வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (03/08/2016)

கடைசி தொடர்பு:15:37 (04/08/2016)

'தங்கள் மகள்கள் துறவியானால் பெற்றோர் பெருமைப்பட வேண்டாமா?' - ஈஷாவை ஆதரிக்கும் மா மதி, மா மாயு ( வீடியோ)

 

டந்த 1 ம் தேதி காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கோவை, வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர், ஈஷா நிறுவனம் தங்களது இரு மகள்களை (மா மதி-கீதா, மா மாயு-லதா) மொட்டை அடித்து, காவி உடை உடுத்தி சாமியார் ஆக்கி விட்டதாகக் கூறியும், சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர், ஈஷா நிர்வாகம் மீது புகார் கூறி, மகள்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர், "எங்களது மகள்களை மூளைச்சலவை செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஈஷா மையம் தெரிவித்துக்கொண்டிருக்கிறது. எங்களது மகள்கள் துறவறத்திற்கு செல்ல நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை. எங்களது மகள்களை சந்தித்துப் பேச அனுமதி மறுக்கிறார்கள். மகள்களை போலீசார் மீட்டுத்தருவார்கள் என நம்புகிறோம். இல்லாவிட்டால், வரும் 5 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். மகள்களை மீட்டுத்தரக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஒரு வாரத்திற்குள் சந்தித்துப் பேச நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். செய்வார்கள் என நம்புகிறேன்" என்றனர். இது தொடர்பாக விகடனுக்கு அவர்கள்  அளித்த பேட்டியை நம் தளத்தில் பதிந்திருந்தோம். அதற்கு அந்த சமயம் கிடைத்த ஈஷா தரப்பு விளக்கத்தையும்  பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் விகடனைத் தொடர்பு கொண்ட ஈஷா நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் விளக்கத்தைப் பதிவு செய்தார்கள். அது அப்படியே...  

'புகாரில் இம்மியளவும் உண்மையில்லை!’

ஈஷா நிர்வாகம் சார்பில் விகடனுக்கு சுவாமி ஏகா என்பவர் அனுப்பிய கடிதத்தில், "மா மதி (கீதா), மா மாயு (லதா) ஆகியோரின் பெற்றோர் எம் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் இருவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கிறார்கள். யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. அவர்களது பெற்றோர் கூறியுள்ள குற்றச்சாட்டில் இம்மியளவும் உண்மை இல்லை. ஈஷா அறக்கட்டளை பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டினை வன்மையாக கண்டிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

'எங்கள் பெற்றோரின் புகார் வேடிக்கையாக இருக்கிறது!'

 கடிதத்தோடு மா மதி (கீதா), மா மாயு (லதா)  ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் இருந்து பேசும் வீடியோ காட்சி ஒன்றையும் ஈஷா நிர்வாகத்தினர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர். அதில் அவர்கள், "நாங்கள் இங்கே வந்து 7 வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு புகார் கூறியுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. துறவறப் பாதையை நான் ஏன் தீர்மானித்தேன் என்பதை தெளிவாக பெற்றோரிடம் எடுத்துச் சொல்லித்தான் இந்தப் பாதையை தேர்வு செய்தேன். விவேகானந்தர், புத்தர், இயேசு எல்லாம் தன் அப்பா, தன் அம்மா என பார்த்திருந்தால் இந்த மாதிரியான வாய்ப்பு கிடைத்திருக்குமா? இறந்து போன சந்நியாசிகளைத்தான் அங்கீகரிப்பீர்களா? 

துறவறம் என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. யோகாவில் இருப்பது பெரிய விஷயம் இல்லை. இங்கே நான் வந்த போது, 'நீங்கள் ஏன் வெளியே போய் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது' என்றுதான் கேட்டார்கள். துறவறம் என்பதை இவர்கள் ஊக்குவிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்  என்பதை பார்த்த பின்னர்தான் துறவறம் கொடுத்தார்கள். அதனால் இங்கே வருபவர்களுக்கு எல்லாம் இப்படி செய்து விடுவார்கள், என யாரும் பயப்பட வேண்டாம். ஒரு நாள் யோகா செய்தாலே அத்தனை மாற்றம் நடக்கிறது. வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இங்கே, ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். அதில் 200 பேர்தான் இந்தப் பாதையில் இருக்கிறார்கள்.

'சுய விருப்பத்தில்தான் இங்கு இருக்கிறோம்'
 

 ஈஷாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே பெற்றோர்தான். இங்கு சேவையாற்றுவதும், சந்நியாசியாக ஈஷாவில் இருக்கிறேன் என சொல்வதும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இங்கே ரொம்ப சந்தோஷமா வாழ்கிறோம். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நாங்கள் இங்கே இல்லை. சுய விருப்பத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 'எங்கள்  பெண்கள்  துறவியாக இருக்கிறார்கள்' என்பதை என் பெற்றோர் பெருமையாக நினைக்கவில்லை. அதுதான் பிரச்னை. என்றைக்கு அவர்கள் பெண்கள் சரியான பாதையைத் தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என  உணர்கிறார்களோ, அன்றுதான்  அவர்கள் பெருமைப்படுவாங்க. அந்த நாளுக்காக நாங்க காத்திருக்கிறோம்" என சொல்லி இருந்தனர்.

இதற்கிடையே இன்று காலை விசாரணைக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இரு பெண்களையும் ஈஷா நிர்வாகத்தினர் அழைத்து வந்திருந்தனர். ஆனால் இந்த வருகை குறித்த தகவல் மீடியாக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

'இதை போலீஸ் விசாரிக்கப்போவதில்லை'

இது தொடர்பாக விசாரித்து வரும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசினோம். நிச்சயம் பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசினார். "இந்த புகார் தொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசினோம். இருவரும் பேசினால் இந்த பிரச்னை தீரும். ஆனால் இதில் நாங்கள் தலையிட முடியாது. இது குடும்ப பிரச்னை. நாங்கள் தலையிட எங்களுக்கு உரிமையும் இல்லை. அப்பா, அம்மாவுக்கு பொண்ணுங்க மேல பாசம் இருந்தா, பொண்ணுங்களுக்கு அப்பா, அம்மா மேல பாசம் இருந்தா இந்த பிரச்னை முடிஞ்சிரும். இந்த வழக்கை விசாரணைக்கே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதும் இல்லை" என்றார் தெளிவாக.

- ச.ஜெ.ரவி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்