'உங்களுக்கு ஏன் இந்த வேலை...?'- ஜனநாயகத்தை மெல்லக் கொல்லும் கேள்வி!

 “உங்களுக்கு ஏன் இந்த வேலை....? ஏன் எதிர்க்கிறீங்க...? அரசும், அதிகாரிகளும் ஒத்துக்கலைன்னா, அமைதியா போயிற வேண்டியதுதானே. உங்க சொந்த வேலையை பார்க்கலாம்ல...” - இப்படியாகதான்  நிகழ்ந்தது, அவர்களுக்கும் அந்த காவல்'து(றை)ரை' அதிகாரிக்குமான உரையாடல். ஆம் 'துரை'தான்... அவர் அந்த மனநிலையில்தான் பேசியதாக, அவரை சந்தித்தவர்கள் சொன்னார்கள். அவர் சொல்லியது போல் இவர்கள் அனைவருக்கும் ஏராளமான சொந்த வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் சமூகத்திற்கு ஒரு வியத்தகு பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருபவர்கள். அவர்களிடம்தான் அந்த அரசு அதிகாரி சிரம்மேற்கொண்டு, இனி மேல் பொது வேலையில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

அவர்கள் ஏன் அந்த அதிகாரியை பார்க்க சென்றார்கள் என்பதை நான் இன்னும் உங்களுக்கு சொல்லவில்லை அல்லவா...? கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8),  சேலம் முள்வாடி பகுதியில்  உள்ள ரயில்வே கேட் பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் கட்டும் பணியினை துவங்கி இருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு ஜனநாயக வழியில் போராடியதற்காக, சூழலியலாளர் பியூஷ் மற்றும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்த ஈசன் கார்த்திக் மற்றும் சிவ முத்துவை காவல் துறையினர் பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகளில் கைது செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக அந்த காவல் அதிகாரியை பார்க்க சென்ற போதுதான்,  ஏன் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார் அந்த காவல் அதிகாரி.

வளர்ச்சி திட்டங்களை இவர்கள் எதிர்க்கிறார்களா....?:

 

ஆம். சரிதானே. மேம்பாலம் கட்டுவது வளர்ச்சி பணிதானே... அதை எதிர்ப்பவர்களை கைது செய்வது சரி தானே...?  ஆம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கும், அதன் காரணமாக அடர்த்தியாகும் சாலை போக்குவரத்திற்கும்,  மேம்பாலம் கட்டுவது அவசியம்தான். ஆனால், வளர்ச்சி என்பதற்காக, உங்களிடம் அனுமதி கேட்காமல், உங்கள் வீட்டு வாசற்கதவின் அருகே மேம்பாலம் கட்டமுடியாது அல்லவா...? நெடுஞ்சாலை துறை அதைதான் செய்திருக்கிறது.

சேலம் மக்கள் குழுவினர் மேம்பாலம் கட்டுவதை எதிர்க்கவில்லை. ஆனால், 'அந்தப் பகுதியில் இருக்கும் ஐம்பதிற்கும் அதிகமான குடியிருப்பு வாசிகளிடமும், நானூறுக்கும் மேற்பட்ட கடைகளிடமும் முறையான அனுமதி பெற்று விட்டு மேம்பால பணியினை, அதாவது வளர்ச்சி பணியினை மேற்கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், நெடுஞ்சாலைத் துறை, எந்த அனுமதியும் பெறாமல், இந்த பணியினை மேற்கொண்டு இருக்கிறது. இதைதான் அவர்கள் எதிர்த்து இருக்கிறார்கள்.

 “மேம்பாலம் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை முறைப்படி செய்யுங்கள்தான் என்கிறோம். இந்த மேம்பால பணியினை எதிர்த்து இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் என்றால், நெடுஞ்சாலைத் துறை எங்களுக்கு என்ன என்று பாதியிலேயே மேம்பால பணியினை விட்டு விட்டுப் போய்விடும். பிறகு ஆண்டு கணக்கில் இந்த வழக்கு நடக்கும். அதுவரை இப்பகுதியில் ஏற்படும் சாலை நெரிசலுக்கும், அதன்  காரணமான விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும் நெடுஞ்சாலை துறை பொறுப்பேற்குமா...?

இது ஏதோ எங்களின் மிகையான கற்பனை அல்ல. 2008 ம் ஆண்டு துவங்கிய சேலம் ஆனந்தா மேம்பால பணிகளை, பல்வேறு காரணங்களுக்காக நான்கு ஆண்டுகள் மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டது. அதனால், சேலம் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். அது போன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகதான், நாங்கள் இதனை முறையாக செய்யுங்கள் என்கிறோம்.

போராட்டம் செய்து கைதாகி இருக்கும் மூவருக்கும், அந்த மேம்பாலம் கட்டும் பகுதியில் எந்த சொந்த நிலமும் இல்லை. அவர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. ஆனால்,  மக்களிடம் உரிய முறையில் தெரிவிக்காமல்,  மேம்பாலம் கட்டுவது என்பது நியாயமற்றது. அவர்கள் நியாயத்தின் பக்கம் நின்றதால் கைதாகி இருக்கிறார்கள்” என்றனர் சேலம் மக்கள் குழுவினர்.

அதிகாரிகள் என்ன சொல்ல வருகிறார்கள்...?:

அண்மையில் நான் சந்தித்த ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர், “மக்கள் யாரும் அவர்கள் பகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்டு கொள்வதில்லை. ஒரு சாலை போடப்படும்போது, அந்த சாலையின் தரம், எவ்வளவு ஜல்லி பயன்படுத்துகிறார்கள் என்று அந்த சாலை பணியினை எடுத்த ஒப்பந்ததாரருடன் உரையாட வேண்டும். அப்போதுதான் அவருக்கும் பயம் வரும், அவரும் சாலை பணிகளை தரமாக மேற்கொள்வார். ஆனால் அதுபோல் யாரும் செய்வதில்லை” என்றார் உண்மையான வருத்ததுடன்.  அதே நேரம், இன்னொரு அரசு அதிகாரி , 'ஏன் உங்களுக்கு இந்த வேலை... நீங்கள் தலையிடாதீர்கள்' என்கிறார். 

மக்களுக்கான வளர்ச்சி என்பது, மக்கள் அரசுடனும், அதன் பிரதிநிதிகளான அதிகாரிகளிடமும் தொடர்ந்து உரையாடும் போதுதான் நிகழும். உரையாட மறுப்பது, ஜனநாயக வழியில் போராடுபவர்களை ஒடுக்க வேண்டும் என்று நினைப்பது உண்மையில் நல்ல ஜனநாயகமாக இருக்க முடியாது.

அரசு இயந்திரம் உங்களுக்கு ஏன் பொது வேலை என்கிறது...? ஆம், இவர்கள் நமக்கு ஏன் பொது வேலை என்று ஒதுங்கி இருந்தார்கள் என்றால், அரசால் கைவிடப்பட்ட மூக்கனேரி ஏரி, அம்மாபேட்டை ஏரி, தெப்பக்குளம் உயிர் பெற்று இருக்காது.சென்னை மழை வெள்ளச் சமயத்தில், இதே சேலம் மக்கள் குழுவினர்,  'எங்கள் பகுதியில் மழை இல்லை, நாங்கள் நலமாக தான் இருக்கிறோம்'  என்று ஒதுங்கி நின்று இருப்பார்களானால், மூங்கில் கட்டுமரம் கிடைத்து இருக்காது. அதைக் கொண்டு பல உயிர்களை மீட்டு இருக்க முடியாது.


காவல் துறையினர் மேற்கொண்டுள்ள கைது, உண்மையில் கவலை அளிப்பதாக இல்லை. அதை சேலம் மக்கள் குழுவினர் உரிய சட்ட நடவடிக்கை கொண்டு எதிர் கொள்வார்கள். ஆனால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை உண்மையாக கவலையுறச் செய்வது... “உங்களுக்கு ஏன் இந்த வேலை...?” என்ற அரசு அதிகாரிகளின் கேள்விதான்.

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்ஸி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!