Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மழையிலிருந்து பாடம் கற்கவில்லையா கர்நாடகா...?

மீண்டும் ஒரு பெருமழை. இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, குர்கான், டெல்லி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிக்கின்றன. இந்தியாவின் சிலிக்கான் நகரம் செய்தவதறியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. முக்கிய நகரங்களுக்கான தொலைபேசி சேவை, சாலை வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவின் முக்கிய தொழில் நகரமான குர்கானில், மழையின் காரணமாக ஏறத்தாழ 8 மணி நேரப் போக்குவரத்து நெரிசல். பலர் தங்கள் வாகனத்தின் உள்ளேயே இரவு பொழுதை கழித்து இருக்கிறார்கள். சிலர் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். குறிப்பாக, தேசத்தின் முக்கிய நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 8 - ல் தண்ணீர் தேங்கியதால்,  குர்கானுக்கு செல்ல முடியாமலும், அங்கிருந்து மக்கள் வெளியே வர முடியாமலும் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

குர்கான் காவல் துறை, 'இப்போது நகரத்தின் நிலை இயல்பானதாக இல்லை. யாரும் குர்கானிற்கு வரவேண்டாம்' என்று சமூக ஊடகங்கள் மூலமாக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் குர்கானின் நிலை மட்டும் அல்ல கர்நாடகா, பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை இல்லை.

‘டிசம்பர் சென்னை’யாக மாறிவரும் பெங்களூர்...!:

 

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெங்களூரில் பெய்த மழை அளவு 135 மிமீ. இது வழக்கமாக  ஜூலை மாதங்களில் அப்பகுதியில் பெய்யும்  சராசரி மழை அளவை விட 30 மிமீ  அதிகம். குறிப்பாக தொட்டதோகூர் பகுதியில், வியாழனன்று மட்டும்  120 மி.மீ மழை பெய்து உள்ளது.  வானிலை ஆய்வு மையம், “கடந்த பத்து ஆண்டுகளில், இத்தனை மி.மீ மழை அந்தப் பகுதியில் பெய்ததாக எந்த தகவல்களும் இல்லை. கடைசியாக 1988 ம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் இந்த மாவட்டத்தில் 123.5 மி.மீ மழை பெய்து இருக்கிறது” என்கிறார்கள்.

பெங்களூர் நகரத்தின் பிரதானப் பகுதியான பன்னாருகட்டாவும் இந்த பெரு மழையிலிருந்து தப்பிக்கவில்லை. அந்தப் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 50 வீடுகளுக்கு மேல் மூழ்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நான்கு, ஐந்து நாட்களுக்கு பெங்களூரில் மழை தொடர்ந்தால், கடந்த ஆண்டு டிசம்பர் மழையின் போது சென்னைக்கு என்ன ஆனதோ அதுபோல் பெங்களூருக்கும் ஆகிவிடும் என்கிறார்கள்.

அரசு உருவாக்கிய பேரழிவு:

'இந்த வடுக்கள் இயற்கை அளித்த பரிசல்ல; இது நாம் தேர்ந்தெடுத்த அரசுகள் நமக்களித்த பரிசு' என்கிறார்கள்  சூழலியலாளர்கள்.  “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளநீர் வடிகால்கள் எழுபது அடி அகலத்தில் இருந்தன. ஆனால், இப்போது அது வெறும் ஐந்து அடியாக சுருங்கிவிட்டது. கட்டடங்கள் பெருகும்போது, தண்ணீர் வடிகால்களும், அதற்கு ஏற்ற வகையில் பெருகி இருக்க வேண்டுமே தவிர சுருங்கி இருக்கக் கூடாது.

அதுமட்டுமல்லாமல், பெங்களூரின் 90 சதவீத பகுதிகள் கட்டுமானங்களால் நிறைந்து காணப்படுகின்றன. தண்ணீர் ஓடுவதற்கான, அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார்கள். இதில் பெரும் சோகம் என்னவென்றால், எண்ணற்ற ஏரிகளையும் தூர்த்து கட்டடங்கள் கட்டிவிட்டார்கள். நிச்சயம் ஆகாயத்தில் தண்ணீர் மிதக்க முடியாது, அது பூமியில்தான் ஓடியாக வேண்டும். வடிகால்களையும், ஏரிகளையும் மூடிய பிறகு, அது இப்போது நம் வீட்டிலும், சாலையிலும் ஓடுகிறது.” என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் எல்லப்பா ரெட்டி.

மூடப்பட்ட ஏரிகள்:

இந்திய அறிவியல் மையத்தில் பணிபுரியும், சூழலியல் கல்விக்கான பேராசிரியர் டி.வி. ராமச்சந்திரா,  ஏரிகளை நாம் முறையாக பராமரிக்க தவறியதுதான், இந்த வெள்ளத்திற்கு காரணம் என்கிறார்.  

“சராசரியாக மழையிலிருந்து பெங்களூர் பெறும் நீர் அளவு ஆண்டுக்கு 15 டி.எம்.சி. பெங்களூரில் இருக்கும் ஏரிகள் 35 டி.எம்.சி அளவு நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆனால், துரதிருஷ்டமாக நாம் இந்த ஏரிகளை சிதைத்து விட்டோம். ஒரு காலத்தில் பெங்களூரில் இருந்த ஏரிகளின் எண்ணிக்கை 265. அனைத்தையும் தூர்த்து கட்டடம் கட்டிய பின், இப்போது மிச்சம் இருப்பதோ, வெறும் 31 ஏரிகள். முறையாக, நாம் ஏரிகளை பராமரித்து இருந்தால், நிச்சயம் இந்த வெள்ளம் ஏற்பட்டு இருக்காது” என்று விவரித்தார் ராமச்சந்திரா.

'கடந்த டிசம்பரில் சென்னை சந்தித்த ஒரு மோசமான சுழலை பெங்களூர் சந்தித்துவிடுமோ... ' என்று அஞ்சுவதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், சென்னை, வெள்ளத்தில் மூழ்கியதற்கும் பெங்களூர் மெல்ல வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பதற்கும் ஒரே காரணம்தான். அது மோசமான நீர் மேலாண்மை. ஆம். தண்ணீர் வடிகால்களை முறையாக பராமரிக்காததும், ஏரிகளை மூடியதும்தான் சென்னை வெள்ளத்திற்கு காரணம். அதே காரணங்கள்தான் பெங்களூரு வெள்ளத்திற்கும் காரணம்.

சென்னை மழை நமக்கு தந்த எந்த படிப்பினைகளையும் கர்நாடகா எடுத்துக் கொள்ளவில்லை. இதில் வியப்பு என்ன..? நாமே அதிலிருந்து பாடம் கற்காத போது, அவர்கள் எப்படி பாடம் கற்றுக் கொள்வார்கள்.

குர்கான், பீகார், அஸ்ஸாமின் நிலை:

 

குர்கான் :ஏறத்தாழ பெங்களூரின் நிலையில்தான், இந்தியாவின் தலைநகரமான டெல்லியும், அதன் அருகே இருக்கும் முக்கிய தொழில் நகரமான குர்கானும் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8, மிக முக்கியமான சாலை. இதுதான் டெல்லியையும் குர்கானையும் மற்றும் ஜெய்ப்பூரையும் இணைக்கிறது. ஆனால்,  கனமழையால் இந்த சாலையில் தண்ணீர் புகுந்து, மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 15 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் 8 மணி நேரமாக தத்தளித்து இருக்கின்றன.

 

பீகார்: இது அனைத்தையும் விட மிக மோசமாக இருக்கிறது பீகாரின் நிலை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் பதிவாகி உள்ள மழை அளவு 1000 மி.மீ. இது மட்டுமல்லாமல், நேபாளத்தில் திறந்துவிடப்பட்ட நீரும், இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மூழ்கடித்து இருக்கிறது. ஏறத்தாழ, 20 லட்சம் பேர் மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம்: கடந்த ஒரு வாரமாக, அஸ்ஸாமில் பெய்து வரும் மழையில் மட்டும் 18 பேர் இறந்து இருக்கிறார்கள். பிரம்மபுத்திரா நதியும் சிணுங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக, பிரம்மபுத்திரா நதி, தன் அபாய அளவிற்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பெருமழையினால், ஜோர்ஹத், கோலாகட், தாரங்க், தேமாஜி, சோந்த்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மோசமான இழப்பை சந்தித்து இருக்கிறார்கள். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் இறங்கி இருக்கிறது.

ஒட்டுமொத்தாமாக கடந்த வாரம் இந்தியாவிற்கு, மகிழ்ச்சிகரமானதாக இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து வரும் தரவுகளை பார்க்கும்போது, நிச்சயம் இயற்கையின் மீது எந்தப் பிழையும் இருப்பதாக தெரியவில்லை. 'குர்கானில் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், தொடர்ந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததும், அதுபோல, பிரம்மபுத்திராவில் தொடர்ந்து கட்டப்பட்ட வரும் அணைகளால் அந்த பகுதியின் சூழல் சிதைந்ததும்தான் இந்த வெள்ளத்திற்கு காரணம்' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்தச் சிதைவுகள் அனைத்தும் வளர்ச்சியின் பெயரால் நிகழ்ந்து இருக்கின்றன. வளர்ச்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த வளர்ச்சி இயற்கையை சுரண்டாமல், அதனுடன் இயைந்ததாக இருக்க வேண்டும். இயற்கையை சிதைத்து,  நல்வாழ்வை ஒரு காலமும் நாம் அடைய முடியாது என்பதை இயற்கை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement