வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (21/04/2016)

கடைசி தொடர்பு:19:18 (21/04/2016)

தேர்தல் திருவிழாவில் தொலைந்து போனதா பாஜக?

டந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதாக் கட்சி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவே படாதபாடு பட்டுவருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருப்பதைக் காட்டி, வலுவான கூட்டணியை தங்களது தலைமையில் அமைத்துவிடலாம் என்று நம்பி, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை கட்டம் கட்டமாக சந்தித்தும் அந்த ஆசை பகல் கனவாகப் போயுள்ளது தமிழக பாஜகவுக்கு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் வீசிய காங்கிரஸ் எதிர்ப்பு அலை- மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை. தாமரைக்குப் பதிலாக அதிமுகவின் இரட்டை இலை 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மலர்ந்தது. இது இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த வெற்றி என்று அதிமுக பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால் பாஜக  என்ன செய்வது என்று தெரியாமல் அப்போது இருந்தே இன்றுவரை தடுமாறிக் கொண்டுள்ளது.பாஜகவை உற்றுக் கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் இதனை உறுதி செய்கின்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மதிமுக, தேமுதிக, பாமக, ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருந்தன. இவற்றோடு  சேர்த்து இந்திய அளவில் 27 கட்சிகள் பாஜக தலைமையில் அணிவகுத்து களம் கண்டன. அதில் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வாங்கி   மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மத்தியில் ஆட்சியமைந்த  சில மாதங்களிலேயே மதிமுக, பாமக, தேமுதிக என்று கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியே வந்தன. அதன் பிறகு இரண்டு ஆண்டாக ஒன்று சேரவில்லை. ஆனால் பாஜக தமிழகத் தலைமை மட்டும் இன்னமும் எங்கள் கூட்டணி நீடிக்கிறது என்று ஊடகங்களில் கூறி வந்தது. ஆனால் அதெல்லாம் வெறும் விருப்பம்தான் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 

தமிழக பாஜகவின் தலைமை, அதிமுக மற்றும் திமுகவை அதிர வைக்கும் அளவில் மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டது. ஆனால் அதை  தேமதிக - தமாகா- மக்கள் நலக் கூட்டணி செயல்படுத்திவிட்டது. இது அதிர்ச்சிதான் என்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கி தேர்தலை சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது பா.ஜனதா. புதிய நீதிக்கட்சியுடன் கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால்  ஐ.ஜே.கே.,மக்கள் கல்விக் கழகம் உள்ளிட்ட தங்களுக்கு இணக்கமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு  தயாராகிவிட்டது. 

வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என்று தமிழக பாஜக பரபரப்பு ஆகிவிட்டது. ஆனால்  தேர்தல் பணிகளில் பிற கட்சியினர் அளவிற்கு இன்னமும் விறுவிறுப்பு காணப்படவில்லை. பாஜகவில் ஐக்கியமான சினிமா பிரமுகர்கள் அக்கட்சிக்கு வாக்குச் சேகரிக்கும் செய்திகள் எங்கும் வெளியே வரவில்லை. திமுகவில் இருந்து பாஜகவில் ஐக்கியமான முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் என்ன செய்கிறார்  என்பதும், எங்கிருக்கிறார் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. "கட்சியில் சேரும்போது தமிழகம் வந்தார். அதன் பிறகு பாஜக அலுவலகம் பக்கம் வருவதே இல்லை" என்கிறார்கள் பாஜகவினர்.

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன், தமிழகத்தில் தற்போது நடைபெறும்  சட்டமன்றத் தேர்தலுக்கு பிரசாரம்  செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. ஆனால் ஆந்திராவில் நடந்த தெலுங்குபட  படப்பிடிப்பில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு தமிழகம் பக்கம் வராமலே சென்றுவிட்டார். அதே போல இன்னும் சில சினிமா பிரமுகர்களும் தேர்தல் பணியில் இறங்காமல் இருக்கின்றனர்.

கூட்டணி வலுவாக அமையாதது, பிரசாரத்தில் சுணக்கம் இதெல்லாம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு  தமிழக பாஜக  தமிழகத் தலைமையில் மாற்றம் கொண்டுவரும் நிலைக்குச் செல்லும் என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

அந்த மாற்றம் எதிர்காலத்திலாவது  தமிழக பா.ஜனதாவுக்கு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்