வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (02/08/2016)

கடைசி தொடர்பு:17:12 (12/07/2018)

ஆனந்திபென் பட்டேலின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்...!

து 1987 ம் ஆண்டின் பிற்பகுதி,  மொஹினாபா கன்யா வித்யாலாயா பள்ளியின் முதல்வர், தம் பள்ளி மாணவர்களை ஒரு நாள், நர்மதை ஆற்றங்கரையில் இருக்கும், வதோதரா அருகே உள்ள நரேஷவர் என்னும் சுற்றுலா தலத்திற்கு அழைத்து செல்கிறார்.

மாணவிகள் உற்சாகமாக விளையாடுகிறார்கள். அதுவும் குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட சொல்லியா தர  வேண்டும்... பிள்ளைகளின் சேட்டையால் அந்த பகுதி முழுவதும் உற்சாகம் கொப்பளிக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களை, “தண்ணீரில் பார்த்து விளையாடுங்கள்...” என்று அதட்டுகிறார்கள். ஆனால், ஒரு பயனும் இல்லை. குழந்தைகள் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. அப்போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்கிறது. நர்மதை ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகள், ஆற்றில் மூழ்குகிறார்கள். விளையாடிக் கொண்டிருந்த பிற மாணவிகளிடையே கூச்சல். ஆசிரியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்போது, அந்தப் பள்ளியின் முதல்வர் சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, மூழ்கிய இரண்டு பிள்ளைகளின் தலைமுடியை பிடித்து, அவர்களை மீட்கிறார்.

அடுத்த நாள் பத்திரிகை செய்திகள், அந்தப் பள்ளி முதல்வரை கொண்டாடுகின்றன. தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கிறார். அவரின் அந்த வீரமிக்க செயலை பாராட்டி, வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மாநில அரசின் சிறப்பு விருதும் வழங்கப்படுகிறது. மாநிலமே அவரைக் கொண்டாடுகிறது. பாரதிய ஜனதா கட்சி, அவரை தங்கள் கட்சியில் இணையச் சொல்லி, அவரின் கணவர் மூலமாக அழைப்புவிடுக்கிறது. அவரும் அதே ஆண்டு பா.ஜ.கவில் இணைக்கிறார்.

கணிதத்திலும், அறிவியலிலும் திறமை வாய்ந்த அந்தப் பள்ளி முதல்வர்தான், பின் குஜராத்தின் முதல்வர் ஆன ஆனந்திபென் பட்டேல்.

 

ஆனந்திபென்னின் இளமை காலம்:

சுதந்திரக் கனல், தேசம் முழுவதும் பற்றி எரிந்த காலம் அது. தேசத்தின் பெரும் பகுதியினர் அப்போது காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அதற்கு அந்த எளிய விவசாயியும் விதிவிலக்கல்ல. அவர் விவசாயி மட்டுமல்ல, ஆசிரியரும் கூட.  காந்தி முன்மொழிந்த எளிய வாழ்வை, அந்த எளிய மனிதர் இறுகப் பற்றி வாழ்ந்தார். தம் உடைகளை தாமே நெய்து உடுத்தினார். தம் பிள்ளைகளும் அவ்வாறாகதான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தினார். அத்தகைய குடும்பத்தில்தான், ஆனந்திபென்  அந்த எளிய மனிதருக்கு எட்டாவது குழந்தையாக ,1941 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி பிறந்தார்.

கல்வியின் முக்கியத்துவத்தை அந்த குடும்பம் உணர்ந்தே இருந்தது. ஆனந்தியை படிக்கச் சொல்லி உற்சாகமூட்டியது. அவர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, அவருடன் சேர்ந்து படித்த பெண்கள் மொத்தம் மூன்று பேர்தான். படிப்பில் மட்டும் சுறுசுறுப்பாக இல்லாமல், விளையாட்டிலும் மிக திறமையானவராக இருந்தார். பள்ளி காலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விளையாட்டில் மாவட்ட அளவில் சாம்பியனாக இருந்தார். கல்லூரி காலத்திலும் இந்த சாதனைகள் தொடர்ந்தன. தனது விளையாட்டு சாதனைகளுக்காக ‘வீரபாலா’ என்ற விருதையும் அவர் பெற்றார்.  

1960 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தார். அந்த கல்லூரியில், முதலாமாண்டு அறிவியல் படிப்பு சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண். ஆனால், அது அவருக்கு தடையாக இருக்கவில்லை.  வெற்றிகரமாக இளங்கலை அறிவியலை முடித்தார்.  இவரின் இந்த ஆர்வத்தை பார்த்த அவரது கல்லூரிப் பேராசியர் ஒருவர், ஆனந்திபென்னை பிள்வாய் கிராமத்தில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு, 'கல்வியின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அவரும் அந்தப் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் ஏன் கல்விபயில வேண்டுமென்றும் தொடர்ந்து மக்களுடன் உரையாடினார்.  இதுதான் அவர் மேற்கொண்ட முதல் சமூக பணி.

இந்த சமயத்தில் ஆனந்திபென்னின் மூத்த சகோதரி சரிதாபென்,  தனது முப்பது வயதில் கணவரை இழந்தார். கணவனை இழந்த ஒரு பெண், எத்தகையை சமூக இன்னல்களை அந்த காலத்தில் எதிர் கொள்வாரோ, அத்தகைய அனைத்து இன்னல்களையும் சரிதா எதிர்கொண்டார். இது ஆனந்தியை மிகவும் பாதித்தது. இதுவே ஆனந்தியை,  பெண்களின் முன்னேற்றத்திற்காக அப்போது இயங்கி கொண்டிருந்த மகிளா விஹாஸ் குரூக்கில் இணைய வைக்க காரணமாக அமைந்தது.

இது குறித்து பின்பு ஆனந்தி, “கணவனை இழந்த பெண்கள் மோசமான சமூக அழுத்தங்களை அக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. நானே அதை நேரடியாக கண்டிருக்கிறேன். இதுதான், நான் மஹிளா விஹாஸில் சேர காரணமாக அமைந்தது. நான் அங்கு 40க்கும் மேற்பட்ட கைம்பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இருக்கிறேன்.” என்றார்.

பின்பு, 1962 ம் ஆண்டு மாஃபட்லால் பட்டேலுக்கும், ஆனந்திக்கும் திருமணம் ஆனது. நிச்சயம் அவரின் கல்வி தாகத்திற்கு, திருமணம் ஒரு தடையாக இருக்கவில்லை. அவர்,  திருமணத்திற்கு பின் அறிவியலில் முதுகலை பட்டத்தைப் பெற்றார். பின் கல்வியல் படிப்பிலும், தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மொஹினாபா கன்யா வித்யாலாயா பள்ளியில் ஆசிரியராய் பணியில் சேர்ந்தார். கற்பிப்பதில் மட்டும் அல்ல நிர்வாகத்திலும் ஆனந்தி சிறந்து விளங்கினார். அப்போது பள்ளியில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்கிறார், அவருடன் பணிபுரிந்த மீனாக்‌ஷி தேசாய்.

“ மாநில அளவில், பல்வேறு காரணங்களுக்காக அப்போது பந்த் நடைபெற்றது. அப்போது வழக்கம் போல் இயங்கிய எங்கள் பள்ளிக்கு வந்த ஒரு கூட்டம், 'பள்ளியை மூட வேண்டும், விடுமுறை அறிவிக்க வேண்டும்' என்றது. ஆனால், அந்த கூட்டத்தை லாவகமாக சமாளித்தார் ஆனந்தி. 'பள்ளி துவங்கிவிட்டது, இப்போது மாணவர்களை வீடுகளுக்கு திரும்பச் சொல்வது சரியாக இருக்காது. அது மட்டுமல்ல, மாணவர்கள் வீடு திரும்பும்போது ஏதாவது அசாம்பாவிதம் நேர்ந்து, பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டால், அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது' என்றார்.  இதற்கு பதில் சொல்ல முடியாத அந்தக் கூட்டம், திரும்பிச் சென்றது.  எப்போதும் அப்படிதான், ஆனந்தி தாம் நம்பிய விஷயங்களை தைரியமாக வெளியே சொல்வதற்கு அஞ்சுபவராக என்றுமே இருந்ததில்லை” என்கிறார் மீனாக்‌ஷி.

ஆனந்தியின் அரசியல் நுழைவு:

 

நாம் முதல் பத்தியில் பார்த்தது போல. ஆனந்தியின் அரசியல் நுழைவு 1987 ம் ஆண்டுதான் நேரிட்டது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1985 - 87 வரையிலான காலகட்டத்தில், வட குஜராத் பகுதிகளை மோசமான வறட்சி கவ்வியது. எங்கும் பசி, பஞ்சம், பட்டினி. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு நாட்கள் 'நயாய் யாத்ரா'வில் ஆனந்தி பங்கேற்றார். அப்போது சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுடன் அவர் உரையாடியது, அவருக்கு சமூகம், அரசியல் குறித்த பரந்துப்பட்ட பார்வையை திறந்துவிட்டது. அவரே பின்பு, “நான் தீவிரமாக அரசியலில் இயங்க, அந்த யாத்ராவும் ஒரு காரணம். அரசியல் மூலமாக மட்டும்தான், ஏழ்மையான மக்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று அந்த யாத்ரா எனக்கு உணர்த்தியது” என்றார்.   இதனைத் தொடர்ந்து, ஆனந்தி, பாஜக பெண்கள் அணிக்கான தலைவராகிறார்.

இதுபோல இன்னொரு யாத்ராதான், ஆன்ந்தியை அரசியலில் முன்வரிசைக்கு அழைத்து வந்தது. 1992 ம் ஆண்டு, ஸ்ரீநகர் லால் சவுக்கில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற பி.ஜே.பி திட்டமிடுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார்கள், “லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்...”என்கிறார்கள். ஆனால், எதற்கும் ஆனந்தி அஞ்சவில்லை. தையரியமாக நரேந்திர மோடி மற்றும் முரளி மனோகர் ஜோஷியுடன், அந்த ஊர்வலத்தில் பங்கேற்று, இந்திய தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

இந்த நிகழ்வு இந்திய அளவில் அவருக்கு ஒரு பிரபல்யத்தை தேடித் தருகிறது. இது அவர் ராஜ்ய சபா எம்.பி ஆகவும் காரணம் ஆகிறது. தனது கட்சி கேட்டுக் கொண்டதன் பெயரில், 1998 ம் ஆண்டு, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மண்டல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்; கேஷ்பாய் பட்டேல் அமைச்சரவையில்  கல்வி அமைச்சராகவும் ஆகிறார்.

இந்த புள்ளியிலிருந்துதான், ஆனந்தி குஜராத் முதல்வர் ஆனதற்கான அரசியல் பயணம் துவங்குகிறது.

தம் முடிவுகளில் தீர்க்கமானவர்:

2002 ம் ஆண்டு, பதான் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். பின் அதே தொகுதியில் 2007 ம் ஆண்டும் போட்டியிட்டு வெல்கிறார்.  2008 ம் ஆண்டு, அவர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்,  ஒரு தலித் மாணவியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக 2012 ம் ஆண்டு, கத்லோடியா தொகுதிக்கு மாறுகிறார். அங்கேயும் வெற்றி பெறுகிறார். குஜராத் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பெண் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெறுவது முதல் முறை என்ற சாதனையையும் படைக்கிறார்.

மோடி அமைச்சரவையில் ஆனந்தி, பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்து உள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட பணியில் சிறப்பாக பணியாற்றி, மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். அவர், பதான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்தான்,  பதானில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. நர்மதை அணையின் குறுக்கே, 100 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படுகின்றன; 700 கி.மீ நீளத்துக்கு சாலைகள் போடப்படுகின்றன.
 
இந்த நிர்வாக திறமைதான் 2014 ம் ஆண்டு, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றபோது, குஜராத்தின் முதல்வர் பதவியை அவருக்கு பெற்றுத் தந்தது.
 
இதையெல்லாம் கடந்து, 'ஆனந்தி சுதந்திரமாக யோசிக்கக் கூடியவர், பிறர் தரும் அழுத்தங்களுக்காக தாம் சரியென்று நினைத்து எடுத்த முடிவுகளை மாற்றாதவர்' என்கிறார் ஆனந்தியிடமிருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த  மாஃபட்லால் பட்டேல்.

“அப்போது குஜராத பா.ஜ.க தலைவராக இருந்தவர்  ருபாலா. அந்த சமயத்தில் அகமதாபாத் நகராட்சி தேர்தலில், தனக்கு வேண்டபட்டவருக்கு ‘சீட்’ அளிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார். ஆனால், ஆனந்தி அவர் பரிந்துரைத்த யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. உண்மையாக கட்சிக்கு யார் உழைத்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தார். அந்த அளவுக்கு தம் முடிவுகளில் தீர்க்கமானவர் ஆனந்தி...”என்கிறார் மாஃபட்லால்.

" அவர் எப்போதும் அவசரப்பட்டு முடிவு எடுக்கமாட்டார். ஆனால், அவர் ஒரு முறை முடிவு எடுத்துவிட்டார் என்றால், அதிலிருந்து கிஞ்சித்தும் பின் வாங்க மாட்டார்" என்கிறார் அவரின் சகா பாய்லால் பட்டேல்.

இந்த விஷயத்தோடு அவரின் ராஜினாமா முடிவையும் தொடர்புபடுத்தி நாம் பார்க்கலாம். ஆம். இது ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் தம் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டார் என்றும், இது குறித்து பல முறை மோடியிடமும் தெரிவித்தார் என்றும் சொல்கிறார்கள் பா.ஜ.க வின் தலைமை நிர்வாகிகள்.

ஆனந்தி பென்னின் வீழ்ச்சி:

ஒரு முக்கியமான தேசிய ஆங்கில நாளிதழ், 'சாதனைகளை எல்லாம் கடந்து, ஆனந்திபென் எப்போதும் ஒரு பள்ளி முதல்வர் மனநிலையில் இருந்தார், அதுதான் அவரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது' என்கிறது. அதாவது, அவரது வளர்ச்சிக்கு என்ன காரணம் கூறப்பட்டதோ... அதே காரணங்கள்தான் அவரது வீழ்ச்சிக்கும் கூறப்படுகிறது என்பதுதான் நகைமுரண்.

மகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக நில ஒதுக்கீடு:

 

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்,  'ஆனந்திபென்னின் மகள் அனர் பட்டேலின் தொழில் கூட்டாளிக்கு சட்டத்திற்கு புறம்பாக 422 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது' என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது ஒரு சதுர மீட்டரின் அரசாங்க சந்தை மதிப்பு ரூபாய் 180 ஆக இருக்கும் போது, சதுர மீட்டர் ரூ 15க்கு அந்த நிலம்  அனரின் தொழில் பங்குதாரருக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால், அதே நேரம் அதேப் பகுதியில் உள்ள இன்னொரு நிலம், ஒரு தன்னார்வ அமைப்புக்கு சதுர மீட்டர் ரூபாய் 671 க்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையானது.  இதுதான் நேர்மையானவர் என்ற அவர் பிம்பத்தில் விழுந்த முதல் களங்கம்.

 

படிதர் இடஒதுக்கீடு போராட்டம்:


படிதர் இடஒதுக்கீடு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ஏப்ரல் 17 ம் தேதி, ஆனந்திபென், நரேந்திர  மோடியின் சொந்த ஊரான மெஹ்சேனா பகுதியில், ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு கூடி இருந்த மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரும், நிச்சயம் ஆனந்தி இந்த இடஒதுக்கீடு பற்றி விரிவாக பேசுவார் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் ஆனந்தி, மிகச்சுருக்கமாக, “இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடக்கத்தான் செய்யும்... ஆனால், நான் மக்களுக்கு சேவை செய்வதை நிறுத்த மாட்டேன்..” என்கிறார்.

ஆனந்தி செயல்வீரர்தான், தேர்ந்த நிர்வாகிதான். ஆனால், ஒரு இக்கட்டான சூழலை கையாள, இந்தியா போன்ற ஒரு நாட்டில், அரசியல்வாதி போல் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், ஆனந்திக்கு அப்படி நடந்துகொள்ள தெரியவில்லை.  74 வயது முதலமைச்சர், சூழ்நிலைகளை கையாள்வதில் பள்ளியின் முதல்வராகவே இருந்தார், என்கிறது அந்த ஆங்கில நாளிதழ்.

துருதிரஷ்டமாக, அவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதிலிருந்தே சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை. அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தீவிரமாக படிதர்கள் போராட்டம் துவங்கியது. அதை அவர் சரியாக கையாளாமல் விட்டது, ஆனந்தி இத்தனை காலமாக தக்கவைத்திருந்த சிறந்த நிர்வாகி என்ற பெயர் பாழாக காரணமாக அமைந்தது. அது, அவர் பிம்பம் மட்டும் சரிய காரணமாக அமையவில்லை, சென்ற ஆண்டு நவம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.கவின் படுதோல்விக்கும் அதுவே காரணமாக அமைந்தது.  

உனா சம்பவம்:

ஆனந்தியின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுவது  உனா சம்பவம். ஜூலை 11 ம் தேதி, பசுவைக் கொன்றதாக கூறி, உனா என்னும் இடத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 7 பேர் மோசமாக தாக்கப்பட்டனர். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையானது. நான்கு பேர் தாக்கப்பட்டதற்கு  கண்டனம் தெரிவித்து, 23 வயது இளைஞர் யோகேஷ் சரிகடா பூச்சி மருந்து குடித்தார். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள் , “இனி நாங்கள் இறந்த பசுவின் சடலங்களை கையாளமாட்டோம்...” என்றார்கள். அதுமட்டுமல்லாமல், அம்மக்கள் மிக பெரிய ஊர்வலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைத்தனர். அதில் ஏறத்தாழ 15,000 பேர் கலந்துகொண்டனர். “ஆளும் பாஜக அரசு, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை காக்க தவறிவிட்டது...” என்ற அம்மகளின் கோஷம் அஹமதாபாத் வீதிகளில் எதிரொலித்து விண்ணைப் பிளந்தது.  

 

இந்த சம்பவத்தை ஆனந்தி சரியாக கையாளவில்லை.  நிச்சயம் இது குஜராத் தேர்தலிலும், உத்தரபிரதேச தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று உள்ளூர் பா.ஜ.க தலைவர்களே பேசத் துவங்கினர்.

“ஆனந்தி அரசியலில்  நுழைந்தது முதலே, அவர் நரேந்திர மோடியின் வழிக்காட்டலின் பேரில்தான் செயல்பட்டு இருக்கிறார். அவருடைய முப்பது வருட அரசியல் வரலாற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான், சுயேச்சையாக செயல்படுகிறார். அவரால், இந்த இக்கட்டான சூழ்நிலைகளை தன்னிச்சையாக கையாள முடியவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக இது அவருடைய பின்னடைவாக மட்டுமல்லாமல், குஜராத்தில் பா. ஜ. க வின் பின்னடைவாக ஆனது...” என்கிறார் ஒரு குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி.

ஆனந்திபென் தன்னுடைய ராஜினாமாவிற்கு, தன் வயதை ஒரு காரணமாக கூறினாலும், ஆனந்தியின் ஆதரவாளர்கள், " அமித் ஷாதான், ஆனந்தி இந்த முடிவெடுக்க காரணம்" என்கிறார்கள்.  “அமித் ஷா, மாநில நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டார், மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், மாநில பிரச்னைகளை ஆனந்தியிடம் கலந்து ஆலோசிக்காமல், அமித்ஷாவிடம் கலந்து ஆலோசித்தனர். இது ஆனந்திக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. இதுதான் ஆனந்தி இந்த முடிவெடுக்க காரணம்..” என்கிறார்கள்.

ஆனால், ஆனந்தியின் எதிராளிகளால் கூட குஜராத்தில் புரட்சிகரமான அவரது சாதனைகளை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்தான் அரசுத் துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். உள்ளாட்சித் துறையில் 50 சதவீத ஒதுக்கீட்டை வழங்கினார். கல்வி சார்ந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

துரதிருஷ்டமாக இது எதுவும் அவருக்கு உதவவில்லை. அடுத்த ஆண்டு வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.க விற்கு  கடந்த கால துயரங்களை நினைவுபடுத்தாத ஒரு முகம் தேவைப்படுகிறது. அந்த தேவைதான், ஆனந்தியை வீழ்த்தி இருக்கிறது.

- மு. நியாஸ் அகமது

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்