வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (26/07/2016)

கடைசி தொடர்பு:13:57 (27/07/2016)

உச்சத்தில் உஷ்ணம்..! ஏன் இந்த வெயில் கலகம்?

 

ழகிவிட்டதா அல்லது அதுதான் உண்மையா என்று தெரியவில்லை, சென்னையில் சென்ற மாதம் பெரிதாக வெயிலை உணரமுடியவில்லை. வெம்மை இருக்கத்தான் செய்தது என்றாலும், ஏப்ரல், மே மாதங்கள் போல இல்லை. அதுவும் குறிப்பாக, வழக்கத்துக்கு மாறாக  கடந்த ஏப்ரலில் மோசமான வெயிலை உமிழ்ந்த கோவையிலும், ஜூனில் அதிக வெயில் இல்லை.  பிற மாவட்டங்களிலும் அப்படி தான் இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். தமிழகத்தின் நிலை இவ்வாறானதாக இருந்தாலும், வெப்பம் குறித்த உலக அளவிலான தகவல்கள் எதுவும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. ஆம்.  கடந்த ஜூன் மாதம்தான் நவீன கால வரலாற்றில் அதிக வெப்பம் பதிவான  ஆண்டாக இருந்து என்கின்றன தகவல்கள்.

அதிகரிக்கும் வெப்பம்:

அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், தொடர்ந்து உலக வெப்ப அளவுகளை வெளியிட்டு வருகிறது. இது அண்மையில் வெளியிட்ட வெப்ப அளவுகள், உண்மையில் நமது கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. கடந்த 137 ஆண்டுகள் வரலாற்றில், கடந்த ஜூன் மாதம்தான் அதிக வெப்பம்,  நிலம் மற்றும் கடல் பரப்பில் பதிவாகி இருக்கிறது. 

20 ம் நூற்றாண்டில், கடல் மற்றும் நிலப்பரப்பில் சராசரியான வெப்பம் 15.5 டிகிரி செல்சியஸ். ஆனால், கடந்த ஜூன் மாதம், இந்த வெப்ப அளவு 16.4 டிகிரியாக அதிகரித்து இருக்கிறது.அது மட்டுமல்லாமல், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களின் புவி வெப்பம்தான், இது வரை பதிவாகி உள்ள வெப்ப அளவுகளிலேயே அதிகம். இந்தப் புவியின் ஜூன் மாத வெப்பம், 20- ம் நூற்றாண்டின் மாதாந்திர சராசரி வெப்பத்தை விட 2.23 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகம்.  கடல் பரப்பின் வெப்பமும் 1.39 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடருமானால், இந்த ஆண்டுதான் வரலாற்றில், அதிக வெப்பம் பதிவான் ஆண்டாக இருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.


ஒன்று, இரண்டு என்ற கணக்கில்தானே வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்று நாம், இதை சுலபமாக கடந்து சென்று விட முடியாது. 'புவியின் வெப்ப அளவு, 0.1 என்ற அளவில் அதிகரித்தால் கூட, அதன் விளைவுகள் கடினமானதாக இருக்கும்' என்கிறார்கள் அறிவியலாளர்கள். அப்படி இருக்கும் போது,  இந்த அளவு வெப்பம் அதிகரித்து இருப்பது  நிச்சயம்  நிலையான, நீடித்த வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

வெப்பமும், கலகமும்:

 

வெப்பம் அதிகரித்தால் என்னவெல்லாம் நடக்கும்...? நிச்சயம் கலகம் பிறக்கும். இதை நான் உங்களை அச்சுறுத்துவதற்காக சொல்லவில்லை. வரலாற்றில் பல கலகங்கள் இதனால்தான் பிறந்து இருக்கின்றன. 

வெயிலால் கலகம் பிறக்குமா...? ஆம். உதாரணமாக ஒரு சிறு நாடு இருக்கிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை, ஒரு லட்சம் என்ற வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாட்டில் ஐம்பதாயிரம் ஹெக்டேரில் காடு இருக்கிறது.  கடல் இருக்கிறது. மீன் பிடித்தலும், சுற்றுலாவும்தான் பிரதான தொழில். இப்போது அந்த நாட்டில் வெப்பமயமாதலால் தொடர்ந்து காட்டுத் தீ பரவுகிறது. அதே நேரம், மீன் வளமும்  குறைகிறது.

இப்போது என்னவாகும்...? அந்த நாட்டின் பொருளாதாரம் சிதையும். கொஞ்சம் கொஞ்சமாக வறுமை பீடிக்கத் துவங்கும். இறுதியாக மக்கள் அரசிற்கு எதிராக திரும்புவார்கள். கலகம் பிறக்கும்.
 
 தமிழகச் சூழலில் வெப்பமயமாதலை புரிந்துகொள்ள வேண்டுமானால், இங்கு மயில் கெண்டை மீன் குறைந்து வருவதற்கும், ராமேஸ்வரத்தில் கடல் பசு, பவளப் பாறைகள் அழிந்து வருவதற்கும், கிர் காட்டில் அடிக்கடி காட்டு தீ பிடிப்பதற்கும், இந்த வெப்பம் அதிகரிப்புக்கும்  ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

இன்னும் தனிப்பட்ட முறையில் உங்கள் வாழ்வில் இந்த வெப்ப அதிகரிப்பை பொருத்திக் கொள்ள வேண்டுமானால், உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதற்கும், இந்த வெப்ப நிலை அதிகரிப்பிற்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதுகுறித்த எண்ணற்ற ஆய்வு முடிவுகள் இணையம் எங்கும் விரைவி கிடக்கின்றன.

அதனால் புவிவெப்பமயமாதல் ஏதோ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் சார்ந்தது என்று புரிந்து கொள்ளாமல். இது குறித்து தெரிந்து  கொள்வது, விவாதிப்பது அனைவரின் கடமை.

விவாதிப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது...?

விவாதிப்பதால் மட்டும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்றாலும், நிச்சயம் நமக்குள்ளான விவாதங்களால் ஒரு தெளிவு பிறக்கும். வெப்பமயமாதல் ஏதோ ஒரு புறக் காராணிகளால் ஏற்படுவதில்லை என்று நாம் உணரத் துவங்குவோம். அதற்கு நாமும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும்தான் காரணம் என புரியத் துவங்கும். குறைந்தபட்சம் நம் தவறுகளை களைய முற்படுவோம்.

எது எது நம் தவறுகள்...? சூழலுக்கு உகந்த வீடுகளாக இல்லாமல், வெறும் செங்கல், சிமெண்ட்டை மட்டுமே கொண்டு கட்டப்படும் வீடுகள், அதற்காக சுரண்டப்படும் ஆற்று மணல்,  லட்சக்கணக்காண லிட்டர் மறைநீரால் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள், ரசாயன சாயத்தினால் ஆற்றை நஞ்சாக்கும் ஆடைகள். இவற்றையெல்லாம் அதிகம் நுகர்வது நம் தவறு. இந்த நுகர்வை நம் எல்லாரும் குறைத்துக் கொள்வதும், நாம் இந்த பூவுலகிற்கு செய்யும் மிகபெரிய தொண்டு.

காடுகளை வளர்ச்சியின் பெயரால் பெரு நிறுவனங்களுக்கு  தாரைவார்ப்பது, அவர்கள் பொறுப்பில்லாமல் காடுகளை சுரண்டும் போது மெளனமாக இருப்பது, ரசாயன விவசாயத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள், நுகர்வை ஊக்குவிப்பது போன்றவை அரசின் தவறுகள். அரசு என்பது ஏதோ விண்ணுலகத்திலிருந்து வந்ததில்லை. நம்மால் ஏற்படுத்தப்பட்டதுதான்.

நாம் ஒரு தெளிவை பெற்று, அரசை ஜனநாயக ரீதியில் வலியுறுத்துவதன் மூலமும், நம் பொறுப்பை உணர்ந்து நம் தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலமும், நிச்சயம் புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும்.

நிச்சயம் இது எதுவுமே பொதுத் தொண்டு அல்ல. நாளையும் நாம் புன்னகைக்க வேண்டுமென்றால் இதை நாம் நிச்சயம் செய்தாக வேண்டும்.

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்ஸி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்