வங்காள ஜெயலலிதாவும், தமிழக மம்தாவும் பின் இலவச சைக்கிளும்

ரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரே மாதிரியாக நடக்கும். புவியியல் ரீதியில் இடமாறுபாடுகள்  இருந்தாலும் சில நபர்கள் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள். அத்தகைய ஒற்றுமை எப்போதும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் உண்டு.

இருவரும் தன் கட்சியை தங்களது இரும்புக் கரங்களில் வைத்து இருப்பவர்கள். அவர்களின் முடிவுதான் கட்சியின் முடிவாகப் பார்க்கப்படும். அவர்கள் குணங்களிடையே மட்டும் காணப்பட்ட ஒற்றுமை, இம்முறை தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்துள்ளது. ஆம். இரண்டு மாநில தேர்தல் முடிவுகளையும் ஆராய்ந்தால், இருவரின் வெற்றிகளிலும் சில பொதுவான விஷயங்கள் தென்படுகிறது.

டெலிகிராஃப் நாளிதழ் மம்தாவின் வெற்றியை, வங்கம் முழுவதும் பச்சை படர்ந்துள்ளதாக வர்ணித்துள்ளது. நாம்,  தமிழகத்தின் அதிமுக வெற்றியையும் அப்படியே வர்ணிக்கலாம். ஆம் இரண்டு கட்சிகளும் தனிப் பெருபான்மையுடன் சட்டமன்றத்தில் நுழைகின்றன.

அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னம்:

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தன. இவர்களின் கூட்டணி பேச்சுவார்த்தைகள்,  துவக்கத்தில் மம்தாவை கவலையுற செய்தது.  இது குறித்து தன் கட்சியினருடன் மம்தா ஆலோசனைனையும் நடத்தி உள்ளார். ஆனால், அதையும் மீறி அங்கு வலுவான கூட்டணி அமைந்தது. இடதுசாரிகளும் காங்கிரசும் கரம் கோத்தது. சொல்லப்போனால், அதே நிலைதான் தமிழக தேர்தல் களத்திலும் இருந்தது. துவக்கத்திலிருந்தே அதிமுக, தனக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய விடக் கூடாது என்பதில் மிக தெளிவாக வேலை பார்த்தது.

அதே நேரத்தில் இரண்டு கட்சிகளும் தங்கள் சின்னம்தான் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமென்று விரும்பின. தமிழகத்தில் அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. எப்படி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம்  போட்டியியிட்டதோ, அது போல்தான் மேற்கு வங்காளத்திலும் திரிணாமுல் காங்கிரஸின் 'இரட்டை பூ' சின்னம் 294 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
 

கொத்து கொத்தான வெற்றி:

எப்படி தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான  கோவை, திருப்பூர், ஈரோடு , சேலம் மற்றும் நாமக்கல்லில் கொத்து கொத்தாக வெற்றி கனியை அதிமுக பறித்ததோ, அதுபோலவே மேற்கு வங்கத்திலும் ஹவுரா, ஹூக்ளி, கூச் பெகர், ஜல்பைகுரி, பர்கானாஸ், கொல்கத்தா, மிட்னாப்பூர்  உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ளது திரிணாமுல்.

மேற்கு மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில், 38 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. அதுபோல் திரிணாமுல் 9 மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 143 ஐ கைப்பற்றி உள்ளது. இந்த பெரும் வெற்றிதான் இருகட்சிகளுக்கும் ஆட்சியை கைப்பற்ற உதவி புரிந்தது.

ஆட்சிக்கு எதிரான அலை இல்லை:

எப்போதும் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்வது ஆட்சிக்கு எதிராக இருக்கும் மக்களின் வெறுப்புணர்வுதான். ஆனால், இரண்டு மாநிலங்களிலும் அப்படி எந்த அலையும் இருக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மீது சாரதா சிட் ஃபண்ட் ஊழல் குற்றச்சாட்டு, மேம்பால சரிவு என்று பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அது எதுவும் தேர்தல் வெற்றி வாக்கு சதவீதத்தை பாதிக்கவில்லை. ஏறத்தாழ அதை நிலைதான் தமிழகத்திலும்.

எதிர்சித்தாந்தத்தை இல்லாமல் செய்தல்:

எதிர்க்கட்சியை செயல் இழக்க செய்வதற்கு ஒரு நல்ல யுக்தி, அவர்கள் பேசும் அரசியலையும் நாமே பேசிவிடுவது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதைதான் ஜெயலலிதா செய்தார். ஈழம், இன அரசியல், காவிரி, முல்லை பெரியாறு என்று அனைத்தையும் அவரே பேசினார். மேற்கு வங்கத்திலும் மம்தா அதைதான் செய்தார். ஆம். ஒரு கம்யூனிஸ்ட்காரரே, “எங்களை விட மிக அழுத்தமாக எங்கள் கொள்கையை பேசி வருகிறார் மம்தா” என்கிறார்.இரண்டு ரூபாய் அரிசியும், சைக்கிளும்:

என்னதான் விமர்சனம் வைத்தாலும், தமிழகத்தின் வெற்றிக்கு இலவசங்களும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக இலவச அரிசியும், பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் சைக்கிளும், மடிக்கணினியும். இதே உத்தி தான் மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு வெற்றியை தந்துள்ளது. மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் ஜங்கிள் மஹால் பகுதியில் உள்ள இடதுசாரிகள், “அரசு தரும் இரண்டு ரூபாய் அரிசியும், இலவச சைக்கிளும்தான் மாவோயிஸ்ட் பகுதிகளிலும் மம்தா வெற்றி பெறக் காரணம். நாங்கள் இந்த விஷயத்தில் தோல்வியுற்றுவிட்டோம்” என்று சொல்கின்றனர்.

காணாமல் போன கம்யூனிஸ்ட்கள்:

மம்தா, ஜெயாவின் வெற்றி ஒற்றுமைகளை தாண்டி, இன்னொரு விஷயம் தமிழகத்திற்கும், மேற்கு வங்கத்திற்கும் பொருந்துகிறது என்றால், அது கம்யூனிஸ்ட்களின் படுதோல்வி. தமிழக வரலாற்றில் முதன்முதலாக இடதுசாரிகள் இல்லாத அவை. யாரும் எதிர்பார்க்காத வண்ணம், துடைத்து எறியப்பட்டு இருக்கிறார்கள் சிவப்பு சிந்தனையாளர்கள். தமிழகத்தின் நிலை மட்டும் இதுவல்ல, ஆறு முறை தொடர்ந்து ஆட்சி செய்த மேற்கு வங்காளத்திலும் படு மோசமான தோல்வியையே இடதுசாரிகள் சந்தித்து இருக்கிறார்கள். தமிழகம் அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் போட்டியிட்ட 200 தொகுதிகளில் 32 ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள். 2011 தேர்தலில் 39.5 சதவீதமாக இருந்த வக்கு வங்கி, இந்த தேர்தலில் 25.9 சதவீதமாக குறைந்துள்ளது.

- மு. நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!