திற்கான கொள்முதல் ஆணைக்கு பின் 2015-ம் ஆண்டிற்கு நேரடியாக ஆணைக்கான அறிவிப்பை வெளியிட்டது. 2014 -க்கு என்று தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இப்போது துாங்கிக்கொண்டிருக்கின்றன. பதிப்பக தொழிலின் நலிவுக்கு இதுவும் ஒரு காரணம்.

பொதுவாக பெரும்பாலான சிறு பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வெளியிடங்களில் கடைகளில் விற்பது பெரிய அளவு லாபகரமானதாக இருக்காது. ஆண்டுக்கொருமுறை நடக்கும் சென்னை புத்தக்கண்காட்சி அவர்களுக்கு லாபமும் வசதியானதும் கூட. இப்போது கண்காட்சி தள்ளிப்போய் எப்போது நடைபெறும் என்பதே தெரியாத நிலையில் கண்காட்சியை நம்பி,  தங்களின் ஒருவருட உழைப்பையும் முதலீட்டையும் செலுத்தி,  அது வீணாகியதில் முடங்கிப்போயுள்ளனர்.

 

இதுஒரு பக்கமென்றால் புத்தக கண்காட்சி தள்ளிப்போயிருப்பது வாசகர்களுக்கும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தீவிர வாசிப்பாளர்கள் இந்த ஆண்டின் புதிய நல்ல நூல்களை படிக்கும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். சிறந்த புத்தகங்கள் பரவலாக வாசகர்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் இது வாசக உலகிற்கும் நட்டம்தான் ” என்றவரிடம், அரசிடமிருந்து என்னமாதிரி உதவிகள் கிடைத்தால் பதிப்பகத் தொழிலில் இம்மாதிரி சிக்கல்களை தவிர்க்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“அரசு நூலகங்களையும், பள்ளி, கல்லூரி நூலகங்களையும் மேம்படுத்த ஆண்டுதோறும்  புதிய நூல்களை வாங்குவது, சிறுசிறு கண்காட்சிகளை நடத்த ஆர்வம் காட்டுவது, நூலகங்களில் வாசகர் வட்டங்களை உருவாக்கி வாசிப்பதற்கான ஆர்வத்தைத்  தூண்டுவது, பதிப்பாளர்களிடம் நூல்களை நியாயமான தள்ளுபடி விலையில் கோருவது, நெகிழ்வான காலத் தவணைகளில் பதிப்பகங்களுக்குக் கடனுதவிகளை வழங்குவது போன்றவற்றைச் செய்வதன் மூலம் அரசு சிறு பதிப்பகங்களும் தயக்கமின்றி நல்ல நூல்களை வெளியிட்டுப் பரவலாக்கம் செய்வதற்கு உதவ முடியும்.” என்றார் நம்பிக்கையான குரலில்.

அறிவார்ந்த சமுதாயம் உருவாக அடிப்படையான விஷயம் நல்ல நுால்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என தமிழறிஞர்களை போற்றும் தமிழகத்தில்,  தமிழின் நல்ல எழுத்துக்களை  அறிமுகம் செய்து வைக்கும் பதிப்பாளர்களை புலம்பச் செய்வது நியாயமா நியாயமாரே...?

- எஸ்.கிருபாகரன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்