சாலை விபத்துகளை தவிர்க்க இதுதான் தீர்வா...? | Is this the solution to prevent road accidents...?

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (15/06/2016)

கடைசி தொடர்பு:12:39 (15/06/2016)

சாலை விபத்துகளை தவிர்க்க இதுதான் தீர்வா...?

 

வ்வொரு நாளும் வீட்டிலிருந்து கிளம்புபவர்களுக்கு நிச்சயம் வாழ்வு குறித்த ஒரு பெருங்கனவு இருக்கும். ஒரு திட்டமிடல் இருக்கும். அவர்களின் நாட்குறிப்புகள், அந்த திட்டங்களால் நிறைந்திருக்கும். பெரும் திட்டங்கள் இல்லாமல் அந்த கணத்தில் வாழ விரும்புபவர்கள் கூட,  வீட்டு தோட்டத்தில் முதன் முதலாக பூ விட்டுள்ள மாதுளை மரத்தின்   கனிக்காக காத்திருக்கலாம். தத்துவங்கள் பேசினாலும், நாளையும் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் நம்மை உற்சாகமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது. நாளைதான் நம் அனைவரையும் வழிநடத்தவும் செய்கிறது. நம் தேசத்தில் நம்மைப்போல், ‘நாளை’ குறித்த பெரும் நம்பிக்கையுடன் இருந்த நம் சகமனிதர்கள் 1.46 லட்சம் பேர்,  சாலை விபத்துகளில் இறந்து இருக்கிறார்கள். சில நொடிகளில் ஏற்பட்ட விபத்து, 2015 ம் ஆண்டில் மட்டும் 1.46 லட்சம் பேரின் கனவையும், திட்டமிடலையும் சிதைத்திருக்கிறது.

அதிகரிக்கும் சாலை விபத்து:

2014 ம் ஆண்டை விட, 2015 ம் ஆண்டின் சாலை விபத்துகள் 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அரசாங்க கணக்குப்படி, 2015 ம் ஆண்டில் மட்டும், ஒவ்வொரு நாளும் 374 விபத்துகள் நடந்து இருக்கின்றன. அதில் சராசரியாக 400 பேர் தினமும் இறந்து இருக்கிறார்கள். விபத்தில் இறந்தவர்களில் 54.1 சதவீதம் பேர், 15 -34 வயதிற்குள்ளானவர்கள்.

குறிப்பாக தமிழகம், மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரபிரதேசத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான விபத்துகள் நடந்துள்ளன.

பெரும்பாலான விபத்துகளுக்கு, இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால், 77.1 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அஜாக்கிரதையும், வேகமாக சென்றதும்தான் காரணம் என்கிறது மத்திய நெடுஞ்சாலைத் துறை.

அரசு தரும் கணக்கை ஆராயும்போது, சாலை விபத்துகளில் இறந்தவர்களில் அதிகமான பேர் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள். அதேநேரம், பேருந்து விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கிறது.

பொது போக்குவரத்து இழிவானதா...?:

 

விபத்துகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணமாக இருப்பது நாம் பொது போக்குவரத்தை பயன்படுத்த மறுப்பதுதான். பொது போக்குவரத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தாலும், வீட்டின் வாசலிலும், நாம் படிக்கும் பள்ளி, கல்லூரி அல்லது பணி புரியும் அலுவலகம் அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருந்தாலும், நாம் பொதுப்  போக்குவரத்தை பயன்படுத்த மறுக்கிறோம். அதை இழிவானதாக கருதுகிறோம். ஒருவர் அலுவலகத்திற்கு செல்வதற்கு கூட காரை பயன்படுத்துகிறோம். நம்மை பார்த்து வளரும் குழந்தைகளின் மனதிலும், பொது போக்குவரத்தும், மிதிவண்டி பயணமும் இழிவானது என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால்தான் எட்டாவது படிக்கும் சிறுவர்கள் கூட, பள்ளிக்கு செல்வதற்கு நவீனமான இரு சக்கர வாகனத்தை கேட்கிறார்கள். நாமும் நம் பெருமையாக நினைத்து வாங்கித் தருகிறோம். ஆனால், இது உண்மையில் நன்மை பயப்பதல்ல. ஆம், பெரும்பாலான விபத்துகள் அதாவது, 2015 ம் ஆண்டில் நிகழ்ந்த மொத்த விபத்துகளில் 25.9 சதவீத விபத்துகள், இரு சக்கர வாகன விபத்துகள்தான். அதற்கு அடுத்ததாக உள்ள 25.6 சதவீத விபத்துகள் கார், ஜீப் விபத்துகள். அதே நேரம் பொதுப் போக்குவரத்து விபத்துகள் 7.9 சதவீதம்தான்.

நாம் பெருமை என்று பிதற்றிக் கொண்டு, நம் எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.


இப்போதுள்ள காலச்சூழலில் அனைவராலும், எல்லா நாட்களிலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாதுதான். ஆனால், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு நாளாவது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். உண்மையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் பெருமை என்ற எண்ணத்தை நம் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

விபத்துகளை தவிர்க்கமட்டுமல்ல, குழந்தைகளின் ஆளுமைப் பண்பு வளரவும், பொதுப் போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமானது. ஆம், பேருந்துகளில் செல்லும் போது, குழந்தைகள் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறார்கள், அவர்களுடன் உரையாடுவதன் மூலம் சமூகத்தை புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளருகிறது. அவர்களுக்கு தினமும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. ஆனால், இந்த அனுபவம் நிச்சயம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஒரு காலமும் கிடைக்கப்போவதில்லை.

தரமற்ற சாலைகள்:

 

ஒரு பக்கம் தனி மனிதம் மாற வேண்டுமென்றாலும், இன்னொரு பக்கம் நிச்சயம் அரசும் சாலைகள் மற்றும் பேருந்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆம், மத்திய நெடுஞ்சாலைத் துறை, இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக விபத்து நடக்கும் இடங்களாக 726 இடங்களை இனங்கண்டுள்ளது. அதில், 100 இடங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. அதுவும் அந்த 100 இடங்களில், 11 இடங்கள் அதிகம் விபத்து நடக்கும் பகுதியாக குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக கோவை, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அதிகம் விபத்து நடப்பதாக அரசு அளிக்கும் தரவு விவரிக்கிறது. அது போல தமிழகத்தில் பேருந்துகளின் தரமும் படுமோசமானதாக இருக்கிறது. காலாவதியான பேருந்துகளை  நாங்கள் இயக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று அரசு பேருந்து ஓட்டுனர்களே சொல்கிறார்கள். இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் எந்த அரசு பேருந்தும் காப்பீடு செய்யப்படவில்லை. 

நாம் கட்டுரையின் முதல் பத்தியில் கூறியது போல், இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டக் கனவுகள் இருக்கிறது. அந்த தனிப்பட்ட கனவுகள்தான் தேசத்தின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது. கனவுகள் சிதையும்போது, தேசத்தின் எதிர்காலமும் சிதையும். தேசம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், அந்த தனிப்பட்டக் கனவுகள் காக்கப்பட வேண்டும். அந்தக் கனவை காக்கும் பொறுப்பு தனி மனிதனிடமும் இருக்கிறது, அரசிடமும் இருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தாமல், இருவரும் கரம் கோத்து தம் பொறுப்புகளை உணர்ந்து நடக்கும்போது, நிச்சயம் விபத்துகள் குறையும். விபத்துகள் குறைவதற்கு உண்மையில் இதை தவிர வேறு வழியும் இல்லை.

- மு. நியாஸ் அகமது
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்