வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (29/07/2016)

கடைசி தொடர்பு:09:49 (30/07/2016)

சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography

து 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப்  பல கனவுகள்.

'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்து இருந்தது. ஆனால், இம்முறை அவருக்கான வரவேற்பு வித்தியாசமாக இருந்தது.

ஆம். சாகர் விமான நிலையத்தில் அவர் இறங்கியவுடன், அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், சானியாவையும் அவரது அம்மாவையும் தனியாக அழைத்துச் செல்கிறார்கள். அப்போது ஆப்ரிக்க நாடுகளில் பரவி இருந்த ‘Yellow Fever' நோய் தொற்று, இவர்களையும் பாதித்து இருக்கிறதா என்று பரிசோதிக்க  வேண்டும் என்கிறார்கள். பரிசோதனை என்றால் ஒரு நாளில் முடிவது அல்ல... சில நாட்கள் அவர்கள் இருவரையும் தனி இடத்தில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி,  அவர்கள் இருவரையும் மும்பைக்கு வெளியே, தனி இடத்தில் ஐந்து நாட்கள் தங்க வைக்கிறார்கள்.

“தொலைக்காட்சி இல்லாமல் கழிந்த நாட்கள் அவை. கேரம் விளையாடியும், சீட்டுக் கட்டு விளையாடியும்... நானும் என் அம்மாவும் பொழுதை கழித்தோம்.  ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு வாரமாக கழிந்தன...”  என்று விவரிக்கிறார் சானியா.

சானியா மிர்சா அண்மையில்  ‘Ace Against Odds' என்ற தன்  சுயசரிதை  புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம்தான் இது.  இது மட்டுமல்ல, இந்த புத்தகம் முழுவதும் இது போன்ற ஏராளமான சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல, நமக்கு உற்சாகம் அளிப்பதாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருக்கிறது.

அன்று அந்த விமானத்தில் ஏறி இருந்தால்...? :

சானியாவின் தந்தை இம்ரான்,  ஹைதராபாத்தில் சிறியதாக ஒரு அச்சகத்தையும், அவருக்குப் பிடித்தமான கட்டுமான தொழிலையும் நடத்தி வருகிறார். வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. பெரிதாக வருமானமும் இல்லை. ஆனால், வாழ்வில் வெற்றி அடைந்துவிடுவோம் என்று உற்சாகமாக உழைக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது கட்டுமானத் தொழிலும் சூடுபிடிக்கத் துவங்குகிறது. அப்போது தான் அந்த அழைப்பு வருகிறது. இம்ரானின் சகோதரி அஞ்சும், அமெரிக்காவிலிருந்து அழைக்கிறார். “உன் குடும்பத்தின் குடியேற்ற மனுவை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்... விரைவில் விசா கிடைத்துவிடும்...” என்கிறார் உற்சாகமாக.


அப்போது இம்ரானின் குடும்பத்தினர் பலர் அமெரிக்காவில்தான் வசித்து வந்தனர். இம்ரானுக்கும் தன் குடும்பத்துடன், அப்போது எல்லாருக்கும் கனவு தேசமாக இருந்த அமெரிக்காவில் சென்று குடியேறிவிடவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், அந்த அழைப்பு வந்த பின் யோசிக்க ஆரம்பிக்கிறார். நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும்..? இப்போதுதான் நம் தொழில் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கிறது... இன்னும் கொஞ்சம் உழைப்பை முதலீடு செய்தால், இங்கேயே பெரும் வெற்றிகளை அடையலாம்தானே என யோசிக்கிறார்...

ஆனால், அவரது சுற்றத்தினரின் ஆலோசனை வேறு விதமாக இருந்தது. உனக்கான வாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் இருக்கின்றன. இது ஒரு பெரிய வாய்ப்பு. இதை இறுகப் பற்றிக் கொள் என்று ஆலோசனை வழங்குகிறார்கள். அவரும் அரை மனதுடன் அமெரிக்கா செல்ல முடிவுசெய்கிறார்.  அப்போது சானியாவுக்கு நான்கு வயது தான்.

பெரும் கனவுகளை சுமந்து, சானியா, அவரது தந்தை இம்ரான் மற்றும் தாய் நசிமா ஆகியோர், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வந்து இறங்குகிறார்கள். அங்குதான் இம்ரானின் சகோதரர் கம்ரான் குடும்பம் வசித்து வந்தது. அங்கு தனக்கான வாய்ப்பை தேடத் துவங்குகிறார் இம்ரான். அந்த சமயத்தில் இம்ரானின் சகோதரி கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். அவரைப் பார்க்க இம்ரான் திட்டமிட்டு, ஒரு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1, 1991)  கலிஃபோர்னியா செல்ல விமானத்தில் முன் பதிவு செய்கிறார். அப்போது அழைத்த இம்ரானின் சகோதரி, “சனிக்கிழமை வாருங்கள். அதுதான் எனக்கும் வசதி...” என்று சொல்லியதால், சனிக்கிழமைக்கு பயணத்தை மாற்றி விமானத்தில் முன்பதிவு செய்துவிட்டு வீடு திரும்புகிறார்.

ஆனால், அவருக்கு அப்போது நிச்சயம் தெரிந்திருக்க வாய்பில்லை. இந்த தேதி மாற்றம்தான், வரலாற்றின் பல பக்கங்களை மாற்ற காரணமாக ஆகப்போகிறது என்று. ஆம், அன்று  அவர்கள் செல்வதாக திட்டமிட்ட விமானம், லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 22 பேரும்  மரணிக்கிறார்கள்.

மீண்டும் கூடு திரும்புதல்...:

அவர்கள் எதிர்பார்த்தது போல் அமெரிக்கா வாழ்வு இல்லை. கல்விக் கட்டணம் அதிகமாக இருந்ததால், சானியாவை அங்கு பள்ளியில் சேர்க்கவில்லை. இம்ரான் அங்கேயும், ஒரு அச்சகத்தை துவக்குகிறார். ஆனால், அந்த வருமானம் போதுமானதாக இல்லை. சானியாவின் அம்மாவும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். ஆனால், அப்போதும் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமாக தான் இருக்கிறது. அப்போதுதான் முதன் முதலாக சானியாவிற்கு அந்த ஆசை வருகிறது.

இந்தியாவிற்கு பல விருதுகள், பெருமைகளை பெற்று தந்த விருப்பம் அப்போதுதான், அந்த நான்கு வயது சானியாவிற்கு வருகிறது.  “அம்மா...எனக்கு டென்னிஸில் விருப்பமாக இருக்கிறது. என்னை, பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்கள்...” என்கிறார். சானியாவிற்கு விருப்பம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால், இம்ரானிற்கும் டென்னிஸ் மீது பெருங்காதல் இருந்தது. அமெரிக்காவில் தன் ஓய்வு நேரங்களை பெரும்பாலும் டென்னிஸில்தான் கரைத்தார். இதைப் பார்த்து வளர்ந்த அவருக்கு, டென்னிஸ் மீது விருப்பம் வந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால்,  ஒரு மணிநேரத்திற்கு 40 டாலர்களை பயிற்சிக்காக செலவழிக்கும் சூழ்நிலையில் அவரது குடும்பம் இல்லை.அப்போதுதான் இம்ரான், அந்த முடிவை எடுக்கிறார். அது நிச்சயம் அவருக்கு கடினமான முடிவுதான். ஆனால், ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். அன்று இம்ரான் மட்டும் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சானியா நமக்கு கிடைத்து இருக்க மாட்டார். இந்தியாவிற்கு பல பெருமைகள் கிடைத்து இருக்காது. ஆம், இம்ரான் மீண்டும்  இந்தியா திரும்ப முடிவு செய்கிறார். அவரது உறவினர்கள்,  “இது சரியான முடிவல்ல. வாய்ப்புகள் இங்குதான் கொட்டிக் கிடக்கின்றன. மீண்டும் இந்தியா போய் என்ன செய்யப் போகிறாய்...” என்று ஆளுக்கொரு ஆலோசனையை வாரி வழங்குகிறார்கள். ஆனால், இம்ரான் தம் முடிவில் தெளிவாக இருந்தார். 'நாளை, நான் பெரும் வெற்றிகளை அடையலாம். ஆனால், இன்று என் மகளின் ஆசையை, விருப்பத்தை, கனவை நிறைவேற்றாமல், நாளை எத்தகைய வெற்றி அடைந்தும் பயனில்லை' என்று 1992 ல் நாடு திரும்புகிறார்.

இந்தியா திரும்பியதும் சானியாவின் அம்மா செய்த முதல் வேலை, சானியாவை அவர் விரும்பிய டென்னிஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்தது. இந்தியாவில் டென்னிஸ் வரலாறு இந்த புள்ளியில்தான் மாறுகிறது.சானியா வாழ்வில் நமக்கான பாடங்கள்:

மற்றவர்களின் வாழ்வை  நம் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்வு நரகமாகிவிடும். ஆனால், அதே நேரம், நாம் மற்றவர்களின் வாழ்விலிருந்து பாடங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  சானியாவின் வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவும் இரண்டு பாடங்கள் இருக்கின்றன.எனக்கு விருப்பம்... அதனால் இதைச் செய்கிறேன்!

 'I played because, I enjoyed it' - இந்த வாக்கியத்தை சானியா தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த 238 பக்க புத்தகத்தில் ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தது இந்த வாக்கியம்தான். ஆம், சானியா விருதுக்காகவோ அல்லது தனக்கு பத்ம ஸ்ரீ, அர்ஜுனா விருது கிடைக்கும், விளம்பர தூதர் ஆகி, அதன் மூலம் பல கோடிகள் வருவாய் ஈட்டலாம் என்று கனவு கண்டெல்லாம் சானியா டென்னிஸை தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு டென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சியை அளித்தது. அந்த அகமகிழ்ச்சிக்காக மட்டுமே அந்த விளையாட்டை அவர் தேர்ந்தெடுத்தார். இன்று பல வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதான் நமக்கான பாடம். 'பல லைக்ஸை குவிக்கலாம், நம்மை பாராட்டி பல பேர் கமெண்டுவார்கள்' என்று நாம் நம் பணிகளை செய்வோமானால், நாம் நம் சுயத்தை தொலைத்து இருப்போம். நம் விரும்பும் வாழ்வை தொலைத்து, பிறர் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்போம்.


விருப்பத்தில் வாழ அனுமதியுங்கள்...!

ஆசிரியர்கள் என்பவர்கள், Facilitators (எளிதாக்குபவர்) களாக இருக்க வேண்டும். உண்மையாக நம் குழந்தைகளுக்கு தேவைப்படுவோர் facilitators தான். சானியாவின் பெற்றோர் Facilitators ஆக இருந்ததால், சானியாவால் இவ்வளவு சாதிக்க முடிந்தது.

சானியாவிற்கு டென்னிஸ் மீது விருப்பம் இருந்தது. ஆனால், அதில் பெரும் சாதனைகள் படைக்கப் போவதாக எல்லாம் அவர் தொடக்கத்தில் நினைக்கவில்லை. டென்னிஸிற்கான பயிற்சி கட்டணம், போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணம், அதற்கான செலவெல்லாம், அந்த சாமான்ய குடும்பத்தால் சமாளிக்கும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் சானியாவின் விருப்பத்தை  அவர் குடும்பம் மதித்தது.  விமானத்தில் சென்றால் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், போட்டிகளில் கலந்து கொள்ள பலநூறு கிலோமீட்டர், சானியாவை அவரது பெற்றோர் வாகனத்திலேயே அழைத்துச் சென்று இருக்கிறார்கள். கிடைக்கும் சிறு பணத்தையும் சானியாவின் பயிற்சிக்காக செலவு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சானியா பெரும் சாதனைகள் படைத்து பல கோடிகள் சம்பாதிப்பார் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், தாங்கள் செலவழிக்கும் பணத்தை முதலீடாக கருதவில்லை.ஒருவேளை அவர்கள் அதை முதலீடாக கருதி இருப்பார்கள் என்றால், நிச்சயம் சானியாவால் இந்த சாதனைகளை படைத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆம், எந்த இடத்திலும்  எந்த நிர்ப்பந்ததையும் கொடுக்காமல், சானியாவின் விருப்பதின்படி வாழ கைகொடுத்தார்கள். சானியா தேர்ந்தெடுத்தப் பாதையில் இலகுவாக செல்ல, தங்களால் ஆன உதவிகளை செய்தார்கள்.

இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது பாடம். நம் பிள்ளைகளுக்கும் ஓவியன் ஆக வேண்டுமென்றோ, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டுமென்றோ அல்லது தொழில் துவங்க வேண்டுமென்றோ கனவுகள் இருக்கும். ஆனால், நாம் இது எதற்கும் அனுமதிப்பதில்லை, நம் விருப்பங்களை அவர்கள் மீது  திணிக்கிறோம். நம் முதலீடாக பார்க்கிறோம்.

தெரியவில்லை, எத்தனை தகுதியான பிள்ளைகள் தங்கள் விருப்பத்தில் வாழ முடியாமல் பத்ம ஸ்ரீ யையும், பத்ம பூஷணையும் இழந்து இருக்கிறார்கள் என்று.

இவற்றையெல்லாம் தாண்டி, நம்  ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்னொரு பாடம் இருக்கிறது. அது,  சானியாவின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் ஷாரூக்கான் சொல்லியது, “பெண்களை மதியுங்கள்... நம் பெண் பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் செலுத்துகிறோமோ.... நம் பெண்களை எவ்வளவு மதிக்கிறோமோ... என்னை நம்புங்கள்... நிச்சயம் சானியா மிர்ஸா போல் வியத்தகு சாதனைகளை நம் பெண்கள் படைப்பார்கள்...”

ஆம் சானியாவின் வாழ்வு சொல்லும் மிக முக்கியமான பாடம் அதுதான்.... பெண்களை மதியுங்கள்... அவர்களின் கனவுகளை மதியுங்கள்... மிக முக்கியமாக, அவர்களை சமமாக நடத்துங்கள்.

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்ஸி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்