Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட அரசுக்கு கோரிக்கை'!

மிழனின் வீரத்தையும் மாண்பையும்  உலகம் முழுவதும் பறைசாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என அரசியல் கட்சி அமைப்பினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய, ஆயிரத்து இரண்டாவது ஆண்டை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (நேற்று) விழா நடைபெற்றது. இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம் நிகழ்ந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வால் ஜெயங்கொண்டம் பகுதியே  விழாக்கோலம் பூண்டிருந்தது.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கங்கை முதல் கடாரம் வரை வெற்றி பெற்று ஆட்சிசெய்தவர் மாமன்னன் ராஜேந்திரசோழன். கங்கை கொண்டசோழபுரம் கோவிலின் சிறப்புகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, அதனை உலக பாரம்பரிய புராதனச்  சின்னமாக அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளது.

கடந்த  2014ம் ஆண்டு கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமம், பொதுமக்களுடன் இணைந்து ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை சிறப்பாகக்  கொண்டாடினார்கள். அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில்  மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மாமன்னன் அரியணை ஏறிய 1002வது ஆண்டு மற்றும் இன்று(திங்கள்) ஆடிமாதம் திருவாதிரை நட்சத்திரம் என்பதால் மாமன்னனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக  நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் இளங்கீரன், “ மாமன்னன்  ராஜ ராஜசோழன் பிறந்த நாளையொட்டி, அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலில் விழா எடுத்தது தமிழக அரசு. ஆனால் அவரின் மகன் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கவில்லை.இது ஏன் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் ஆண்டு தோறும் மக்களும், கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமமும் இணைந்து விழா எடுத்து வருகிறார்கள்.

ஏன் அரசு சார்பில் இந்த விழா நடத்தப்படவில்லை?... அரசு மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறதா... ராஜேந்திர சோழன் என்பவர் ஒரு சாதாரண மன்னரா. அவரின் தந்தை ராஜராஜன் கூட 15 க்கும் குறைவான நாடுகளையே வெற்றி பெற்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் ராஜேந்திர சோழனோ 84 நாடுகளுக்கும் மேல் வெற்றி பெற்று தனது காலடியில் வைத்திருந்ததோடு சோழ சாம்ராஜ்யத்தையே உலகளவில்  விரிவுபடுத்திய மாமன்னன்.

ராஜேந்திரன் தனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு, இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா தீவு  ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பை கையில் வைத்திருந்த மன்னன். ராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழன். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழ நாட்டுடன் இணைத்தவர். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.

அங்கே சிவபெருமானுக்காக ராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆண்டு விழாவை அரசு ஏன் நடத்த முயற்சிக்கவில்லை. இதில் என்ன மர்மம் நிலவுகிறது. இவர் பெரிய மன்னன் என்று அரசுக்குத் தெரியாதா. இல்லை இவர் புகழைத்  திட்டமிட்டு அரசு மறைக்க பார்க்கிறதா. பெரிய கோவிலைத்  தொடர்ந்து வந்த மூட நம்பிக்கைகளை  இப்போது இங்கும் கிளப்பிவிட சிலர் ஆரம்பித்து உள்ளனர். உதாரணமாக ராஜராஜ சோழனால்  தஞ்சை பெரிய கோவில்  கட்டி முடிக்கப்பட்ட 1000 ம் ஆண்டு விழாவை வெகு விமர்சையாக 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடினர்கள். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலிலும்,நாடளுமன்ற தேர்தலிலும் திமுக படுதோல்வியைச்  சந்தித்துள்ளது, அந்த விழாவை எடுத்த விளைவுதான் திமுக தோற்றது என்று சிலர்  வதந்தியைக் கிளப்பிட்டார்கள். அதே போல இப்போதும் நடக்கும் என்று சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இது எவ்வளவு வேதனையான விஷயம். இவ்விழாவை தான் அரசு எடுத்து நடத்த வில்லை. மக்களே சிறப்பாக நடத்திவிட்டார்கள். எங்கள் மன்னன் ராஜேந்திர சோழனுக்கு ஒரு மணி மண்டபமாவது கட்டி தரவேண்டும். மணிமண்டபம் கட்டி கொடுத்து இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளிவைக்க வேண்டும் இந்த அரசு. கரிகாலனுக்கும்,பென்னிக்குயிக்கும் மணி மண்டபம் அமைத்த தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா நம் மன்னனுக்கும் மணிமண்டம் அமைக்க உத்தரவிடுவார் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதிகளையே  தனது கட்டுபாட்டில் வைத்திருந்த தமிழ்ப் பேரரசன் ராஜேந்திர சோழன். தமிழரின் கலை,பண்பாடு,மத நல்லிணக்கம்,சமூக ஒற்றுமை,வீரம் என அனைத்தையும்  சோழர்கள் எவ்வாறு பேணிக் காத்தார்கள் என்பது வரலாறு தெரிவிக்கும் செய்தி. அதே நேரத்தில் பிற்கால சந்ததிகளுக்கும் சோழர்களின் வீர வரலாறு தெரியவேண்டும் என்று கருதி அம்மன்னர்கள் தமிழகம் உள்ளிட்ட தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல கோயிகளை கட்டிவைத்தும், கல்வெட்டுகள் பொறித்தும் வைத்தனர்.

இந்த நிலையில்,ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனை தமிழக அரசு  நிறைவேற்றவேண்டும் என்பதே சமூக, வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- எம்.திலீபன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement